பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

713

இந்தியா

1948-ல் அரசாங்கம் வெளியிட்ட கைத்தொழில் அறிக்கையானது மூலதனம் தரும் அன்னியர் சமமாக நடத்தப்படுவர் என்றும், இலாபத்தைக் கொண்டு போக வசதி அளிக்கப்படும் என்றும், தேசியமாக்கும் போது நஷ்டஈடு தரப்படும் என்றும் அன்னிய மூலதனத்தார்க்கு வாக்குறுதி அளிக்கின்றது.

நிதிக்கு அடுத்தபடி முக்கியமானது பயிற்சி பெற்றவர் தொகையாகும். இதுவும் குறைவாகவே இருக்கிறது. தொழில் நுட்பக் கல்வியளித்துத் தொழிலாளிகளின் உற்பத்திச் சக்தியைப் பெருக்காவிட்டால், வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியாது. இந்த விஷயத்திலும் அன்னிய மூலதனத் தேவை முக்கியமானதும் அவசரமானதுமாகும். ஐந்தாண்டுத் திட்டமானது அன்னிய மூலதனம் வெறும் பணமாக மட்டுமல்லாமல், பணத்துக்குப் பதிலாக மூலதனப் பொருள்கள், தொழில் நுட்ப அறிவு, தொழில் அனுபவம், தொழில் நிருமாணம் போன்றவைகளும் தொழில் நுட்ப நிபுணர்களும் வேண்டும் என்று கூறுகிறது

இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் செல்வமும் முன்னேற்றமும் மிகுந்த நாடுகள், இரண்டினும் குறைந்த நாடுகளைப் பொருளாதாரத் துறையில் முன்னேறுவதற்கு உதவி செய்ய விரும்புகின்றன. செல்வ வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவி புரிவதற்காக சர்வதேச நிலையங்கள் ஏற்பட்டுள்ளன. அவை :

1. சர்வதேச பாங்கு : இது அரசியல் அலுவல்களுக்கும் நிவாரணச் செயல்களுக்கும் பணம் தராமல் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு மட்டுமே தரும். 1951 இறுதிவரை 123-2 கோடி டாலர். கடனாகக் கொடுத்திருக்கிறது. இந்தியாவுக்குத் தந்துள்ள மூன்று கடன்களின் மொத்தத்தொகை 6·9 கோடி டாலர் இந்த மூன்று கடன்களும் விவசாயம், மின்சாரம் இரண்டையும் வளர்ப்பதற்காகவும், ரெயில்வே எஞ்சின்களை வாங்குவதற்காகவும் தரப்பட்டிருக்கின்றன. பொறிகளையும் அவற்றிற்கு வேண்டிய தளவாடங்களையும் வாங்குவதற்காக அன்னிய நாணய மாற்று, மிகுந்த அளவில் தேவைப்படும். குறிப்பிட்ட கைத்தொழில் திட்டங்களுக்காகவும் கடன்கள் வாங்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.

2. கொழும்புத் திட்டம் என்பது காமன்வெல்த் ஆலோசனைக் கமிட்டியின் யோசனையின் பேரில் பொருளாதார வளர்ச்சி. குன்றிய தென் ஆசியாவிலும் தென் கிழக்கு ஆசியாவிலுமுள்ள நாடுகளை ஒன்று சேர்த்துக் கூட்டுறவு முறையில் முன்னேறும்படி செய்வதற்காக அமைக்கப்பட்ட முயற்சியாகும். இதில் கலந்துள்ள நாடுகள் ஒவ்வொன்றும் ஆறாண்டு அபிவிருத்தித் திட்டம் வகுத்துள்ளது. இதை இந்தியா தனது ஐந்தாண்டுத் திட்டத்தில் மாற்றி அமைத்துளது. கொழும்புத் திட்டத்தின் முக்கிய அமிசம் தொழில் நுட்பவுதவியாகும். தொழில்நுட்ப அறிவு பெறுவதற்காக அந்தந்த நாட்டில் பயிற்சி அளிக்கவும், அயல்நாட்டில் பயிற்சி அளிக்கவும், ஆள் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஐக்கிய நாட்டு நிலையத்தின் தொழில் நுட்பப் பகுதிக்குக் காமன்வெல்த் நாடுகள் 20% நிபுணர்களை அளித்திருப்பதால், அப்பகுதியிலிருந்தும் தொழில்நுட்ப உதவி கிடைக்கும். இத்தகைய தொழில் நுட்ப உதவியைச் சரிவரப் பகிர்ந்து கொடுப்பதற்காகத் தொழில்நுட்பக் கூட்டுறவுக் குழுவும் நிறுவப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு நிலையத்தின் தொழில் நுட்பப் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிலேயே வாசம் செய்வதற்கு ஏற்பாடாயிருக்கிறது. இப்போது அவர் இந்திய அரசாங்கத்துக்கும் தொழில்நுட்ப உதவி போர்டுக்குமிடையில் தொடர்பாளராக ஓராண்டு இருந்து, இந்திய அரசாங்கம் வேண்டும்போது அதற்கு யோசனை கூறி உதவுவார்.

