பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

687

இந்தியா

டது. இக்கமிஷன், இந்தியாவில் தங்க நாணய இனமாற்றுத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், தங்க நாணயச் செலாவணி யில்லாமல் தங்கத் திட்டம் ஏற்படுத்த வேண்டுமென்றும், 1ஷி. 6 பெ. விகிதத்தில் ரூபாயின் மதிப்பை நாட்ட வேண்டுமென்றும், ரிசர்வ் பாங்கு என்ற பெயரில் ஒரு மத்திய பாங்கு ஸ்தாபிக்க வேண்டுமென்றும், இந்தப் பாங்கு யாதொரு தடையுமின்றி 400 அவுன்ஸுக்குக் குறையாமல் குறிப்பிட்ட விலைக்குத் தங்கம் வாங்கவும் விற்கவும் வேண்டுமென்றும், நாட்டில் ரூபாயும் நோட்டுகளுமே செலாவணியில் இருக்க வேண்டுமென்றும் கூறியது. இப்புதுத் திட்டத்துக்குத் தங்கக்கட்டி நாணயத் திட்டம் (Gold Bullion Standard) என்று பெயர். அரசாங்கத்தாரால் மேற்படி சிபார்சுகள் ஏற்கப்பட்டு, 1927ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் பிறந்தது. நாட்டில் வலுத்த எதிர்ப்பு இருந்தும், 1ஷி . 4 பெ. விகிதமே நாட்டுக்கு நலன் பயக்குமென்ற கிளர்ச்சியிருந்தும், ரூபாய்க்கு 1ஷி. 6 பெ. மதிப்பிடப்பட்டது. தோலா ரூ.21-3-10க்குத் தங்கம் 40 தோலாக் கட்டிகளாக வரையின்றி வாங்குவதாகவும், இந்த விலைக்கு 400 அவுன்ஸுக்குக் குறையாமல் தங்கக்கட்டிகள் அயல்நாடுகளுக்கு அனுப்பி விற்பதாகவும் அல்லது சர்க்காரின் நோக்கம்போல் இங்கிலாந்தில் ஸ்டர்லிங்கு கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இம் மாதிரி, தங்கக்கட்டி நாணயத்திட்டம் 1931 செப்டம்பர்வரை அமலில் இருந்தது. 1931. செப்டம்பர் 20 பிரிட்டனில் தங்க நாணயத் திட்டம் கைவிடப்பட்டு, ஸ்டர்லிங்கு நாணயத் திட்டம் ஏற்பட்டது. இந்தியாவும் தங்கக்கட்டி நாணயத் திட்டத்தைக் கைவிட்டது. 1 ஷி.6 பெ. வீதம் ரூபாய்க்கும் ஸ்டர்லிங் குக்கும் (ஸ்டர்லிங்கு நோட்டு) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இப்புதிய திட்டத்திற்கு ஸ்டர்லிங்கு மாற்றுத் திட்ட நாணயமுறை (Sterling Exchange Standard) என்று பெயர்.

இரண்டாவது உலகயுத்தத்தின் பயனாக நாட்டில் 1939 முதல் பணப்பெருக்கம் அதிகரித்தது. விலைவாசிகள் உயர்ந்தன. போர்ச் செலவுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்தியாவுக்கு இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட ஸ்டர்லிங்கின் ஈட்டின்பேரில் இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் ஏராளமாக அச்சடிக்கப்பட்டன. பணவீக்கத்தைக் குறைக்க அரசாங்கத்தார் பல முறைகளைக் கையாண்டனர். யுத்தத்தின் பயனாகப் பலவகை நாணய மாற்றுக் கட்டுப்பாடுகளும் (Exchange Control) ஏற்பட்டன. பிரிட்டிஷ் சாம்ராச்சிய டாலர் சேமிப்பு நிதியில் (Empire Dollar Pool) இந்தியா ஓர் அங்கமாகச் சேர்ந்தது. 1945-ல் உலக நாணய நிதியிலும் (International Monetary Fund) சேர்ந்தது. 1947 ஏப்ரலில் ரூபாய்க்கும் ஸ்டர்லிங்குக்கும் இருந்த தொடர்பு அகற்றப்பட்டது. ரூபாய்க்கும் வேறு நாடுகளின் நாணயங்களுக்கும் நேர் உறவு ஏற்படுத்தப்பட்டது. ஒரு ரூபாய் 4.1 சொச்சம் கிரெயின் தங்கத்துக்கும், 3.30 சொச்சம் ரூபாய்கள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கும் சமம் என்றும் நிருணயம் செய்யப்பட்டது. ரூபாய்க்கும் ஸ்டர்லிங்குக்கும் 1ஷி. 6 பெ.விகிதமே நடைமுறையில் இருந்து வருகிறது.

1949 செப்டம்பர் 18ஆம் தேதி ஸ்டர்லிங்கின் மதிப்பைப் பிரிட்டன் குறைத்தது. இந்தியாவும் அதே அளவுக்கு ரூபாயின் மதிப்பைக் குறைத்தது. தற்சமயம் டாலர் ரூபாய் மதிப்புச் சமன் (Par value) 1 டாலர் = 4.7 சொச்சம் ரூபாய்கள். அதாவது ஒரு டாலருக்கு ரூ.4-12-4 4/21 ரூபாய் ஸ்டர்லிங்கு விகிதம் 1 ஷி. 6பெ. பாகிஸ்தான் தனது ரூபாயின் மதிப்பைக் குறைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் 144 இந்திய ரூபாய் 100 பாகிஸ்தான் ரூபாய்கள் சமமாயின.

