பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

698

இந்தியா

போடும் இறக்குமதி வரியைக் காட்டிலும் குறைந்தவரி போட்டுச் சலுகை காட்டுமென்றும், அதேபோல இந்தியப் பொருள்களுக்கு இங்கிலாந்தில் சலுகை காட்டுவதென்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 1933 லிருந்து அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. 1933 செப்டெம்பர் மாதம் ஆட்டவா ஒப்பந்தத்தையொட்டி இரும்பு, எஃகு இறக்குமதி பற்றி மற்றொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இவைகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருந்து வந்தது. 1935-ல் இந்தியாவும் இங்கிலாந்தும் மற்றுமொரு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மேலும் பல வியாபாரச் சலுகைகள் காட்டுவதென்றும், வேறு உதவிகள் செய்வதென்றும் ஏற்பட்டன. 1936-ல் கூடிய புதிய இந்தியச் சட்டசபை மேற்கூறிய ஒப்பந்தங்களை எதிர்த்து, அவற்றை ரத்து செய்யப் போவதாகப் பிரிட்டனுக்கு எச்சரிக்கையும் செய்தது. 1939-ல் புதிய இந்திய - பிரிட்டிஷ் வியாபார ஒப்பந்தம் நிறைவேறிற்று. இதன்படி முன்செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, இங்கிலாந்துக்குக் காட்டி வந்த சலுகைகள் குறைக்கப்பட்டன.

இந்தியா-ஜப்பான் வியாபார ஒப்பந்தங்கள் : 1932 லிருந்து ஜப்பானியத் துணிமணிகளால் இந்தியத் துணிமணிகளுக்கு ஏற்பட்ட வலுத்த போட்டியைத் தடுக்க அரசாங்கத்தார் இறக்குமதி வரியை மிக உயர்த்தினர். உடனே ஜப்பான் இந்தியப் பருத்தியை வாங்காமல் புறக்கணித்தது. 1934-ல் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 1937-ல் புதிய ஒப்பந்தம் ஒன்றும் செய்துகொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தப்படி ஜப்பான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் துணிமணிகளுக்கும், இந்தியாவிலிருந்து ஜப்பான் வாங்க வேண்டிய பருத்திக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1940 வரை அமலில் இருந்தது.

இரண்டாவது உலக யுத்தம் : 1939-45 யுத்தத்தின் பயனாக எதிரி நாடுகளுடனும் எதிரிகள் வசமான நாடுகளுடனும் இந்திய வியாபாரம் நின்றது. இதர நாடுகளுடனும் வாணிகம் செய்யப் பல இன்னல்கள் உண்டாயின. ஆனால் இந்தியப் பொருள்களுக்கு நேச நாடுகளில் நல்ல கிராக்கி ஏற்பட்டது. எதிரிகள் கையில் பண்டங்கள் போகாமல் தடுக்கவும், அவசியமான பொருள்கள் நாட்டைவிட்டு அகலாமலிருக்கவும் கண்டிப்பான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டன. 1940லிருந்து இறக்குமதியும் அரசாங்க அனுமதி பெற்றுத்தான் செய்யவேண்டியதாயிற்று. இறக்குமதி செய்யவேண்டிய பொருள்களின் தேவையைப் பொறுத்தும், அவைகளுக்கு மாற்றுப் பண்டங்கள் உள்ளதைப் பொறுத்தும், இறக்குமதியினால் இந்தியா சம்பாதித்த அயல்நாட்டு நாணய நிதியில் வீண் குறைவு ஏற்படுமா ஏற்படாதா என்பதைப்பொறுத்தும் இறக்குமதிசெய்ய அனுமதிகள் கொடுக்கப்பட்டன. பொதுவாக இந்தியாவின் ஏற்றுமதியில் குறைவு ஏற்படவே, இதைப் பெருக்க வழிகள் கூற 1940-ல் ஓர் ஏற்றுமதி ஆலோசனைச் சபை (Export Advisory Council) ஏற்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்திய வியாபாரத்தைப் பெருக்க வழிதேட டாக்டர் கிரெகரி, சர் டேவிட் மீக் ஆகிய இருவரும் தூது சென்றனர். ஆனால் அவர்களுடைய அறிக்கையில் அ.ஐ. நாடுகளில் இந்திய வியாபாரத்துக்குப் பல இன்னல்கள் உள்ளனவென்றும், இங்கிலாந்து, சீனா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குத்தான் இந்தியப் பண்டங்களை ஏற்றுமதி செய்ய வழி தேடவேண்டுமென்றும் கூறினர்.

