பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

694

இந்தியா

அனைத்தும் பழுதடைந்திருந்தன. ஆனால் ஹேஸ்டிங்ஸ் பிரபு காலம் முதல்தான் இவைகளைக் கம்பெனியார் சீர்செய்ய வாரம்பித்தனர். தென்னிந்தியாவிலும் பண்டைக் காலத்து அரசர்களாலும் பாளையக்காரர்களாலும் கட்டப்பட்ட பல நீர்த்தேக்கங்கள் சீர்கெட்டுக் கவனிக்கப்படாமலிருந்தன. 1836-ல் கொள்ளிடத்தில் அணைக்கட்டு வேலை துவக்கப்பட்டது. அதனால் தஞ்சை, திருச்சி, தென் ஆர்க்காடு முதலிய மாவட்டங்களுக்குப் பாசன வசதி ஏற்பட்டது. இவ்வேலையைத் துவக்கி நடத்திய புகழ் சர் ஆர்தர் காட்டன் என்பவரைச் சார்ந்தது. இவர் பின்னர் கோதாவரி ஆற்றில் அணைக்கட்டுக்கள் கட்டினார். 1853-ல் கிருஷ்ணா நதியில் அணைக்கட்டையும் துவக்கினார். லாரன்ஸ் பிரபு காலத்தில் நீர்ப்பாசன வேலைகளை அரசாங்கத்தாரே செய்து முடிப்பதென்றும், அவற்றிற்கான மூலதனத்தைக் கடன் வாங்கிச் சேகரிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி 1860-1880க்குள் ஐக்கிய மாகாணத்திலும் பஞ்சாபிலும் பல பெரிய திட்டங்கள் முடிக்கப்பட்டன. ஆயினும் இக்காலத்தில் அரசாங்கத்தார் இருப்புப் பாதைகள் போடுவதில் காட்டின ஊக்கத்தைக் கால்வாய்கள் வெட்டுவதில் காட்டவில்லை.

1880-ல் பஞ்ச விசாரணைக் கமிஷனின் ஆலோசனைப் படிபஞ்சம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கத் தீர்மானித்தனர். இவ்வகைத் திட்டங்களுக்குப் பாதுகாப்புத் திட்டங்களென்றும், மற்றும் பெரிய திட்டங்களுக்கு வருவாய் அளிக்கும் திட்டங்கள் என்றும் பெயர். இவ்விருவகை வேலைகளும் பெரிய திட்டங்களாகும். இவை தவிர, குளங்கள், பாசன ஏரிகள் முதலியவைகளையும் சர்க்கார் கண்காணித்து வந்தனர். இவைகளைச் சில்லரை மராமத்து வேலைகள் என்று கூறுவதுண்டு. 1900க்குள் பல பஞ்சப் பாதுகாப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. இவற்றிற்கு வேண்டிய பொருள் பஞ்ச நிவாரண நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

1901-ல் நியமிக்கப்பட்ட நீர்ப்பாசனக் கமிஷனின் சிபார்சுகளை அடிப்படையாகக்கொண்டு 1903லிருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டன; முன்னைவிட இரண்டு மடங்கு பணம் செலவு செய்யப்பட்டது; தண்ணீர் வசதியடைந்த நிலப்பரப்பும் 70 சதவீதத்திற்கு மேல் பெருகியது; 1922 லிருந்து நீர்ப்பாசன வேலைகள் மாகாணங்களின் கண்காணிப்புக்குள்ளாயின; மாகாணங்களுக்கு அதிக அதிகாரமும், பணச் செலவு செய்வதில் அதிக சுதந்திரமும் கொடுக்கப்பட்டன. பஞ்சாபில் சட்லெஜ் நதித் திட்டங்கள், சிந்துவில் சுக்குர் நீர்த்தேக்கம், சென்னை மாகாணத்தில் மேட்டூர் அணை, பம்பாயில் பந்தர்தாரா, லாயிடு அணைகள், ஐக்கிய மாகாணங்களில் சாரதா-அயோத்திக் கால்வாய்கள் போன்ற பெரிய திட்டங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசாங்கம் நீர்ப்பாசனத்தில் அக்கறை காட்டி வருகிறது. 1931-ல் மத்திய நீர்ப்பாசனச் சபை ஒன்று, நீர்ப்பாசன முறைகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சி அறிவைத் திரட்டி மாகாணங்களுக்கு அளிப்பதற்காக நிறுவப்பட்டது. 1945-ல் மத்திய நீர் வழி, நீர்ப்பாசனக் கப்பல் போக்குவரத்துக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் போடுவதும், அவைகளைத் துவக்குவதும், மேற்படி துறைகளில் இஞ்சினீயர்களைப் பயிற்சி செய்விப்பதும், அரசாங்கத்தாருக்கு நீர்ப்பாசனம் சம்பந்தமான ஆலோசனை கூறுவதும், இக்கமிஷனின் அலுவல்களாகும். 1947-ல் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினால் சிந்துவிலும் பஞ்சாபிலும் உள்ள பெரிய கால்வாய்களும் அணைகளும் பாகிஸ்தானுக்குச் சொந்தமாயின. தற்காலம் இந்திய சர்க்கார் நாட்டிலுள்ள நீர் நிலைகளைப் பல காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பலநோக்கத் திட்டங்கள் போட்டிருக்கின்றனர். இத்திட்டங்களால் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கவும், மின்சாரச் சக்தியை மிகுதியாக உண்டாக்கவும் போக்குவரத்துச் சாதனங்களைப் பெருக்கவும் கூடும் சில திட்டங்கள் ஏற்கெனவே துவக்கப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய திட்டங்களில் ஆந்திர ராச்சியத் துங்கபத்திரை யாற்றுத் திட்டம், கோதாவரி மீது ராமபாதசாகர் அணை, கிழக்குப் பஞ்சாபில் பாக்ராநங்கல் திட்டம், பீகார்-மேற்கு வங்காளத்தில் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஓரிஸ்ஸாவில் மகாநதித் திட்டம், நேபாளம், வடக்கு பீகாரில் கோசித் திட்டம், மத்திய மாகாணத்தில் நருமதை தபதித் திட்டங்கள் முக்கியமானவை. பார்க்க: ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம்.

