பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

706

இந்தியா

கள் சென்னை, திருவிதாங்கூர்க் கடற்கரைகளிலும் காச்மீரத்திலும் ராஜஸ்தானத்திலும் காணப்படுகின்றன. அவைகளில் 150 கோடி டன் நிலக்கரி இருக்கக்கூடும். சென்னை மாகாணத்திலுள்ள தென்னார்க்காடு ஜில்லாவில் காணப்படும் புலங்கள் ஆராயப்பட்டுள்ளன. இங்கு இதை வெட்டி எடுக்கும் வேலை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண்ணெண்ணெய் : வட அஸ்ஸாமிலுள்ள மண்ணெண்ணெய்ப் புலங்களிலிருந்து ஆண்டுதோறும் ஆறரைக் கோடி முதல் ஏழரைக் கோடி காலன் வரையுள்ள எண்ணெய் கிடைக்கிறது. அஸ்ஸாம் மலைப் பிரதேசங்களில் மண்ணெண்ணெய்ப் புலங்கள் இருக்கின்றனவா என்று அறிய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. கட்சு, குஜராத், வங்காளம், இமயமலை அடி வாரம், மூன்றாம் புவியுகத்துப் பாறைகளுள்ள கடற்கரைப் பகுதிகள் ஆகிய இடங்களிலும் மண்ணெண்ணெய் கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்தியாவுக்குத் தேவையான மண்ணெண்ணெயில் பத்தில் ஒரு பகுதியே இந்தியாவில் கிடைக்கிறது. மீதி வெளிநாடுகளிலிருந்து வருகிறது. புதுப்புலங்கள் கிடைக்காவிட்டால் எப்பொழுதும் இந்தியா மண்ணெண்ணெய்க்குப் பிறநாடுகளை எதிர்பார்க்க வேண்டியதுதான்.

தங்கம்: பழங்காலப் பாறைகளுள்ள இடங்களில் பெய்கின்ற மழை நீரைக் கொண்டு செல்லும் ஆறுகளிலுள்ள வண்டலைக் கழுவித் தங்கமெடுக்கும் தொழில் இந்தியாவில் பழங்காலத்திலிருந்து நடந்துவந்திருக்கிறது. பீகாரிலும் ஐதராபாத்திலும் சென்னையிலும் தங்கச் சுரங்கவேலை நடந்துவந்திருப்பதைக் காட்டக்கூடிய அடையாளங்கள் காணப்படுகின்றன. மைசூர் இராச்சியத்திலுள்ள கோலாரில் காணப்பட்ட பழைய சுரங்கங்களை ஆராய்ந்தபொழுது மிகுந்த தங்கம் இருப்பதாகத் தெரியவந்தது. இப்பொழுது 9,000 அடி ஆழம்வரை உள்ள தங்கத் தாதுக்கள் அங்கு வெட்டி எடுக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் அவுன்ஸ் தங்கம் கிடைக்கிறது. ஐதராபாத்திலுள்ள ஹட்டி சுரங்கங்களில் தங்கம் சிறிதளவே கிடைக்கிறது. இருபது ஆண்டுகளுக்குமுன் அனந்தப்பூர் ஜில்லாவிலும் மலையாளத்திலுள்ள வயநாட்டுப் பகுதியிலும் சில சுரங்கங்கள் வேலை செய்துவந்தன.

செம்பு: செம்புப் புலங்கள் ராஜஸ்தானிலுள்ள கேத்ரி, தாரிபா என்ற இடங்களிலும், மத்தியப் பிரதேசத்திலுள்ள சலிமனாபாத்திலும், பீகாரிலுள்ள சிங்கபூமியிலும், சிக்கிமிலும், நெல்லூரிலும் காணப்படுகின்றன. இவ்விடங்களில் வெகுகாலமாகச் செம்பு வெட்டி எடுக்கப்பட்டபோதிலும் இப்பொழுது வேலை நடப்பது டாட்டா நகருக்கு அருகிலுள்ள மோசபோனி என்னும் இடத்தில் மட்டுமே. இங்கு ஆண்டுதோறும் 6,000 டன் செம்பு கிடைக்கிறது. இது பெரும்பாலும் பாத்திரங்கள் செய்யவே பயன்படுகிறது. சிக்கிம் ராஜஸ்தான் புலங்களை ஆராய்ந்தால் இந்தியாவுக்கு வேண்டிய செம்பு முழுதும் கிடைக்கும் என்று தெரிகிறது.

