பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/797

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துஸ்தானி தாலீமி சங்கம்

732

இந்தோ-ஆரியர்

யோர். அலாவுதின்கானும், அவர் புதல்வர் அலி அக்பர்கானும் சாரோடு வாசிப்பதில் சிறந்தவர்கள். அமிர்தசேன், ரஹீம் சேன், நிஹல்சேன், பீதா ஹசேன், இம்தாத்கான், இனாயத்கான், அமீர்கான், பண்டித ரவிசங்கர் ஆகியோர் சிதாரைத் திறமையுடன் பயின்று புகழ் பெற்றனர். பக்காவஜ் வாசிப்பதில் குதன்சிங் புகழ் பெற்றவர். தபலா வாசிப்பதில் காந்தே மகராஜ், அகமத்ஜான், திர்குவா ஆகியோர் புகழ்பெற்றனர். தற்கால இசைக் கலைஞர்களிற் குறிப்பிடத் தக்கவர்கள் விஷ்ணு திகம்பர், அவருடயை புதல்வர் டி.வீ. பலூஸ்கர், வீ.என். பட்வர்த்தன், நாராயணராவ் வியாஸ், கேசர்பாய், ஓம்கார்நாத் தாகூர், அப்துல் கரீம்கான், பையாஸ்கான், அல்லாதியாகான் போன்றவர்கள். பண்டித பாத்கண்டேயின் பெருமுயற்சியால் இந்துஸ்தானி இசையில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது.

இசைப் பயிற்சியிலும், விளம்பித, மத்திம, துரித காலங்களில் இராகத்தை மெல்ல விவரிக்கும் முறையிலும் இந்துஸ்தானி இசை தென்னாட்டிற்குப் படிப்பினையாக அமையக்கூடும். இந்துஸ்தானி இராகக் கொள்கை கருநாடக இராகங்களைப்போல் திட்டமாக வரையறுக்கப்படவில்லை. இந்துஸ்தானி இராகங்களில் அன்னிய சுரங்களையும், ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஒரே சுரத்தின் இரு வகைகளையும் பயன்படுத்தலாம். இரு இராகங்களைக் கலப்பதும், மிஸ்ர ராகங்களைத் தோற்றுவிப்பதும் அதில் பொதுவானவை. புகழ்பெற்ற கலைஞர்கள் இராகத்தைத் தமது விருப்பம் போல் மாற்றியமைத்துக் கொள்ளவும் அந்த இசை முறை இடந்தருகிறது. ஏ. கோ.


இந்துஸ்தானி தாலீமி சங்கம் என்பது உடலுழைப்பு, கைத்தொழில்கள் ஆகியவற்றின் வாயிலாகப் பிழைப்புக்கு உதவக்கூடிய தேசியக் கல்வித்திட்டத்தை வகுத்துப் பரவச் செய்வதற்காகக் காந்தியடிகளால் 1938-ல் நிறுவப்பெற்றது. தலைமை அலுவலகம் வர்தாவுக்கருகிலுள்ள சேவாக் கிராமம்.


இந்தூர் மத்திய இந்தியாவில் ஹோல்க்கார் அரச குடும்பத்தாரால் ஆளப்பட்டு வந்து, இப்போது மத்திய பாரத இராச்சியத்தில் ஒரு மாவட்டமாகச் சேர்ந்துளது. மக்: 5,96,622 (1951). இந்தூர் நகரம் கடல் மட்டத்துக்கு 2,000 அடி உயரத்தில் சரஸ்வதி நதிக் கரையில் இருக்கிறது. பருத்தித் தொழிற்சாலைகள் பல உள. மக்: 3,10,859 (1951).


இந்தோ-ஆரியர்: இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து சுமார் கி. மு. 1500-ல் ஒரு சிறந்த நாகரிகம், மொழி, பண்பாடு இவைகளுடன் வந்து குடியேறினர் என்பதும், அவர்கள் இந்தியாவிற்கு வந்த போது கறுத்த மேனியும் சப்பை மூக்குமுடைய நாகரிக மற்ற பழங்குடிகளைக் கண்டு, இவர்களை அகற்றியோ அல்லது அழித்தோ சிந்து, கங்கைப் பள்ளத்தாக்குக்களில் பரவினர் என்பதும், தங்களுடைய நாகரிகம், பண்பாடு, மொழி ஆகியவற்றை இந்தியா முழுமையும் பரவச் செய்தனர் என்பதும் மேனாட்டு ஆசிரியர்கள் கூறி வந்த பழங்கதையாகும். இக்கதை சிந்து சமவெளியின் நாகரிகத்தைப் புதைபொருளாராய்ச்சியாளர் மொகஞ்சதாரோ, ஹாரப்பா முதலிய இடங்களில் கண்டெடுத்த பின்பு கைவிடப்பட்டது.

