பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

685

இந்தியா

1947-48-ல் ரூ. 1069-18 இலட்சமாயிருந்தது, 195152-ல் ரூ. 41 இலட்சமாகக் குறைந்துள்ளது. நிதிக்குழுவினுடைய கருத்துக்களை ஏற்று, மத்திய அரசாங்கம் இராச்சியங்கட்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புகையிலை, தீப்பெட்டி, தாவரநெய் முதலிய தாவரச் செய்பொருள்கள் ஆகியவற்றுக்கு வசூல் செய்யும் கலால் வரி வருமானத்தில் 40% பிரித்துக் கொடுக்க ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இராச்சியங்கள் செலவில் பெரும்பகுதி அபிவிருத்தி இனங்களினதாகும். 1953-54-ல் ஏ இராச்சியங்களின் மொத்தச் செலவு மதிப்பு : ரூ. 362.93 கோடி. பீ இராச்சியங்களின் மொத்தச்செலவு மதிப்பு : ரூ.118.62 கோடி, இதில், விஞ்ஞான இலாகா, கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கூட்டுறவு, கைத்தொழில்கள், சிற்றூர் வளர்ச்சி, தொழிலாளர் நலம், விமானப் போக்குவரத்து, ரேடியோ, மின்சாரம், சமூகவளர்ச்சித் திட்டங்கள் ஆகிய அபிவிருத்தி இனங்களுக்காகவுள்ள செலவு ஏ இராச்சியங்களின் மொத்தச்செலவில் ரூ. 141.75 கோடி. அதாவது 39.1%. பீ இராச்சியங்களின் மொத்தச் செலவில் ரூ.50.44 கோடி அதாவது 42.5% ஆகும். வரி வசூல் நிருவாகத்துக்கும், நீதி பரிபாலனம், சிறை, போலீஸ் முதலிய அதிகார நிருவாகத்துக்கும் செலவு விகிதம் ஏ இராச்சியங்களில் முறையே 9.1%, 24%. பீ இராச்சியங்களில் முறையே 9.1%, 19% ஆகும்.

இராச்சியங்கள் இந்தச் செலவுகள் தவிர, ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள், நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து, கைத்தொழில் வளர்ச்சி முதலிய ஐந்தாண்டுத் திட்டப் பகுதிகளுக்காக முதலீட்டுச் செலவுகளும் செய்கின்றன. 1951-52-ல் ஏ இராச்சியங்களின் மொத்த முதலீடு ரூ. 79.69 கோடி ; பீ இராச்சியங்களில் ரூ. 20-60 கோடி. 1953-54-ல் இவை முறையே ரூ. 126-78 கோடியும், ரூ. 27-96 கோடியுமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1952-53 முதல் அஜ்மீர், குடகு, டெல்லி, இமாசலப் பிரதேசம், விந்தியப்பிரதேசம், போபால் ஆகிய ஆறு சீ இராச்சியங்கள் தனியாக வரி வருமான வரவு செலவுத் திட்டம் தயார் செய்கின்றன. மீதியுள்ள இராச்சியங்களான கட்சு, பிலாஸ்பூர், மணிப்பூர், திரிபுரா ஆகியவற்றின் வரவுசெலவுகள் மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.

டெல்லி தவிர, ஏனைய சீ இராச்சியங்களில் வரி வருமான விகிதமானது வரியில்லாத வருமான விகிதத்தை விடக் குறைவாயிருக்கிறது. வரியல்லாத வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் உதவிநிதியேயாம்.

அரசாங்கக் கடன் : இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியதற்கு முந்திய ஆண்டில் இந்திய அரசாங்கக் கடன் ரூ. 1,205.76 கோடி. இதில் இந்தியாவில் வாங்கியது ரூ. 736.64. அயல்நாட்டில் வாங்கியது ரூ. 469.12 கோடி. யுத்தகாலத்தில் வியாபாரம் வளர்ந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக இந்திய அரசாங்கம் யுத்தச் செலவுகள் செய்ததாலும், பிரிட்டனுக்கு 1939-ல் தரவேண்டிய கடன் சவரன் 4,700 கோடியானது யுத்த முடிவில் 700 கோடியாகக் குறைந்தது. அதே சமயத்தில் வெளிநாட்டுக் கடனை உள்நாட்டுக்கடனாக மாற்றியதால் இந்திய ரூபாய்க் கடன் அந்த அளவுக்கு மிகுந்தது. ஆகவே மத்திய அரசாங்கம் 1952-53 இறுதியில் தரவேண்டிய வட்டிக்கடன் மொத்தம் ரூ. 2,645-70 கோடி. இதில் இந்திய ரூபாய்க் கடன் ரூ. 2,501.73 கோடி. வெளிநாட்டுக் கடன் (டாலர் கடன் உட்பட) ரூ. 143.97 கோடி.

