பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

692

இந்தியா

ஓர் இம்பீரியல் விவசாய இன்ஸ்டிடியூட் ஸ்தாபிக்கப்பட்டது. 1905-ல் மாகாண விவசாய இலாக்காக்களின் வேலைகளையும் திட்டங்களையும் இணைத்துச் சீர் செய்ய ஓர் அகில இந்திய விவசாய போர்டு அமைக்கப்பட்டது. 1908-ல் பூனாவில் ஓர் உயர்தர வேளாண்மைக் கல்லூரி திறக்கப்பட்டது. பின் ஆண்டுகளில் கான்பூர், நாகபுரி, லயல்பூர், கோயம்புத்தூர் முதலிய இடங்களிலும் உயர்தர விவசாயக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. 1921 முதல் மாகாணங்கள் விவசாய இலாகாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. அது முதல் இம்பீரியல் விவசாய இலாகா, நாட்டின் பொதுவான விஷயங்களைக் கவனித்தும், வேளாண்மையையொட்டிய பலவேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் ஸ்தாபனங்களை நடத்தியும் வருகிறது. 1929-ல் விவசாய ராயல் கமிஷன் கூறியபடி இம்பீரியல் விவசாய ஆராய்ச்சிச் சபை நிறுவப்பட்டு, வேளாண்மை முன்னேற்றம், கால்நடை ஆராய்ச்சி, விளைபொருள்களைச் சீராக விற்பனை செய்தல், வேளாண்மைக்குரிய அரசாங்க வெளியீடுகளை வெளியிடுதல் போன்ற வேலைகளைக் கவனித்துவருகிறது. இந்த நூற்றாண்டு முதல் நீர்ப்பாசனம், கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றிலும் அரசாங்கம் ஊக்கம் காட்டியது. மேலும் 1930-ல் அயல் நாட்டுக் கோதுமை, அரிசி, சர்க்கரை மூலம் இந்நாட்டுப் பொருள்களுக்கு ஏற்பட்ட போட்டியைக் கடல் சுங்க வரி போட்டு முறிக்கச் சர்க்கார் ஏற்பாடு செய்தது. 1926-ல் லின்லித்கோ பிரபுவின் தலைமையின்கீழ் ஒரு விவசாயக் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1928-ல் இக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தியாவில் வேளாண்மைச் சீர்திருத்தம், கிராமச் சீரமைப்பு முதலியன நடைபெற்று வந்தன. 1937-ல் இங்கிலாந்திலிருந்து சர் ஜான் ரஸ்ஸல், என். சீ. ரைட் என்ற இரு நிபுணர்கள் இந்திய வேளாண்மை முன்னேற்றத்திற்கான வழிகள் கூற வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பூச்சி யிடையூறுகளைத் தொலைத்தல், புன்செய்ப் பயிர் ஆராய்ச்சி, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் முதலியவை களை நல்ல முறையில் பயிரிடுதல், கால்நடை அபிவிருத்தி முதலிய பல துறைகளில் ஆலோசனை கூறினர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ச்சி குன்றியிருந்த வேளாண்மை 1914க்குள் தழைத்தது. 1918-ல் ஒரு பஞ்சம் வந்தது; முதல் உலக யுத்த காலத்தில் சர்க்கார் உணவுத் தானியங்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினர். ஆனால் குடியானவர்களுக்குத் தேவையான வெளிநாட்டுச் சாமான்களின் விலை கட்டுப்படுத்தப் படாததால் அவர்களுக்குக் கஷ்டம் உண்டாயிற்று; 1921-23-ல் சற்று நிமிர்ந்த குடியானவர் 1929-ல் உலகம் முழுவதும் உண்டாகிய வியாபார மந்தத்திற்கு உள்ளாயினர். பொருள்களின் விலை இறங்கியது. கோதுமை, எண்ணெய் வித்துக்கள் முதலிய பொருள்களுக்கு வெளிநாட்டுப் போட்டி ஏற்பட்டது. இதனால் குடியானவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டது. 1935-36-ல் வியாபார மந்தம் நீங்கியது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது. ஜப்பான் போரில் இறங்கியதிலிருந்து விவசாயப் பொருள்களுக்கு விலை ஏறியது. நில விலையும் ஏறிற்று. கிராமங்களில் பணம் குவிந்தது. ஆனால் 1943-ல் சர்க்கார் உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியதிலிருந்து குடியானவர் விளைவிக்கும் பொருள்களுக்கு வருவாய் குறைந்தது. ஆனால் அவர்கள் வாங்கவேண்டிய பொருள்களுக்கு விலை அதிகம் கொடுக்கவேண்டியதாயிற்று.