ஆரியர் என்று ஒரு தனித்த மனித இனம் (Race) உண்டென்பது ஓர் ஆதாரமற்ற கொள்கை. ஆரியம் என்னும் பதம் ஒரு மொழி வகுப்பை அல்லது ஒரு பண்பாட்டைக் குறிக்கும். லத்தீன், ஜெர்மன், கெல்ட்டிக், சமஸ்கிருதம் முதலிய மொழிகள் இந்த வகுப்பைச் சேர்ந்தவை. இவைகளில் இந்தியாவில் வழங்கிவரும் மொழிவகுப்புக்களை இந்தோ-ஆரியன் மொழிகளென்பர்.

மானிட சமூகங்களுள் ஒன்றுக்கொன்று உள்ள வேறுபாடுகளுள் முக்கியமானவை மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவை போன்றவை. இவ்வித வேறுபாடுகளை மானிட இனங்களோடு பொருத்துவது ஏகாதிபத்தியமும், யதேச்சாதிகாரமும், குடியேற்றநாட்டு மனப்பான்மையுமுள்ளவர்களின் பிரசாரமாகும். இவ்வாறு பொருத்துவதற்கு விஞ்ஞானம் ஆதரவளிக்கவில்லை.

மனிதசமூகங்கள் எல்லாவற்றிலும் உள்ளபடி, இந்தியாவிலும் மொழி வகைகளோடாவது பண்பாட்டு வகைகளோடாவது இனவகைகள் பொருந்துவதில்லை. மொழிகளும் பண்பாட்டு அடையாளங்களும் சூழ்நிலையோடு தொடர்புள்ளனவாயினும், குடியேற்றத்தாலும் சேர்க்கையினாலும் எளிதில் வேறுபாடு அடையும் தன்மையுள்ளன. இவைகளோடு ஒப்பிடும்போது இன வேறுபாடுகள், நிரந்தரமானவையாகக் காணப்படும். சில நூற்றாண்டுகளில் ஒரு மனித சமூகம் தன்னுடைய மொழியிலும் பண்பிலும் அளவு கடந்த மாறுதல்களை அடையலாம். இன்னும் அநேக இடங்களில் இவற்றை அடியோடு இழந்துவிட்டு வேறு மொழியையும் நாகரிகத்தையும் கொள்ள நேரிடுகிறது. அமெரிக்காவில் குடியேற்றப்பட்ட நீக்ரோக்களை இதற்கு ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம். ஆயினும் அவர்களுடைய இன அமிசங்கள் நிரந்தரமாகக் காணப்படுகின்றன.

இந்திய மொழிவகைகளின் தொடக்கத்தையும், அவைகளைக் கொண்டுவந்த என்பதையும் இன்னவை எளிதில் தொடக்கத்தையும், இனங்கள் திட்டப்படுத்துவது இயலாது. உதாரணமாக ஆஸ்திரேலிய இனவகையைச் சார்ந்தவர் ஆஸ்திரிக் அல்லது முண்டாரி மொழியைக்கொண்டு வந்தனர் என்பதற்கும், மத்தியதரைக்கடல் இனத்தவர் திராவிட மொழிகளைக் கொண்டு வந்தனர் என்பதற்கும், நார்டிக் மக்கள் ஆரிய மொழிகளைக்கொண்டு வந்தனர் என்பதற்கும் போதிய ஆதாரமில்லை. தற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனவகையினர் ஒரு மொழியைப் பேசுவதனால் அம்மொழி அவர்களுடைய தொன்மையான மொழியென்று கூறுவதற்கில்லை. ஆஸ்திரிக், திராவிடம், ஆரியம் என்னும் சொற்கள் இவைகளைக் குறிக்கத்தக்கவையல்ல. இந்தோ-ஆரியர்கள் இந்தியாவில் வழங்கிவரும் பெரிய மொழி வகுப்புக்களில் இந்தோ ஆரிய மொழியைப் பேசுபவராகக் கொள்ளல்வேண்டும். இவரை எந்த மனித இனத்தோடும் இணைப்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மனித இனங்களும் மொழி வகுப்புக்களும் அடிப்படையான வேறுபாடுடையன. இந்தியாவின் மொழிவகுப்புக்கள் நான்காகும். இவை (1) முண்டா-கோல் (Munda- Kol), (2) திபெத்தோ சீனம் (Tibeto-Chinese), (3) திராவிடம் (Dravidian), (4) ஆரியம் (Aryan)

I. இவைகளில் முண்டா-கோல் இந்தியாவில் மத்திய பீடபூமியிலுள்ள பில்லர்கள் (Bills), சந்தால்கள் (Santhals), முண்டாக்கள் (Mundas), சவரர்கள் (Soaras), ஹோக்கள் (Hos) போன்ற ஆதிக்குடிகளில் 40,00,000 மக்கள் பேசும் மொழியாகும்.

II. திபெத்தோ-சீனம் இமயமலையடிவாரத்திலும், அஸ்ஸாமிலும், திபெத்து, பர்மா எல்லைப்புறங்களிலும் வசிக்கும் 2,00,000 மக்கள் பேசும் மொழியாகும்.

III. திராவிட மொழி பேசுபவர் தென்னிந்தியாவிலுள்ள பெரும்பான்மையோராவர். இவர்களில்