பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திரசாலம்

723

இந்திரி

விரும்பியவாறே பெறலும் முடியுமாம். இந்திரசாலக் கலையறிவிற்கு மற்ற எல்லா வகைக் கல்வியறிவும் வேண்டும். பச்சிலை (மூலிகை), மந்திரம் இவற்றை இந்திரசாலக் கலைஞன் பயன்படுத்துகிறான். சில இலைகளையும், மலர்களையும், விதைகளையும் அரைத்து மேலே பூசியும் விழுங்கியும் இந்திரசாலக்காரன் சில சக்திகளைப் பெறுகிறான். பகைவனை நண்பனாக்கிக் கோடலும், மங்கையர் உள்ளத்தைக் கவர்தலும், நீரின்மேல் நடத்தலும், நெருப்பில் ஊறின்றிக் கிடத்தலும், காற்றில் இயங்கலும், வேண்டிய மணமக்களைப் பெறலும் இந்திரசாலக்காரனால் எளிதில் செய்ய முடியுமாம். பிறரை மயக்கித் தம்மோடு வரும்படி செய்தலும், வாதத்திலும் போரிலும் வெற்றி பெறலும், புலி, நாகம் முதலிய கொடிய பிராணிகளை அசையவொட்டாமல் தடுத்தலும், மேகத்தை யீர்த்து மழை பெய்வித்தலும், தன் மேல் விழவரும் ஆயுதம் விழாமல் தடுத்தலும் இந்திரசாலக்காரன் மந்திரமோதிச் செய்யும் அரிய காரியங்களாம். பிறரை உணர்வும் செயலு மொழியச் செய்யவும், திருடர்கள் தப்பி ஓடாதபடி அவர்களை நிறுத்தவும், கருவை உண்டாக்கவும், தவிர்க்கவும், தடுக்கவும் இந்திரசாலக்காரன் உதவி செய்வானாம்.

இத்தகைய கருத்துக்கள் ஆதிகாலம் தொட்டு எல்லா நாடுகளிலும் இருந்து வந்திருக்கின்றன. இந்திரசாலக்காரன் இயற்கைக்கு அதீதமான ஆற்றல் உடையவன் என்றும், அதனால் அவன் இயற்கையை, அடக்கி ஆள வல்லவன் என்றும், அவனுடைய உதவியால் தீமை வரவொட்டாமல் தடுக்கவும் நன்மை வரும்படி செய்யவும் கூடும் என்றும் கருதினார்கள்.

இத்தகைய நம்பிக்கைகளைப் பாபிலோனியர், அசிரியர், எகிப்தியர் ஆகியோரும் கொண்டிருந்தனர். இக் கொள்கைகள் பின்னர் கிரீஸ், ரோம் சென்று, அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் பரவின. எகிப்தியர் மருந்து உண்ணவும், விதை விதைக்கவும், நல்ல நாட்கள் என்று சில நாட்களை வகுத்திருந்தனர். பாபிலோனிய அரசன் மந்திரவாதிகளைக் கலந்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.

மந்திரவாதி இறந்த ஆவிகளுடன் தொடர்புடையவன் என்றும், மந்திரங்களைக் கொண்டு அவர்களுடைய உதவியைப் பெறுவன் என்றும் பழங்காலத்து மக்கள் எண்ணிவந்தார்கள். மந்திரத்தால் நோயைக் குணப்படுத்துதலும் பேய் ஓட்டுதலும் நடந்துவந்தனவாம். இன்னும் இந் நம்பிக்கையுண்டு.

சில கிரியைகளைச் செய்து பகைவனைக் கொல்லவும் கெடுக்கவும் முடியும் என்னும் எண்ணம் இருந்து வந்தது. இந்த எண்ணம் இன்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் காணப்படுகிறதாம். இதனைப் பில்லி சூனியம் வைப்பு என்பர்.

தாயத்துக் கட்டும் வழக்கமும் இக்கொள்கையில் சேர்ந்தது. தாயத்து அபாயத்தைத் தவிர்க்கும், நோயை நீக்கும் என்று நம்புகின்றனர்.

இத்தகைய கருத்துக்கள் இப்போது மெலனீசியா போன்ற பசிபிக் தீவுகளிலும் பிறவிடங்களிலும் உள்ள ஆதிக்குடிகளிடத்திற் காணப்படுகின்றன. இப்போது நாகரிக மக்களிடம் காணப்படும் பல பழக்க வழக்கங்களையும் கொள்கைகளையும் விளக்குவதற்கும் பெரிதும் துணை செய்வனவாக இருக்கின்றன.

இக்காலத்தில் இந்திரசாலம் முன் போல் மிகுதியாக மக்கள் வாழ்க்கைக்குக் கெடுதிசெய்வதாயில்லை. பெரும்பாலும் பொழுதுபோக்கான செப்படிவித்தையாக இருந்து வருகிறது. பார்க்க: செப்படிவித்தை.


