பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

693

இந்தியா

வேண்டுமென்று அரசாங்கம் வேண்டிய முயற்சி எடுத்து வருகிறது. பற்பல மாகாணங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் எந்திரக் கலப்பைகளின் உதவியால் சாகுபடிக்குக் கொண்டு வரப்படுகின்றன. மத்திய அரசாங்கத்தாரால் மாகாணங்களுக்கு எந்திரக் கலப்பைகள் (Tractors) கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1951க்குள் வெளி நாடுகளிலிருந்து உணவு இறக்குமதியை நிறுத்திவிட வேண்டுமென்று திட்டமும் போட்டிருந்தனர். ஆனால் பல எதிர்பாராத காரணங்களால் அத் திட்டம் நிறைவேறவில்லை.

பஞ்சமும் பஞ்சகால உதவியும் : இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் ஏற்பட்ட பஞ்சங்களின் முழு விவரங்கள் தெரியவில்லையாயினும் அடிக்கடி பஞ்சங்கள் ஏற்பட்டு வந்தனவென்றும், 1291, 1555, 1630ஆம் ஆண்டுகளில் மிகக்கொடிய பஞ்சங்கள் மக்களை வாட்டினவென்றும் அறிகிறோம். கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆட்சியிலும் (1760-1857) இந்தியாவில் பல பஞ்சங்கள் தோன்றின. முதன்முதலில் கம்பெனியார் யாதொரு நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பின்னர் பஞ்ச காலத்தில் தானியவிலைக் கட்டுப்பாடு செய்தல், தானிய ஏற்றுமதியைத் தடுத்தல், பொது மராமத்து வேலைகளைத் துவக்குதல் போன்ற சில முறைகளைக் கையாண்டனர். 1857 முதல் நாளிதுவரை இந்தியாவில் பல பஞ்சங்கள் தோன்றியிருக்கின்றன. இவைகளில் 1860-61-ல் வட மேற்கு இந்தியாவில் உண்டான பஞ்சம், 1865-67-ல் ஒரிஸ்ஸா பஞ்சம், 1868-69-ல் ராஜபுதனப் பஞ்சம், 1873-74-ல் பீகார் பஞ்சம், 1976-78-ல் சென்னை மாகாணப் பஞ்சம், 1896-98-ல் தேச முழுவதும் ஏற்பட்ட பஞ்சம், 1899-1900 பஞ்சம், 1918-20 பஞ்சம், 1943-ல் வங்காளப் பஞ்சம் ஆகியவை கொடியவை. பொதுவாக மக்கள் தொகை பெருகி நிலத்திலிருந்து வருவாய் போதாததும், நகரங்களில் இருந்த கைத்தொழில்கள் அழிந்ததும், பருவ மழைகள் சரிவரப் பெய்யாமையும், போக்குவரத்து வசதிகள் இல்லாமையும் பஞ்சங்களுக்குக் காரணங்களாகும். 1860க்குமுன் பஞ்சம் என்றால் உணவுப் பஞ்சம்தான். உணவுப் பொருள்களைக் குறையேற்பட்ட பிரதேசங்களுக்கு விரைவில் அனுப்ப இயலாமல் போனதால் அவை ஏற்பட்டன. ஆனால் 1860க்குப் பின் இருப்புப் பாதைகள், சாலைகள் முதலியன போட்ட பிறகு பஞ்சம் என்றால் பணப் பஞ்சந்தான். வேலையின்மையால் தேவையானவற்றை வாங்குவதற்குப் போதுமான பணமில்லாமல் கஷ்டம் ஏற்பட்டது. 1943-ல் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு அரிசி இறக்குமதி நின்றதாலும் உணவுப் பொருள்களின் விலை ஏறியதாலும், மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் உடனே நடவடிக்கை எடுக்காததாலும் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது.

