பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

688

இந்தியா

என மூன்று பிரிவுகளுடையது. ராணுவத்தின் கடமை இந்தியாவை வெளிநாடுகள் தாக்காவண்ணமும், உள்நாட்டில் செழிப்பும் சமாதானமும் நிலவுவதற்கான நிலைமை தளராவண்ணமும் பாதுகாப்பதாகும். இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மந்திரி இலாகா இம் மூன்று படைகளும் ஒத்துழைக்குமாறு செய்கின்றது; படைக்கல உற்பத்திச்சாலைகளை மேற்பார்க்கின்றது; படைகளுக்கு வேண்டிய மருத்துவ இலாகாவையும், பாதுகாப்பு விஞ்ஞான இலகாவையும் நடத்துகின்றது.

தரைப்படை : இதில் சேனாதிபதி முதல் போர்வீரன் வரை எல்லோரும் இந்தியராகவே யுள்ளனர். தொழில்நுட்ப நிபுணர்களுள் மட்டும் சில பிரிட்டிஷ் அலுவலாளர்கள் உள்ளனர். தகுதியுள்ள இந்திய மக்கள் யாவராயினும் ராணுவத்தில் சேர உரிமையுடையவராவர்.

இந்தியப் படைகளுள் தரைப்படை தலையாயது. இந்தியத் தரைப்படை சென்ற இரண்டு உலக யுத்தங்களிலும் புகழ் பெற்றுள்ளது. இப்போதும் உலகிலுள்ள மிகச்சிறந்த படைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுதந்திரம் வந்த பின்னர் நடைபெற்ற காச்மீரம்; ஐதராபாத் நிகழ்ச்சிகளிலும் புகழ்பெற நடந்து வந்துள்ளது.

மேலும், சென்ற ஐந்தாண்டுகளாகத் தரைப்படையினர் ஆற்று வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும், தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபொழுதும், சாலைகள் அமைக்க வேண்டியபொழுதும் பொதுமக்களுக்குச் சமூக சேவையும் செய்து வருகிறார்கள்.

இதைத்தவிரப் பிரதேசப்படை (Territorial army) ஒன்றும் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் பொதுமக்களையும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடுத்துவதேயாகும். தரைப்படைக்குப் பக்கபலமாக இருந்து போக்குவரத்துப் பாதைகளையும் கடற்கரைகளையும் காப்பதும், பொதுவாக நாட்டில் அமைதியும் சட்டமும் நிலவுவதற்கு அரசாங்கத்துக்குத் துணையாக நிற்பதுமே இதன் முக்கியக் கடமைகள்.

ராணுவத்திற்கு வேண்டிய படைக்கலங்களை இந்தியாவிலேயே செய்துகொள்ள வேண்டுமென்பதே இலட்சியமாகும். அதற்காக வடாலா என்னுமிடத்திலும், புசாவல் என்னுமிடத்திலும் இரண்டு உற்பத்திச்சாலைகள் வேலைசெய்து வருகின்றன. அம்பர்நாத் என்னுமிடத்தில் எந்திரக்கருவி உற்பத்திச்சாலை நிறுவப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு வேண்டியவற்றைப் பற்றி ஆராய்வதற்காகப் பாதுகாப்பு விஞ்ஞான ஸ்தாபனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரி இலாகா விற்கு ஒரு விஞ்ஞான ஆலோசகர் நியமிக்கப்பட்டுளர். படைக்கலங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சோதனை நிலையமும் நிறுவப்படும்.

கப்பற் படை: சுதந்திரம் வந்த சமயம் இருந்த படையைக் கப்பற்படை என்று கூறமுடியாது. ராயல் நேவி என்னும் ஆங்கிலக் கப்பற் படையின் ஒரு சிறு துணைப் படையாக மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் பிரிவினையால் அது, அதனினும் சிறிதாக ஆகிவிட்டது. இந்தியாவின் மூவாயிரத்து ஐந்நூறு மைல் நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாக்கச் சிறிதளவுகூடப் போதுமானதாக இருக்கவில்லை. அப்படை இப்போது விரிவடைந்துள்ளது. கடற் பயிற்சிக்கும் கடற்கரைப் பயிற்சிக்கும் பழைய நிலையங்கள் விரிவடைந்தும், புதிய நிலையங்கள் நிறுவப்பட்டும் வருகின்றன. கடற்படை விமானப் போக்குவரத்துக் கிளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கப்பற் படைக்கு வேண்டியவர்களைத் தயாரிக்கும் நிலையம் கொச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கப்பற் படை அலுவலாளர்கள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பயிற்சி பெறுகிறார்கள். ஜாம்நகரிலும் லொனாவலாவிலுமுள்ள நிலையங்கள் விரிவாக்கப்பட்டன. கொச்சியிலும் விசாகப்பட்டினத்திலும் புது நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கொச்சி நிலையமே இந்தியாவில் மிகப் பெரிய பயிற்சி நிலையமாகும்.

