பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

691

இந்தியா

தார் நிலத்திற்குச் சொந்த உரிமை கொண்டாடவில்லை. ஆகையால் ஆங்கிலேய அரசாங்கத்திற்குச் சட்டப்படி இவ்வுரிமை இல்லை. ஆனால் வரி விசாரணைக் கமிட்டி கூறியபடி இந்திய அரசாங்கத்தார் தங்களுடைய விசேஷ அதிகாரத்தினால் நில உரிமைகளைச் சிலருக்கு அளித்தும், சிலர் கொண்டாடி வந்த உரிமைகளை அனுமதித்தும் வந்தனர். ஆனால் புறம்போக்கு நிலங்களையும், கனிச்சுரங்கங்களையும், ஆறு, ஏரித் தண்ணீரையும் தங்களுக்கே சொந்தமென்று வைத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் சில சந்தர்ப்பங்களில் நிலத்தைத் தங்கள் விருப்பம்போல் வினியோகிக்கும் உரிமையையும் பறிமுதல் செய்யும் உரிமையையும் வைத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஜமீன்தார்களுக்கும் ரயத்துக்களுக்கும் நிலத்தீர்வை செலுத்திக் கொண்டிருக்கும்வரை, நிலச் சொந்தம் உண்டு. ஜமீன் திட்டத்தில் முதன் முதலில் குடிகளின் உரிமைகளைப் பற்றி யாதும் கூறவில்லை. பிறகு ஜமீன்தார்களுக்கு விசேஷ அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதன் பயனாகப் பயிரிடும் குடிகள் பல கஷ்டங்களுக்கு உள்ளாயினர். 1859-ல் குடிவாரச் சட்டம் ஒன்று பிறப்பித்தனர். இதனால் வாரத்தை அதிகப்படுத்தவோ, குடிகளை நிலத்திலிருந்து வெளிப்படுத்தவோ ஜமீன்தார்களுக்கு இருந்த அதிகாரம் குறைக்கப்பட்டது. 1885-ல் குடிவாரச் சட்டத்தின்படி குடிகளுக்கப் பல உரிமைகள் கொடுக்கப்பட்டன. இதுவே இந்தியாவில் குடிவாரச் சீர்திருத்தங்களுக்கு முதற்படியாகும். 1937லிருந்து கிசான் இயக்கங்களின் பயனாகப் பல மாகாணங்களில் குடிகளின் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவைகளின் மூலம் நில வாரம் (Rent) குறைக்கப்படுகிறது. குடிகளை நிலத்திலிருந்து வெளியேற்றுவது தடுக்கப்படுகிறது. குடிகளுக்கு நிலத்தில் கிணறுகள் வெட்டிக்கொள்வதற்கும் வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் உரிமைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் நில வார நிலுவைமீது அதிக வட்டி வாங்கவும் முடியாது. குடிவாரப் பாத்தியத்தைப் பிறருக்கு மாற்றிக் கொடுக்கவும் இயலும்.