நான்கு குறிக்கோள் திட்டம் : பல நாடுகளும் ஒன்று சேர்ந்து செயலாற்றவேண்டும் என்ற தற்காலக் கருத்தின் உருவமே அமெரிக்க ஐக்கிய நாட்டு மாஜி ஜனாதிபதி டுரூமனுடைய நான்கு குறிக்கோள் திட்டமாகும். இத்திட்டம் முன்னேற்றமடைந்த நாடுகள், முன்னேற்றமடையாத நாடுகளை வளர்ப்பதற்குத் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்திருப்பதைக் காட்டும். அரசியல் துறையில் ஜனநாயகக் கொள்கைக்கு ஆதரவான நாடுகளைச் சேர்ப்பதற்கும் இத்திட்டம் பயன்படுத்தப்படும். பொருளாதாரத் துறையில் முன்னேற்றமடையாத நாடுகளை அபிவிருத்தி செய்து புதிய மார்க்கட்டுக்களையும் புதிய கச்சாப்பொருள் தரும் இடங்களையும் உண்டாக்கும் நோக்கமும் இதற்குண்டு. தைரியமாய்ப் பணம் போடக்கூடிய தனிப்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேர்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இத்திட்டத்தால் பல நன்மைகள் விளையலாம். இது உலகத்திலுள்ள பொருளாதார அமைப்பை மாற்றி நிறுவ முயலுகிறது. இது முன்னேற்றமில்லாத நாடுகளுக்குக் கடன் கொடுப்பதுடன் நில்லாமல், அந்நாடுகளில் முதலிட்டுத் தொழில்செய்யவும், தொழில் நுட்ப உதவி அளிக்கவும் வழி செய்கின்றது. அதாவது ஐக்கிய நாட்டு நிலையத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் ஆதரவில் அந்நாட்டு வளங்களை ஆர்வத்துடன் விருத்தி செய்வதற்கான திட்டம் இது. ஆர். பா.

வாணிகம்

இந்தியாவில் மிகுந்த மக்கள் தொகையும் பலவகையான இயற்கை வளங்களும் செயற்கைப் பொருள்களுமிருப்பதால், இந் நாடு உலகிலுள்ள முக்கியமான வாணிகப் பகுதிகளுள் ஒன்றாக இருக்கிறது. அதனாலேயே இதைப் பிரிட்டிஷார் தங்கள் வாணிகத்துக்கு ஆதார நாடாக வைத்துக்கொண்டிருந்தனர். மற்ற நாடுகளைவிட இந்தியாவே பிரிட்டனுடைய ஏற்றுமதிகளுள் பெரும்பாகத்தை வாங்கிக்கொண்டும், தன்னுடைய ஏற்றுமதிகளுள் பெரும்பாகத்தைக் கொடுத்துக்கொண்டுமிருந்தது. போக்குவரத்து வசதிகள் பெருகவே, இந்தியாவின் உள்நாட்டு வாணிகமும் வெளிநாட்டு வாணிகமும் பெருகின. ஆகவே இந்திய இறக்குமதியின் மதிப்பு 1901-ல் சு. 80 கோடி ரூபாயாக இருந்தது 1951-52-ல் பத்து மடங்கு மிகுந்துள்ளது. ஏற்றுமதியின் மதிப்பு 120 கோடி ரூபாயாயிருந்தது ஆறு மடங்கு மிகுந்துள்ளது. இரண்டும் சேர்ந்து சுமார் ஏழு மடங்கு மிகுந்துள்ளன.

இதுபோலவே, போக்குவரத்து வசதியின் காரணமாக, உள்நாட்டு வாணிகமும் பெருகியிருக்கின்றது. இவ்வாறு வாணிகம் வளர்ச்சி பெற்றதே நாடெங்கும் பட்டணங்கள் கைத்தொழில் சிறப்பின்றியே எண்ணிக்கையிலும் அளவிலும் மிகுந்திருப்பதற்கு முக்கியமான காரணமாகும். அதிலும் வாணிக வளர்ச்சியால் நலம்பெற்ற பட்டணங்கள் பெரும்பாலும் கடற்கரையிலுள்ளவைகளே. அவைகளுள் பல பெரிய நகரங்களாக இருக்கின்றன.

இந்தியாவில் வாணிகம் பரம்பரைத் தொழிலாக நடைபெற்றிருந்தும், வாணிகப் பெருக்கம் மிகுந்திருந்தும், அது சிற்றூர்ப் பகுதிகளில் பெரும்பாலும் விளை-