முதன் முதலாக 1865-ல் ஏற்பட்ட ஒரிஸ்ஸா பஞ்சத்திற்குப் பின் தான் அரசாங்கத்தார் பஞ்சநிவாரணவேலையில் ஊக்கம் காட்டினர். எவ்விதத்திலேனும் பஞ்சத்தினால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதத்தைத் தடுப்பது தங்கள் பொறுப்பு என்று அறிவித்தனர். 1873-74-ல் பீகாரில் பஞ்சத்தின்போது எல்லா ஜில்லாக்களிலும் பஞ்ச நிவாரண வேலைகள் துவக்கப்பட்டன. உணவுத் தானியங்கள் அரசாங்கத்தாரால் இறக்குமதி செய்யப்பட்டன ; 1880-ல் சர் ரிச்சர்டு ஸ்ட்ராட்ஸியின் தலைமையில் பஞ்ச விசாரணைக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இவர்களது அறிக்கையில் பஞ்ச காலத்தில் உடல் வலிமை உள்ளவர்களுக்கு வேலைகொடுத்து, உயிர் வாழ்ப் போதுமான கூலி கொடுக்க வேண்டுமென்றும், வேலைசெய்ய இயலாதவர்க்கு இலவச உதவியளிக்க வேண்டுமென்றும், நிலச்சுவான்தார்களுக்கு நிலவரியைத் தள்ளுபடி செய்தும், கடன் கொடுத்தும் உதவ வேண்டுமென்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இக்கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு மாகாணத்திலும் பஞ்சநிவாரணச் சட்டத் தொகுப்புக்கள் செய்யப்பட்டன. 1878 முதல் மத்திய அரசாங்கம் ஒவ்வோராண்டிலும் ரூ.1½ இலட்சம் பஞ்ச நிவாரணத்திற்கென்று ஒதுக்கிவைக்கலாயிற்று. பஞ்ச காலத்தில் உதவவும், சாதாரண காலங்களில் நீர்ப்பாசனம் முதலிய வசதிகளைச் செய்து கொடுத்துப் பஞ்சம் வராமல் தடுக்கவும் இந்நிதியிலிருந்து பணம் கொடுக்கப்பட்டது. தவிர, சர்க்கார் காடுகளில் ஆடுமாடுகளை மேய்க்க அனுமதித்தனர். கால் நடைகளைப் பாதுகாக்க வைக்கோல் டிப்போக்கள் வைத்தனர். இருப்புப் பாதைகளை அதிகமாக அமைத்தனர். 1898-ல் சர் ஜேம்ஸ் லயல் தலைமையில் ஒரு பஞ்ச விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் அறிக்கையைப் பரிசீலனை செய்வதற்குள்ளாக 1899-1900-ல் பஞ்சம் தோன்றியது. 1901-ல் அந்தோனி மக்டானல் தலைமையில் மூன்றாவது பஞ்சவிசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் முக்கியமாகப் பஞ்ச காலத்தில் மக்களுக்கு மன உறுதியை உண்டாக்க வேண்டுமென்றும், அதற்காகப் பஞ்சம் வரக்கூடுமென்ற நிலையிலேயே குடியானவர்களுக்குக் கடன் கொடுத்தும், நிலவரியைத் தள்ளுபடி செய்தும் உதவ வேண்டுமென்றும், முன்கூட்டியே பஞ்சநிவாரண வேலைக்கான திட்டங்கள் சித்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களின் உதவியையும் நாட வேண்டுமென்றும், கூட்டுறவு இயக்கத்தைத் துவக்க வேண்டுமென்றும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இக் கமிஷன் சிபார்சுப்படி மறுபடியும் பஞ்சச்சட்டத் தொகுப்புக்கள் திருத்தியமைக்கப்பட்டுப் பின் தோன்றிய பஞ்சங்களில் அவ்வாறே உதவி செய்யப்பட்டு வந்தது. 1937 லிருந்து மாகாணங்களே பஞ்சநிவாரணப் பொறுப்பை முற்றிலும் ஏற்கலாயின. 1943-ல் வங்காளப் பஞ்சத்தின் பயனாக உட்ஹெட் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் தேசமக்கள் அனைவருக்கும் போதுமான உணவு அளிக்கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், தானியங்களைச் சேகரித்துப் பங்கீடு செய்ய வேண்டுமென்றும், கள்ளமார்க்கட்டு லஞ்ச ஊழல் முதலியவைகளைத் தடுக்கவேண்டும் என்றும், விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டுமென்றும், தனிப்பட்ட உணவு இலாகா ஒன்று ஏற்படுத்தவேண்டுமென்றும் கூறிற்று. இந்த ஆலோசனைகள் மிகவும் பயன் தரலாயின.

நீர்ப் பாசனம் : இந்தியாவில் வேளாண்மை செய்வோர் பருவ மழையையே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெரிய அணைக்கட்டு (Grand Anicut) காவேரி கழிமுகத் தீவுப் பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் அளித்து வந்திருக்கிறது. துங்கபத்திரை ஆற்றில் அமைந்த பல அணைகள் 16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டவை. பிரோஸ் துக்ளக்கினால் யமுனையிலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் பின்பு அக்பரால் பழுது பார்க்கப்பட்டது. ஷாஜகான் காலத்தில் அதிலிருந்து டெல்லிக்கு ஒரு கிளை கொண்டு போகப்பட்டது பஞ்சாப், சிந்து மாகாணங்களிலும் கூடப்பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பழைய கால்வாய்கள்