ஏ இராச்சியங்களின் கடன் 1952-53 இறுதியில் மொத்தம் ரூ. 399.86 கோடி. இதில் நிலையான கடன் ரூ. 78.36 கோடி; நிலையாக் கடன் (Floating Debt) ரூ. 3:53 கோடி; மத்திய அரசாங்கத்திடம் வாங்கியவை ரூ. 279.38 கோடி; இனப்படுத்தாத கடன் (Unfunded Debt) ரூ. 36.79 கோடி. இப்புள்ளிகள் திட்டமானவை யல்ல.

1952-53 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வட்டிக்கடன், முந்திய ஆண்டில் இருந்ததைவிட ரூ. 34 கோடி. மிகுந்துள்ளது. ஏ இராச்சியங்களின் கடன் அந்த ஆண்டில் ரூ. 77 கோடி மிகுந்துள்ளது.

நாணயச் செலாவணி

இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி துவங்கியபொழுது இந்தியாவில் சுமார் 994 வகை நாணயங்கள் பழக்கத்திலிருந்தன. அவை எடையிலும் மாற்றிலும் வேறுபட்டிருநதனவாதலால், வாணிகத்துக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. கம்பெனியார் அக் குறைகளை நீக்கக் கம்பெனியின் குறியிட்டவையும், குறிப்பிட்ட மாற்றும் எடையும் பரஸ்பர மதிப்பும் விகிதமும் உள்ளவையுமான தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டு, இரட்டை உலோக நாணய முறையை (Bimetallism) ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இந்த இரண்டு உலோகங்களின் இயல்பான மதிப்பு (Intrinsic value) அடிக்கடி மாறவே, சட்டப்படி திட்டம் செய்த மதிப்பும் விகிதமும் மாறின. ஆகையால் 1818-ல் வெள்ளிப் பிரமாண நாணயத்திட்டம் (Silver Standard) ஏற்படுத்துவதென்று முடிவு செய்து, தங்க நாணயத்திற்குப் பதிலாக 180 கிரெயின் எடையும், 11/12 மாற்றும் உள்ள வெள்ளி ரூபாய்களை வெளியீட்டனர். ஆயினும் பழக்கத்தில் இருந்துவந்த தங்க வராகன்கள், வராகன் ஒன்றிற்கு 15 ரூபாய் வீதம் செலாவணியில் இருந்துவந்தன. 1835ஆம் ஆண்டு நாணயச் சட்டப்படி (Coinage Act) இந்த ரூபாய், இந்தியாவில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் திட்ட நாணயமாகவும் (Standard Coin), சட்டச் செலாவணி (Legal tender) நாணயமாகவும் வெளியிடப்பட்டது. வெள்ளியைத் தடையின்றி யாவரும் ரூபாய் நாணயமாக அடித்துக்கொள்ளும் உரிமையும் (Open mint for silver) கொடுக்கப்பட்டன. ஆனால் தங்க நாணயங்களும் செலாவணியில் இருந்து வந்தன. 1870ஆம் ஆண்டிலிருந்து வெள்ளியின் விலை குறையத் தொடங்கிற்று. ஆண்டுதோறும் இந்தியாவில் குவிந்த வெள்ளி, ரூபாயாக மாற்றப்பட்டது. பணப்பெருக்கெடுத்து விலைவாசிகள் ஏறின. வெள்ளியின் மதிப்புக் குறையவே, ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங்காக இருந்த ரூபாய்-பவுண்டு நாணயமாற்று விகிதம் ஒரு ரூபாய்க்கு 1 ஷி. 2 பெ. ஆயிற்று. இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தவேண்டிய இனங்களுக்கு முன்னைவீட அதிக ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியதாயிற்று. தங்க நாணயத் திட்டமுள்ள (Gold Standard) நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்களுக்கு அதிக ரூபாய்களும், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளமும் கொடுக்கவேண்டி வந்தது. 1892-ல் ஹெர்ஷல் (Herschell) தலைமையில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இக் கமிட்டியின் சிபார்சுப்படி 1893-ல் தங்கசாலைகளில் வெள்ளியைக் கொடுத்துத் தடையின்றி நாணயமாக மாற்றும் உரிமை ரத்து செய்யப்பட்டது. ரூபாய் திட்ட நாணய அந்தஸ்தை இழந்து, சட்டச்