பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

703

இந்தியா

முதன்மையானது தக்கணம், அதாவது பேரார், கான்தேசம், மத்திய இந்தியா உள்ளடங்கியது. இவ்விடங்களில் நீர்ப்பாசனமின்றியே பயிராவது பெரும்பாலும் குறுகிய இழைப்பருத்தி வகைகளே. கத்தியவார், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் விளையும் பருத்திவகைகளில் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட நீண்ட இழை உடையன பல உண்டு. இத்தகைய கம்போடியாப் பருத்தி கோயம்புத்தூர் மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் பயிராகிறது.

சணல் இந்தியாவில் பயிராகும் நார்ப் பயிர்களில் முதன்மையானது. சணல் விளையும் நிலங்களிற் பெரும் பகுதி பாகிஸ்தானிற் சேர்ந்துவிட்டது. இந்தியன் யூனியனில் சணல் 15 இலட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே பயிரிடப்படுகிறது. இப்போது இது பயிராகும் நிலத்தின் பரப்பு அதிகரித்து வருகிறது.

கரும்பு 40 இலட்சம் ஏக்கரில் பயிராகிறது. இதில் அரைப்பகுதி கங்கைப் பள்ளத்தாக்கில் இருக்கிறது. வெளியிலிருந்து வந்துகொண்டிருந்த வெள்ளைச் சர்க்கரைமீது விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டணத்தை உயர்த்திவிட்டபடியால் சென்ற 20 ஆண்டுகளாகக் கரும்பு முன்னிலும் இரண்டு மடங்கு அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது. 150 கரும்பாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் உள்ளன. இவற்றிலிருந்து 10 இலட்சம் டன் வெள்ளைச் சர்க்கரை கிடைக்கின்றது. ஆகையால் ஜாவாவிலிருந்து இவ்வளவு சர்க்கரை 1933க்கு முன் இறக்குமதியாய் வந்தது இப்போது நின்றுவிட்டது.

காப்பி, தேயிலை முதலியன பயிராகும் தோட்டங்கள் 12 இலட்சம் ஏக்கர் பரப்புள்ளவை. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட பகுதி தேயிலைத் தோட்டங்கள் ; இவை பெரும்பாலும் அஸ்ஸாமில் உள்ளன. மேற்கு மலைத் தொடர்களில் உள்ள தென்னிந்திய மலைச் சரிவுகளிலும் தேயிலையோடு காப்பி, ரப்பர், ஏலக்காய் முதலியவையும் பயிராகின்றன. எனினும் அஸ்ஸாமில் உள்ளவற்றை விடத் தென்னிந்தியாவில் உள்ள தோட்டங்கள் சிறியவை. தென் இந்தியாவில் உள்ள தோட்டங்களில் பெரும்பகுதி இந்தியருக்குச் சொந்தமாகவும், இந்தியரின் அதிகாரத்திலும் உள்ளவை. இத் தோட்டங்கள் எல்லாம் சென்ற நூற்றாண்டுகளில் ஏற்பட்டவையே என்பது கருதற்பாலது.

புகையிலை இந் நாட்டில் பல இடங்களில் விளைகிறது. உயர்ந்த ரகமான வர்ஜீனியா புகையிலை குண்டூரில் 3 இலட்சம் ஏக்கருக்கு மேல் பயிராகிறது. பயிராகும் புகையிலை ஏராளமாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. பீ. எம். தி.

நீர்ப்பாசனம்

பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் நீர்ப்பாசன முறையைக் கையாண்டு வந்துள்ளனர். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நீர்ப்பாசன முறையைக் காணலாம். இதற்குக் காரணம் ஆங்காங்குப் பெய்யும் மழை நிலையாகப் பெய்யாததேயாகும். சிந்து, ராஜபுதனம், பஞ்சாபின் தென் மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் மழை மிகச் சொற்பம். தக்கண பீடபூமி ஐக்கிய, மத்திய மாகாணங்களின் மேற்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் மழை ஓராண்டுபோல் மற்றோராண்டும் பெய்யும் என்று சொல்வதற்கில்லை. ஆகவே இவ்விடங்களில் பயிர்த் தொழில் மிகக் கேவலமான நிலைமையில் இருத்தலைக் காண்கிறோம். வங்காளம், அஸ்ஸாம், மேற்குக் கரைப் பிரதேசம் என்னும் இடங்களில்தான் ஆண்டுதோறும் 50 அங்குலங்களுக்கு மேல் மழை பெய்கிறது. இங்கு நீர்ப்பாசன ஏற்பாடின்றியே வேளாண்மை செய்தல் இயலும். நாட்டின் பல பாகங்களிலும் நடைபெறும் நீர்ப்பாசன நிலங்களின் பரப்பு அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத்துக்குத் தண்ணீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது: 1. ஆறுகளிலிருந்து கால்வாய்களின் மூலமாகக் கொள்ளுதல், 2. ஆற்று வெள்ளத்தையும் மழை நீரையும் அணை கட்டி ஏரிகளில் தேக்கி வைத்தல், 3. கிணறுகள் வெட்டி நீர் சுரக்கும்படி செய்தல்.