பர்மாவிலும் கிழக்குக் கோடி நாடுகளிலும் போர் பரவிய பின்னர், இந்தியாவில் உணவு நெருக்கடி மிகுந்தது. 1942-ல் சர்க்கார் உணவுப் பெருக்க இயக்கத் தைத் தொடங்கினர். 1943-ல் உணவுத் தானியங்கள் பற்றி ஒரு கொள்கையை மேற்கொள்ள, அதற்கு வேண்டிய ஆலோசனை கூற டாக்டர் கிரெகரியின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக் குழுவினர் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யக் கூடாதென்றும், ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க உணவுத் தானியங்களைச் சேகரித்து, ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், சர்க்காரே உணவுத் தானியங்களைச் சேகரித்து, அதைப் பங்கீடு செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், மக்களிடையே உணவுப் பங்கீடு செய்யப்பட வேண்டுமென்றும், உணவுப் பெருக்க இயக்கத்தை வெற்றிகரமாக மேலும் நடத்த வேண்டுமென்றும் கூறினர். ஒரு நான்கு ஆண்டுகளுக்கு இக் கொள்கையை அரசாங்கம் மேற்கொண்டது. 1943-ல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி விசாரணை செய்த உட்ஹெட் கமிஷன் கூறிய பல ஆலோசனைகளின் பயனாக வெளி நாடுகளிலிருந்து உணவுத் தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. உணவுத் தானியங்களுக்கும் மற்ற விளை பொருள்களுக்கும் சரியான விலை என்ன கொடுக்கலாம் என்று தீர்மானிக்க 1944-ல் ஒரு துணைக் குழுவும் நியமிக்கப்பட்டது. 1946 ஜனவரியில் இந்திய அரசாங்கம் தமது உணவு, வேளாண்மைக் கொள்கைகளை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி வேளாண்மையை அபிவிருத்தி செய் வதும், உணவைப் பெருக்குவதும், வேளாண்மையில் ஈடுபடும் வேலைக்காரர்களுக்கு நேர்மையான கூலி கொடுக்க வேண்டும் என்பதும், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உடல் வளர்ச்சிக்கேற்ற உணவைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதும், குடிசைத் தொழில் முன்னேறச் செய்வதும் அரசாங்கத்தாரின் கொள்கைகளாம். 1947 செப்டெம்பர் மாதம் சர்க்கார் உணவுத் தானியங்களை விரைவில் பெருக்க வழி கூற, சர் புருஷோத்தம தாஸ் தாகூர் தாஸின் தலைமையில் மற்றொரு உணவுத் தானியக் கமிட்டியை நியமித்தனர். 1947-ல் இந்தியாவை இரண்டாகப் பிரித்தது. வேளாண்மைக்குத் தீங்கு விளைத்தது. சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் இருந்த நல்ல நீர்ப்பாசன வசதிகள் கூடிய நிலங்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டன. அவ் விடங்களில் தேவைக்குமேல் விளையும் தானியங்கள் இந்திய யூனியனுக்குக் கிடைக்காமற் போயின. இதனால் உணவு நெருக்கடி பெருகியிருக்கிறது. மேலும் நல்ல சாதி ஆடுமாடுகள் பிரதேசங்களும் பாகிஸ்தானுக்குச் சொந்தமாயின. மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்து அகதிகள் ஏராளமாக இந்தியாவிற்கு வந்ததன் பயனாகவும் உணவு நெருக்கடி மிகுந்திருக்கிறது. முஸ்லிம்களால் காலி நிலங்கள் இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஆனால் இவர்கள் ஏற்கெனவே சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் மேற்கொண்ட வேளாண்மை முறைகளைக் கைவிட்டுப் புதிய முறைகளைக் கையாள வேண்டியதாயிற்று. பருவ மழைகள் சரியாகப் பெய்யாததனால் உணவு நெருக்கடி இன்னும் அதிகரித்திருக்கிறது. அயல் நாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்ததனால், இந்தியா சம்பாதித்துச் சேர்த்த அன்னிய நாட்டு நாணய நிதி (Foreign Exchange Resources) வீணா கக் குறைந்து போகிறது. ஆகவே தனக்கு வேண்டிய உணவை இந்தியாவே உற்பத்தி செய்துகொள்ள-