1938-ல் வங்க அரசாங்கம் சர் பிரான்சிஸ் புளொடு (Sir Francis Floud) தலைமையின்கீழ் ஒரு நிலத் தீர்வைக் கமிஷன் நியமித்தது. நிலவரித் திட்டங்களையும், முக்கியமாகச் சாசுவத நிலவரி ஏற்பாட்டையும் பரிசீலனை செய்து, அபிவிருத்திக்கு ஏற்ற ஆலோசனை கூறுவது இதன் வேலை. 1940-ல் இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் சாசுவத நிலவரி ஏற்பாட்டை நீக்க வேண்டுமென்றும், ரயத்துவாரி முறையை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டது. இதன் பயனாகத் தற்காலம் பல மாகாணங்களில் ஜமீன்தாரி முறையை அறவே ஒழிக்கச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மை வரலாறு: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையிலிருந்து இந்திய வேளாண்மையில் புரட்சிகரமான ஒரு மாறுதல் ஏற்பட்டது. இந்திய விவசாயிகள் கைத்தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை மேலும் மேலும் அதிகமாக உண்டாக்கத் தலைப்பட்டனர். மேலும் அதுவரை உள்நாட்டுத் தேவைக்கென்றே செய்யப்பட்டு வந்த வேளாண்மை இப்பொழுது அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக விசேடமாகச் செய்யப்பட்டு வந்தது. அரிசி, கோதுமை, பருத்தி, சணல்,எண்ணெய் வித்துக்கள் முதலியன கிராமங்களிலிருந்து அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இம் மாறுதலுக்குப் பல காரணங்கள் உண்டு. கம்பெனியார் இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களையும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து, இந்தியாவுக்கு இங்கிலாந்திலிருந்து உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்வதையே கொள்கையாகக்கொண்டு, தானியங்களையும், கச்சாப் பொருள்களையும் விளைவிக்கவும் ஏற்றுமதி செய்யவும் ஆதரவளித்தனர். மேலும் சாலைகள், இருப்புப் பாதைகள், நீராவிக்கப்பல்கள் முதலிய போக்குவரத்துச் சாதனங்களின் அபிவிருத்தியினாலும், சூயெஸ் கால்வாயின் திறப்பினாலும் இந்தியாவிலிருந்து விளைபொருள்களை ஏற்றுமதி செய்தல் எளிதாயிற்று. கிராமங்களில் பணப் பழக்கம் ஏற்பட்டு, நில வாரம், கூலி, வட்டி முதலியன பணமாகக் கொடுக்க வேண்டி வந்ததால் குடியானவர் தங்களுடைய பொருள்களை விற்றுப் பணமாக்க வேண்டியதாயிற்று. இது தவிர அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப்போரின் காரணமாக அந்நாட்டிலிருந்து இங்கிலாந்திற்குப் பருத்தி ஏற்றுமதி குறைந்தது. ஆகவே, இங்கிலாந்தில் இந்தியப் பருத்திக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. விவசாயப் பொருள்களுக்கு அதிகவிலை கிட்டியது. ஆனால் 1870 லிருந்து 1880 வரை அடுத்தடுத்துப் பல பஞ்சங்கள் ஏற்பட்டதாலும், பருத்தி விலை குறைந்ததாலும், வரிச் மிகவும் ஏறினதாலும் குடியானவர் துன்பங்களுக்கு ஆளாயினர். சுமை

1870-ல் அரசாங்கத்தார் முதன் முதலில், இம்பீரியல் விவசாய இலாகா ஏற்படுத்தினர். மாகாணங்களிலும் விவசாய இலாகாக்கள் நிறுவப்பட்டன. வேளாண்மைக்குரிய புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதும், விசாரணைகளைச் செய்வதும், பஞ்ச காலங்களில் நிவாரண வேலை செய்வதும். பொதுவாக வேளாண்மை முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவதும் இந்த இலாகாக்களின் வேலைகளாகும். குடியானவரின் கடன் தொந்தரவை நீக்க 1879-ல் தக்காண விவசாயிகள் உதவிச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

1880 முதல் 1895 வரை பொதுவாக விவசாயிகளுக்கு நல்ல காலமென்று கூறலாம். ஆனால் 1895-ல் கஷ்ட காலம் தொடங்கியது. இரண்டு பஞ்சங்கள் உண்டாகி, மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டுப் பயிர்த்தொழிலுக்கும் கச்சாப் பொருள்கள் ஏற்றுமதிக்கும் குறைவு ஏற்பட்டது. 1883-ல் நில அபிவிருத்திச் சட்டமும், 1884-ல் விவசாயிகள் கடன் சட்டமும் அமலுக்கு வந்தன. அரசாங்கத்தாரால் குடியான வருக்கு நிலத்தை வளப்படுத்தவும், மாடுகள் விதைகள் வாங்கவும் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கப்பட்டு, நாளடைவில் சிறுகச் சிறுக அத்தொகை திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் முதன்முதலில் வேளாண்மை முறைகளைப்பற்றி ஆராய்ந்து, முன்னேற்றத்துக்கான வழிகளை அறிய முயற்சியெடுக்கப்பட்டது. இதற்கு டாக்டர் வோயல்கர் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டார். இவரது அறிக்கையின் பயனாக வேளாண்மை, காடுகள் முதலியவைகளைப் பற்றிய கல்வியைக் கற்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மற்றும் மக்களுக்கு வேளாண்மையில் புது முறைகள், புது உழவுக் கருவிகள் இவைகளின் நன்மைகளை நேரில் காட்ட ஆராய்ச்சிப் பண்ணைகள் நடத்தப்பட்டு வந்தன. சாதிக் குதிரைகள், ஆடுமாடுகள் இன அபிவிருத்தியின்பொருட்டுக் கண்காட்சிகளும், பொலிகாளைப் பண்ணைகளும் நடத்தப்பட்டு வந்தன.

1903-ல் பூசா என்ற இடத்தில் ஆராய்ச்சிக்குத் தேவையான நிபுணர்களையும் வசதிகளையும் கொண்ட