வெள்ளப் பெருக்கோடும் கால்வாய்கள், எப்போதும் நீர் வற்றாத கால்வாய்கள் என இந்தியாவில் இருவகைக் கால்வாய்கள் உள்ளன. வெள்ளப் பெருக்குள்ள காலங்களில் ஆறுகளின் கரைகளை மீறி வழிந்து செல்லும் நீரைப் பயன்படுத்த வெட்டியுள்ள கால்வாய்கள் வெள்ளக் கால்வாய்களாகும். கால்வாயின் அடி மட்டத்திற்கும் தாழ்வாக ஆற்றின் நீர் மட்டம் குறையும் வரையில் இவ் வெள்ளக் கால்வாய்களில் நீர் செல்லும். மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை சிந்து, பஞ்சாப் நாடுகளில் சிந்து நதியில் வெள்ளம் கரை புரண்டு சென்று இவ்வகைக் கால்வாய்களிற் பாயும். இத்தகைய கால்வாய்கள் இம் மாகாணங்களிலேதான் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆனால் நீர்க்குறை மிகும் வேனிற் காலங்களில் இக்கால்வாய்கள் வறண்டு விடும். ஆண்டுதோறும் தவறாது வெள்ளப் பெருக்குற்றாலொழிய இக் கால்வாய்கள் நீரற்று விடுமாதலின், இவற்றையே நீர்ப்பாசனத்துக்கு நிலையாக நம்புவதற்கில்லை.

என்றும் நீர் வற்றாமல் செல்லும் கால்வாய்களின் மொத்த நீளம் ஏறக்குறைய 75,000 மைல்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் நீரோடும் பொருட்டு, ஆற்று நீர் வேண்டிய அளவுக்குத் தேங்குமாறு அவ்வாறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. பஞ்சாபில் உள்ள முக்கால்வாய், கங்கைநதிக் கால்வாய், உத்தரப்பிரதேசக் கால்வாய், சிந்துவிலுள்ள சுக்குர் அணைத்திட்டம் ஆகியவை எப்பொழுதும் நீர் வற்றாக் கால்வாய்களே. கிருஷ்ணா, கோதாவரி, காவேரி ஆகிய இவற்றின் டெல்ட்டாத் திட்டங்களும் இவ்வகைப்பட்டவையே. ஆனால் ஆற்றின் இடையேயுள்ள டெல்ட்டா நிலங்களுக்கே கிளைநதிகளின் மூலமாக நீர் பாயும்; ஆற்றினின்றும் நீங்கியுள்ள நிலங்களுக்கு எட்டாது. தென் இந்தியாவின் மற்றப் பாகங்களில் ஆறுகள் ஆழமான பள்ளத்தாக்குக்களினூடே செல்லுகின்றன. பெரிய ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி, அவற்றின் நீரைப் பெரிய தேக்கங்களில் சேர்த்து வைத்தால்தான் அந்நீரை வாய்க்கால்களின் மூலம் ஆண்டுமுழுவதும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும். ஆயினும் இத்தகைய பெரிய அணைகளைக் கட்டவும், கால்வாய்களை வெட்டவும் ஏராளமான பணம் செலவாகும். அரசாங்கமே பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். சில ஆண்டுகட்கு முன்னர் ஒரு மாகாணத்துக்குள்ளேயே அடங்கியுள்ள அணைகளும் கால்வாய்களும் மட்டும் அம்மாகாண அரசாங்கத்தால் நிருமாணிக்கப்பட்டு வந்தன. அதற்கு வேண்டிய செலவு முழுவதையும் அம்மாகாணமே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது இராச்சியங்கள் ஒன்றுசேர்ந்து பலருக்கும் பொதுவாகப் பயன்படுமாறு பல பெரிய திட்டங்கள் ஏற்பாடாகி வருகின்றன. உதாரணமாக, ஐதராபாத்தும் சென்னையும் சேர்ந்து துங்கபத்திரைத் திட்டத்தை வகுத்துள்ளன.