1945-ல் ஜெனீவா நகரத்தில் 23 நாடுகள் கூடி வர்த்தகம், சரக்கு வரி சம்பந்தமாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்தியாவும் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்கியது. இவ்வொப்பந்தப்படி 23 நாடுகளும் ஒன்றுக்கொன்று வியாபாரச் சலுகைகள் காட்டிவந்தன. 1948 மார்ச்சில் ஹவானா (கியூபா) நகரத்தில் ஐக்கிய நாடுகள் (United Nations) வர்த்தகம், தொழில் சம்பந்தமான கூட்டம் ஒன்று கூட்டிச் சர்வதேச வர்த்தகம் பற்றி ஒரு குறிப்பை வெளியிட்டன. உலக நாடுகளுக்கிடையில் தடையிலா வாணிகம் நிலவச் செய்ய உலக வாணிக ஸ்தாபனம் ஒன்று நிறுவப்பட்டது. உலக வாணிகத்தில் தடைகள், விசேஷச் சலுகைகள் வேற்றுமைகள் முதலியவைகளை அகற்றுவதே ஹவானா ஒப்பந்தத்தின் நோக்கமாகும். ஆனால் கைத்தொழில்களில் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு மட்டும் வியாபாரத் தடைகள் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. உலக வாணிக ஸ்தாபனத்தின் குறிக்கோளுக்கும் திட்டங்களுக்கும் உட்பட்டு இந்திய அரசாங்கத்தார். அ.ஐ. நாடு, ஜப்பான், செக்கோஸ்லோவாக்கியா, எகிப்து, பெல்ஜியம், ஜெர்மனி, யூகோஸ்லாவியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, போலந்து, இத்தாலி, ஆப்கானிஸ்தானம், சுவிட்ஸர்லாந்து, ஹங்கேரி,பின்லாந்து, இலங்கை முதலிய நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்குத் தேவையான உணவுப் பொருள், எந்திரம், கருவிகள், ரசாயன உரம், ரசாயனப் பொருள்கள், மருந்து முதலியவைகளைத் தருவிப்பதும் இந்திய வாணிபத்தைப் பெருக்குவதுமே இவ்வொப்பந்தங்களின் நோக்கமாகும்.

1947 ஆகஸ்டு 15-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் 1948 பிப்ரவரி வரை யாதொரு வியாபாரத்தடையும் செய்வதில்லையென்று ஒரு தாற்காலிக ஒப்பந்தம் செய்துகொண்டன. 1948 மார்ச்சு முதல் வியாபாரத் தடைகள் ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் கஷ்டங்கள் உண்டானமையால் 1948 மே மாதத்தில் ஒரு வியாபார ஒப்பந்தமும், 1949 ஜூன் மாதம் ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. ரூபாயின் மதிப்பை இந்தியா குறைத்தது. ஆனால் பாகிஸ்தான் அவ்வாறு குறைக்காததால் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகத்தில் பல இன்னல்கள் ஏற்பட்டன. 1950 ஏப்ரலில் இரு நாடுகளும் மறுபடியும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன.

இந்திய வியாபாரமும், கொடுக்கல் வாங்கல் நிலையும் : 1900 க்கு முன் சரியான புள்ளி விவரங்கள் இல்லாமையால் இந்தியாவின் கொடுக்கல்-வாங்கல் நிலையைப் பற்றித் திட்டமாக ஒன்றும் கூற முடியவில்லை. ஆயினும் பொதுவாக வெகு காலந்தொட்டு இந்தியாவின் பண்ட ஏற்றுமதி மிகுதி, கொடுக்கல் மிகுதி, வாங்கல் குறைவு. ஆகையால் மற்ற நாடுகளிலிருந்து தங்கமும் வெள்ளியும் இந்தியாவில் வந்து குவிந்தன. அன்னிய ஆட்சி வந்தும் கூட இந்தியாவிலிருந்து மேனாட்டுக் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டமையால், இந்தியாவிற்கு வர்த்தகச் சாதக நிலையே இருந்து வந்தது. ஆனால் இதில் கிடைத்த லாபம் இந்தியா இங்கிலாந்துக்குப் பல வகையில் செலுத்த வேண்டிய இனங்களுக்கு ஈடாகி வந்தது. 1914 முதல் 1929 வரை ஈடு செய்தது போக மிச்சம் கூட ஏற்பட்டு ஆண்டுதோறும் தங்கம் வந்து குவிந்தது. 1929 லிருந்து உலக வியாபார மந்தத்தால் ஏற்றுமதி குறைந்து, வர்த்தக பாதக நிலை ஏற்பட்டு, 1934-39-ல் நிலைமை மோசமாகி, இந்தியாவிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள தங்கம் 1939 வரை ஏற்றுமதி செய்யவேண்டி வந்தது. ஆனால் இரண்டா-