டேராடூனிலுள்ள இந்திய ராணுவக் கல்லூரி 1949-ல் திருத்தி அமைக்கப்பட்டது. அதனுடன் மூன்று படை உத்தியோகஸ்தர்களுக்கும் கூட்டு ஆதாரப் பயிற்சி கொடுக்கக் கூட்டுப்படைக் கிளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்கிளையில் இரண்டு ஆண்டுகள் பயின்ற கடற் படைப் பயிற்சி மாணவர்கள் (Cadets) மீண்டும் 4-6 ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பெறுகின்றனர்.

ஆகாயப் படை: இது பாகிஸ்தான் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வடமேற்கிலிருந்த ஆகாயப் படை நிலையங்களுள் பெரும்பாலானவை பாகிஸ்தானிடம் சேர்ந்தன. ஆயினும் இந்திய யூனியன் ஆகாயப் படையினர் 1947-ல் மேற்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளை இந்தியாவுக்கு வெகு திறமையுடன் கொண்டுவந்து சேர்த்தார்கள். இதுபோல் காச்மீர நிகழ்ச்சியிலும் அரிய சேவை செய்தனர்.

இப்போது இந்தியக் கடற்படைக்கு இக் காலத்திய எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. பலவிதமான வேலைகளுக்கேற்ற கிளைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. நெடுந்தூரம் விமானம் ஓட்டிச் செல்லும் பயிற்சியும் அளிக்கப்டுகிறது. விமானம் ஓட்டும் பயிற்சி யளிப்பதற்காக அம்பாலாவிலும் ஜோதிபுரியிலுமிருந்த ஆரம்பப் பயிற்சிக்கிளைகள் இரண்டு பெரிய கல்லூரிகளாகத் திருத்தி அமைக்கப்பட்டுள. கப்பற் படைக்கான பொறியியல் நுட்பங்கள் கற்றுக் கொடுப்பதற்காகப் பெங்களூரில் பொறி நுட்பப் பயிற்சிக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் பகுதிகளையும் ஆகாயவிமானத்திலிருந்து போட்டோ பிடித்துத் தேசப் படங்கள் தயாரிக்கவும், சர்வே இலாகா ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பம்பாயிலுள்ள இந்தியக் கடற் படையின் கப்பற்கட்டு நிலையத்தை விரிவுபடுத்த ஆலோசனை நடந்து வருகிறது.

இந்திய ராணுவத்திலுள்ளவர்களின் மக்கள் ராணுவ சேவை செய்வதற்கு ஏற்ற பயிற்சியும் கல்வியும் பெறுவதற்காக, ஜலந்தர், அஜ்மீர், பெல்காம், பெங்களூர் ஆகிய ஊர்களில் ராணுவக் கல்லூரிகள் இருக்கின்றன. ராணுவ உத்தியோகஸ்தர்களுக்கு அன்னிய மொழிகள் கற்றுக் கொடுப்பதற்காகப் புது டெல்லியில் அன்னிய மொழிக் கல்லூரி 1949-ல் அமைக்கப்பட்டது. ராணுவ மருத்துவக் கல்லூரி பூனாவில் நடந்து வருகிறது.

பொருளாதாரம்

வரலாறு: கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையும், இந்தியாவின் பொருளாதார வாழ்க்கை மாறுபாடும்: இந்தியாவில், 17ஆம் நூற்றாண்டிலும், 18ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வேளாண்மையே முக்கியத் தொழிலாயிருந்தது. இது தவிரப் பல கைத்தொழில்களும் வேலைகளும் உண்டு. இவைகளில் தலைசிறந்தது நெசவுத்தொழில். டாக்கா மஸ்லின் உலகறிந்தது. வங்காளத்தில் பட்டு நெய்தல், தோய்த்தல், காச்மீரத்திலும் லாகூரிலும் சால்வைகள் நெய்தல், லாகூரிலும் ஆக்ராவிலும் இரத்தினக் கம்பு ளங்கள் நெய்தல் சிறப்பான தொழில்களாயிருந்தன. இந்நாட்டில் கப்பல் கட்டுதலும் உண்டு. அக்காலத்தில் ஆசியா, ஐரோப்பா நாடுகளுடன் இந்தியா வியாபாரப்-