அலுமினியம்: அலுமினியம் கிடைக்கக்கூடிய முக்கிய தாதுப்பொருள் பாக்சைட்டு எனப்படும். கிடைக்கும் புலங்கள் பம்பாய், மத்திய பாரதம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பல தொழில்களுக்கும் பயன்படும் அலுமினியத்தைத் தரக்கூடிய இத்தாதுப்பொருள் இவ்வளவு அதிகமாகயிருந்தபோதிலும், திருவிதாங்கூரிலுள்ள் ஆல்வாயிலும், வங்காளத்திலுள்ள அசன்சாலுக்கருகிலும் இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே தற்போது வேலை செய்கின்றன. அவைகளும் ஆண்டுக்கு 6,000 டன் அலுமினியம் மட்டுமே உற்பத்தி செய்கின்றன.

மக்னீசியம் : மாக்னசைட்டு, டாலமைட்டு, புளுசைட்டு என்ற தாதுக்களிலிருந்தும், கடல்நீரிலிருந் தும்மக்னீசியம் தயார் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்திலும் மைசூரிலும் 10 கோடி டன் நிறையுள்ள சிறந்த மாக்னசைட்டு தரக்கூடிய புலங்களிலிருக்கின்றன. டாலமைட்டு நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. மக்னீசியம் கடல்நீரில் சிறிதளவே காணப்படினும் இந்தியக் கடற்கரையின் நீளம் அதிகமாயிருப்பதால் மக்னீசியத்தைக் கடல்நீரிலிருந்து அதிக அளவு பெற முடியும்.

டைட்டேனியம் : இதன் முக்கியத் தாதுவான இல்மனைட்டு திருவிதாங்கூர், சென்னைக் கடற்கரைகளில் ஏராளமாகக் காணப்படுகிறது. இவைகளில் மொத்தம் சுமார் 200 கோடி டன் இருக்கும். திருவிதாங்கூரில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் டன் முதல் 2 இலட்சம் டன்வரை நிறையுள்ள இல்மனைட்டு மணலிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. டைட்டேனியம் ஆக்சைடுகளில் ஒன்றாகிய ருடைல் என்னும் தாது திருவிதாங்கூர் மணல் காணப்படுகிறது. அது எஃகு பொருள்களை இணைப்பதற்குப் பயன்படுகிறது. `

காரீயமும் நாகமும் : பீகார், ராஜபுதனம். சென்னை ஆகிய இடங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் ராஜஸ்தானிலுள்ள சாவார் என்னும் இடத்தில் மட்டும் வேலை நடக்கிறது. அங்கே ஆண்டுதோறும் சிறிதளவு காரீயமே தயாரிக்கப்படுகிறது. எல்லாப் புலங்களிலும் வேலை செய்தால் தேவைக்குப் போதுமான காரீயமும் நாகமும் கிடைக்கும் என்று தெரிகிறது.

இரும்பு : ஹெமடைட்டு என்னும் இரும்புத் தாதுப்புலங்கள் பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களில் ஏராளமாகப் பரந்து கிடக்கின்றன. இவைகளில் 60 சதவிகிதத்திற்கு அதிகமான இரும்பையுடைய உயர்ந்த ரக தாதுக்கள் 800 கோடி டன் இருக்கும் என்றும், கீழ்த்தரத் தாதுக்கள் அவற்றிலும் இரண்டு மடங்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகின்றது. மைசூர், சாண்டூர், கோவா ஆகிய இடங்களில் இந்தத் தாதுப்புலன்கள் சிறிதளவு காணப்படுகின்றன. மாக்னடைட்டு என்னும் இரும்புத்தாது மைசூரிலும் சேலம் மாவட்டத்திலும் படிகக்கல்லுடன் படிந்து காணப்படுகின்றது. இப் புலங்களிலிருந்து 200 கோடி டன் இரும்பு கிடைக்கலாம். லிமோனைட்டு என்னும் இரும்புத் தாது ராணிகஞ்சு நிலக்கரிப் புலங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது.

ஜம்ஷெத்பூர், குல்தி, அசன்சால், பத்திராவதி ஆகிய இடங்களிலுள்ள இரும்புத் தொழிற்சாலைகள் உயர்ந்த ரகத் தாதுக்களை உபயோகித்து எஃகையும் வார்ப் பிரும்பையும் தயாரித்து வருகின்றன.

30 முதல் 35 சதவீதம் வரை இரும்புள்ள சரளை (லாட்டரைட்டு) என்னும் தாது இந்தியாவின் பல பாகங்களிலும் ஏராளமாகக் காணப்படுகிறது. உயர்ந்த ரகத் தாதுப்பொருள்கள் தீர்ந்தபின் இவை உபயோகிக்கப்படலாம்.

மாங்கனீஸ் : மாங்கனீஸ் தாதுக்கள் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளுள் இந்தியாவே முதன்மையானது. அது மத்தியப் பிரதேசம், பம்பாய், சென்னை, ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவற்றில் 48 சதவீதம் மாங்கனீஸ் உள்ள உயர்ந்த தாது 2 கோடி டன்னும் கீழ்த்தரத் தாது இதைப்போல் இரண்டு மடங்கும் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.