இந்திரசித்து இராவணன் மகன்; இந்திரனை வென்றதனால் இப்பெயர் பெற்றான். மாயையில் வல்லவன். சிறந்த வீரன். இலக்குமணனால் மடிந்தான்.


இந்திர நீலப் பருப்பதம் வடநாட்டுச் சிவத்தலங்களில் ஒன்று. இந்திரன் வழிபட்டது. சுவாமி நீலாசலநாதர். அம்மன் நீலாம்பிகை. திருஞானசம் பந்தர் பாடல் பெற்றது. இத்தலம் எது என்றும், எங்கிருக்கிறதென்றும் தெரியவில்லை.


இந்திரப் பிரஸ்தம் இந்திரன் ஏவலால் விசுவகர்மாவால் நிருமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பட்டணம். இது பாண்டவர் இருந்த இடம் என்பர். காண்டவப் பிரஸ்தம் என்பதும் இதன் பெயர். இப்போது டெல்லிக்கு அருகிலுள்ளது.


இந்திர விழா: இந்திரனுக்குச் செய்யும் விழா; அகத்தியர் கட்டளைப்படி முசுகுந்தனால் தொடங்கப் பெற்றுச் சோழமன்னர்கள் செய்துவந்தது. காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்டுவந்தபோது, இதனைச் செய்யாமல் விட்டால் நகரம் கடலாற் கொள்ளப்படும் என்று ஆணையிருந்ததென்றும், நெடுமுடிக் கிள்ளியின் காலத்திற் செய்யாமல் விட்டதால் காவிரிப்பூம் பட்டினம் கடலாற் கொள்ளப்பட்டது என்றும் கூறுவர் (மணிமேகலை).


இந்திரன் இந்து வேத காலத் தெய்வங்களுள் முதன்மையானவன். வாயு மண்டல நிகழ்ச்சிகளுக்குத் தேவதை. இடி இவனது படைக்கலம். இவன் மின்னலால் இருளைப் பிளந்து வெல்பவன்; உலக முழுவதையும் ஆள்பவன்; எல்லாவற்றையும் காண்பவன், கேட்பவன். மக்களுடைய உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும், நெஞ்சில் மேன்மையான தூண்டல்களையும் எழுப்புபவன். போரில் என்றென்றும் வெற்றி பெறுபவன். பகையை வெல்லுவதற்குத் தன்னை வழிபடும் மக்களுக்குத் துணை செய்பவன். ஒளிமிக்க பொன் தேரிலே ஊர்பவன். சோமபானத்தில் பெருவிருப்பமுடையவன். புராண வரலாற்றின்படியும் தேவர்களுக்கு அரசனாக அமராவதியில் வசிப்பவன். ஆயினும், பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளுக்குத் தாழ்ந்தவன். கிழக்குத் திக்குக்குக் காவலன். இடியையே படையாகக்கொண்டு அசுரருடன் போர்புரிபவன். ஆயினும் வேத காலத்திற்போல வெல்வதேயன்றித் தோல்வியும் அடைகின்றான். இவன் ஒழுக்கத்தினின்றும் விலகுகின்றான்; அகலியையிடம் நெறிதவறினான். இராவணனுடைய மகன் மேகநாதனிடம் தோல்வியுற்றான். கிருஷ்ணனோடு சண்டையிட்டு அவனால் செருக்கடங்கினான். இவன் மனைவி இந்திராணி. அவளுக்குச் சசியென்றும் பெயர். இவன் மைந்தரில் ஒருவன் சயந்தன். இந்திரன் ஊர்வது ஐராவதம் என்னும் யானை.


இந்திராணி இந்திரன் மனைவி. பாற்கடலிலே அமுதத்துடன் தோன்றியவள். இந்திரனைப் போலவே வச்சிரம், சூலம், கதை முதலானவற்றைத் தரித்து, யானைமீது ஊர்ந்துவரும் சத்தி. எப்போதும் இளமையாயிருக்கும் ஏழு மாதர்களில் ஒருத்தி. இந்திரனாகப் பட்டம் பெற்று வருபவர்கள் இவளைக் காதலியாகக் கொள்வது மரபு. இவள் மகன் சயந்தன்.


இந்திரி (Indri) தேவாங்கைச் சேர்ந்த லீமர் வகையில் மிகப் பெரியது. மடகாஸ்கர் காடுகளில் வாழ்வது. தலையும் உடம்பும் சேர்ந்து இரண்டடி நீளமிருக்கும். வால் இரண்டே அங்குலம். இது கறுப்பும் வெண்மையுமான நிறமுடையது. பின் கால்கள் மிகப்