இவை தவிர விவசாயிகளுக்குக் கடன் கொடுத்துக் கிணறுகள் வெட்ட ஊக்கமளிக்கப் படுகிறது; பாசனத்திற்காகத் தண்ணீர்க் குழாய்கள் வைத்து எந்திரப் பம்புகளை வைக்கவும், குளங்களைச் சீர்செய்யவும் உதவியளிக்கப்படுகிறது.

கூட்டுறவு இயக்கம் : தற்சமயம் இந்தியாவிலுள்ள சங்கங்களை நாணயச் சங்கங்களென்றும், மற்றச் சங்கங்களென்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். நாணயச் சங்கங்களை விவசாயிகள் சங்கம் என்றும் விவசாயிகளல்லாதார் சங்கம் என்றும் பிரிக்கலாம். பிரதம சங்கங்களுக்குமேல் யூனியன்களும், மத்திய பாங்குகளும், மாகாண பாங்குகளும் உண்டு. மேலும் ஆதார நில அடமான பாங்குகளும், மத்திய நில அடமான பாங்குகளும் உண்டு. மற்றச் சங்கங்களில் முதலில் ஆதாரப் பண்டகசாலைகளும், அவைகளுக்குமேல் பண்டங்களை மொத்தமாக வாங்கி ஆதாரப் பண்டகசாலைகளுக்கு வினியோகிக்கும் மொத்தப் பண்டகசாலைகளும், தொழிலாளிகளுக்குத் தேவையான கச்சாப் பொருள்கள், தொழிற் கருவிகள் முதலியன வாங்கும் சங்கங்கள், வீடுகட்டும் சங்கங்கள், இன்ஷுரன்சு செய்யும் சங்கங்கள், விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கங்கள், பால் விற்பனைச் சங்கங்கள், நெசவாளர், கரும்பு சாகுபடி செய்வோர் சங்கங்கள் போன்ற பலவகைச் சங்கங்களும் இருக்கின்றன. மேலும், வேளாண்மை, பாடசாலை நடத்துதல், மருத்துவ உதவியளித்தல் முதலியனவும் கூட்டுறவு முறையில் நடைபெற்று வருகின்றன.

கூட்டுறவு இயக்கம், சங்க அங்கத்தினரிடையே சிக்கன வாழ்க்கையும், பரஸ்பர உதவியும் பரவச் செய்திருக்கிறது; அங்கத்தினருக்குக் குறைந்த வட்டிக்குப் பணம் கிடைக்க வசதியளித்திருக்கிறது; பொதுவாகக் கொடுக்கல் வாங்கல் செய்வோரிடையே வட்டி விகிதத்தைக் குறைக்கவும் காரணமாக இருக்கிறது. கூட்டுறவுப் பாங்குகள் பணச் சேமிப்புக்கு வசதிகள் அளித்து, மக்களிடையே சேமிக்கும் பழக்கத் தையும் பரவச் செய்திருக்கிறது. பார்க்க: கூட்டுறவு.

கைத்தொழில் வளர்ச்சி : 19ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய கைத் தொழில்கள் பல தோன்றின. இவைகளைத் தோட்டக்கால் கைத்தொழில்களென்றும் (Planta tion Industries). தொழிற்சாலைக் கைத்தொழில்களென்றும் (Factory Industries) இரு வகையாகப் பிரிக்கலாம்.