காகித நாணயம்: 1861க்கு முன் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களிலிருந்த மாகாண பாங்குகளுக்குக் காகித நாணயம் அல்லது நோட்டுக்கள் அச்சடிக்க உரிமை கொடுக்கப்பட்டு, இந்த நோட்டுக்கள் மேற்கண்ட நகரங்களில் மாத்திரமே செலாவணியிலிருந்தன. அச்சடிக்கக்கூடிய நோட்டுக்களின் மதிப்பு வரம்பும் ஒதுக்கு நிதித் (Reserve) தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தன. 1861-ல் தான் முதன் முதலாக நோட்டுக்கள் வெளியிடுவது அரசாங்கத்தாரின் ஏக உரிமை (Monopoly) யாகியது. அரசாங்கத்தாரின் பத்திரங்களை ஆதாரமாகக்கொண்டு, இவ்வளவு மதிப்புள்ள நோட்டுக்கள் தான் வெளியிடலாமென்றும், அதற்கு மேல் வெளியிடும் நோட்டுக்களுக்கு ஆதாரமாக நாணயங்களும், தங்கம் வெள்ளிக்கட்டிகளும் வைக்க வேண்டுமென்ற முறையில் காகித நாணயங்கள் முதலில் வெளியிடப்பட்டன. கல்கத்தா, பம்பாய், சென்னை என்னுமிடங்களை முக்கியமாக வைத்து, நாட்டை மூன்று வட்டங்களாகப் பிரித்து, அந்தந்த நகரங்களில் வெளியிடப்படும் நோட்டுக்கள் அந்தந்த வட்டங்களில் தான் சட்டப்படி செலாவணியிலிருந்தன. 1910க்குள் ரங்கூன், கராச்சி, கான்பூர், லாகூர் என்று மேலும் நான்கு வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. 10, 20, 50, 100, 500, 1000, 5000 ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்தன. 1910லிருந்து 1931-32க்குள் நாளடைவில் எவ்வட்டத்தைச் சேர்ந்த நோட்டுக்களும் தேசம் முழுவதிலும் செலாவணிக்குரியனவாகச் செய்யப்பட்டன. மேலும் 1905லிருந்து ஸ்டர்லிங்குப் பத்திரங்களின் ஈட்டின் பேரிலும் நோட்டுக்கள் வெளியிடலாமென்றும் ஏற்பட்டது.

முதல் உலகயுத்தம் துவங்கினவுடன் நாட்டில் திகில் ஏற்பட்டு, நோட்டுக்களை நாணயமாகமாற்ற மக்கள் முன் வந்தனர். ஆனால் நாளடைவில் மக்களிடையே நம்பிக்கை உண்டாகி அமைதியேற்பட்டது. யுத்தகாலத்தில் பணத் தேவை மிகுந்து, நோட்டுக்கள் வெகுவாக அதிகரிக்கப் பட்டன. 2½ ரூ.1 ரூ. நோட்டுக்களும் வெளிவந்தன.

1920-ல் இயற்றப்பட்ட சட்டப்படி நோட்டுக்கள், விகித சம ஒதுக்கு நிதி முறையில் (Proportional Reserve System) வெளியிடப்பட்டன. இதன்படி வெளியிடப்படும் நோட்டுக்களின் மதிப்பில் 50% ரூபாயாகவோ, சவரன்களாகவோ, தங்கம், வெள்ளிக்கட்டிகளாகவோ ஈடு இருக்கவேண்டும். ஆனால் அவ்வப் பொழுது வியாபாரப் பெருக்கம் ஏற்படும் காலங்களில் தேவையான செலாவணிக்கு உள்நாட்டு உண்டியல் பேரில் 5 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள நோட்டுக்கள் வெளியிடலாம் என்று ஏற்பாடாயிற்று.

ஹில்ட்டன் யங் கமிஷன் சிபார்சுப்படி 1927-ல் பிறப்பிக்கப்பட்ட நாணயச் சட்டப்படி வெளியிடப்படும் நோட்டுக்களுக்கு ஆதாரமாக 40% தங்கம், தங்க நாணயங்கள் அல்லது ஸ்டர்லிங்கு பத்திரங்களாகவும், மற்ற 60%க்கு ரூபாய் நாணயங்களும், இந்திய சர்க்கார் பத்திரங்களும், வர்த்தக உண்டியல்களும் ஆக இருக்கலாமென்று ஏற்பட்டது. 1935-ல் நோட்டுக்கள் வெளியிட்டு நிருவாகம் செய்யும் ஏகவுரிமையும் பொறுப்பும் ரிசர் பாங்குக்குக் கொடுக்கப்பட்டது. ரிசர்வ் பாங்கு நோட்டுக்கள் சர்க்கார் உத்திரவாதம் பெற்றவை.

பாதுகாப்பு

இந்திய ராணுவமானது தரைப்படை (Army), கடற்படை (Navy), ஆகாயப்படை (Air Force)