பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோ -சீனா

734

இந்தோ -சீனா

மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் காணப்படுகின்றனர். லாவோஸுப் பகுதியில் தாயிகளும், காக்களும், சீன மக்கள் இனத்தைச் சேர்ந்த மூக்களும் யாவோக்களும் காணப்படுகின்றனர்.

அனாமியர் மதம் பௌத்தமதத்தின் ஒரு சிதைவாகும். அது பெரும்பாலும் மூதாதையர் வணக்கமேயாகும். கம்போடியா மக்கள் செய்யும் சில கிரியைகள் இந்து மதத்தைச் சேர்ந்தனவாகத் தெரிகின்றன. கிறிஸ்தவப் பாதிரிகள் ரோமன் கத்தோலிக்க மதத்தை இங்குப் பரப்பினர்.

அனாமியர் கிறிஸ்தவச் சகாப்தத் தொடக்கத்தில் தென் சீனாவிலிருந்து வந்தவர்கள். மூன்றாம் நூற்றாண்டில் இந்தியர்கள் வந்து இந்து நாகரிகத்தை வளரச் செய்தனர். ஆனால் அனாமியர் பரவவே இந்த வளர்ச்சி தடைப்பட்டுப் போயிற்று. அனாமியரும் கம்போடியரும் கடற்கரை ஓரத்திலும் ஆற்றங்கரைகளிலும் வசிக்கின்றனர். ஏனையோர் மலைப் பிரதேசங்களில் வாழ்கிறார்கள்.

வரலாறு : அனாம் பிரதேசத்தை ஆண்ட முதல் அரச வமிசம் சீன அரச வமிசத்திலுதித்ததாக ஓர் ஐதிகம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சீனர் இப்பிரதேசத்தை வென்றனர். கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை சீனர் ஆதிக்கம் நிலைத்திருந்தது. கி.பி. 968-ல், தின்போலான் என்ற அரசன் சீனரை விரட்டித் தன் அதிகாரத்தை நாட்டினான். ஆனால், அவனுக்குப்பின் குழப்பம் விளையவே, 15ஆம் நாற்றாண்டில் சீன ஆதிக்கம் மறுபடியும் வந்தது. பிறகு சுதந்திரமடைந்த போதிலும், நாட்டின் நிலைமை சீர்திருந்தவில்லை. 18ஆம் நூற்றாண்டில் அரசர்கள் பிரபுக்களுக்கு அடங்கியிருந்தனர். ஜியாலான் என்னும் அரசன் பகைவர்களை வெல்லப் பிரெஞ்சுக்காரர் உதவியை நாடினான். பிரெஞ்சு அரசன் XIV-ம் லூயி காலம் முதல், பிரெஞ்சுக்காரர் இந்தோ-சீனாமீது கண் வைத்திருந்தனர். ஜியாலான் பிரெஞ்சு உதவி கொண்டு அனாம், டாங்கிங், கொச்சின்-சீனா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றினான். டாங்கிங் பிரதேசம் இந்தோ-சீனாவின் வட கிழக்கிலிருக்கிறது; இதுவரை அனாம் மன்னர்களுக்குப் பெயரளவில் பணிந்திருந்தது. ஜியாலான் அதை அனாமுடன் ஐக்கியப்படுத்தினான் (1801). கொச்சின்-சீனா மிகவும் சிறிய பிரதேசமாயினும் மிக்க வளம் பொருந்தியது. ஜியாலான் பிரெஞ்சு அரசரான XVI-ம் லூயியுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டான் (1787). அதிலிருந்து பிரெஞ்சு அதிகாரம் தோன்ற ஆரம்பித்தது. அரசர்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்ற ஒரு காரணங்காட்டி, 1858-ல் பிரெஞ்சுக்காரர் பலாத்காரமாய் அரசியலில் தலையிட்டனர். 1859-ல் அவர்கள் கொச்சின் - சீனாவை ஆக்கிரமித்தனர். 1862-ல் அதன் மூன்று கிழக்கு மாகாணங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். 1867-ல், எஞ்சிய மூன்று மேற்கு மாகாணங்களையும் வென்றனர். இதன்பின், கார்னியே (Garnier) என்னும் தளகர்த்தர் 188 சிப்பாய்கள் கொண்ட ஒரு படை கொண்டு டாங்கிங்கை வென்றார். 1883-ல் அனாம் அரசர் பிரெஞ்சுக்காரருக்கு இவற்றை விட்டுக் கொடுத்து ராஜி செய்து கொண்டார். அனாம் ஒன்றுதான் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குப் புறம்பாக இருந்தது.அனாம் அரசர் சீனாவுடன் சேர்ந்து பிரெஞ்சுக்காரர் மீது போர் தொடுத்துத் தோல்வியடைந்தார் (1887). எனவே, 1892-ல் அனாம் அரசர் பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு அடி பணிந்தார்.

லாவோஸ் பிரதேசம் இந்தோ-சீனாவின் வடமேற்குப் பகுதி. இதன் முதல் அரசன் கி.பி. 713-ல் ஆள ஆரம்பித்ததாகத் தெரிகிறது. பின்னர் இந்நாட்டைக் கம்போடியா தேசத்து அரசர்கள் ஆண்டனர். சாம் சேன்டாய் (Sam Santai 1356-1406) தம் நாட்டின் சுதந்திரத்தை மீட்டார். மனோரம் என்ற இடத்திலுள்ள பெரிய கோவிலைக் கட்டினார். 18ஆம் நூற்றாண்டின் கடைசியில் நாட்டின் பெரும்பகுதியைத் தாய்லாந்து கைப்பற்றியது. 1893-ல் ஒரு பிரெஞ்சுப் படை தாய்லாந்திடமிருந்து நாட்டைக் கைப்பற்றிக் கொண்டது.

இந்தோ-சீனாவின் மேற்குப் பகுதியான கம்போடியா இந்திய நாகரிகத்தின் செல்வாக்குக்குட்பட்டது. இங்கு, முதன் முதல் கி பி. முதல் நூற்றாண்டில் தென் இந்தியர்களால் பியூ-நான் (Fu-nan) என்னுமிடத்தில் ஓர் இராச்சியம் ஏற்படுத்தப்பட்டது. முதல் அரசன் கௌண்டின்யன் என்பவன். இந்த இராச்சியம் ஆறாம் நூற்றாண்டில் சிதைந்தது. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே கம்புஸ்வயம்புலன் என்னுமோர் இந்தியன் கம்போடியா பிரதேசத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதன்முன் கெமர் (Khmer) என்ற சாதியினர் இங்கு ஆண்டனர். கம்புஸ்வயம்புலன் கெமர் இராணியை மணந்து அரசனாயினான். அவன் பெயரை நாட்டிற்கும் ஆக்கி, அந்த நாட்டைக் காம்போஜமென்றனர். இதன்பின், இந்தியாவிலிருந்து பலர் குடியேறினர். நாட்டிலிருந்து கெமர் மக்கள் இந்திய நாகரிகத்தால் வளம் பெற்றனர். சிரேஷ்டவர்மன் என்னுமரசன் சிரேஷ்டபுரத்தைத் தன் தலை நகராக்கினான். 6 ஆம் நூற்றாண்டில் ஆண்ட ருத்ரவர்மன் சபையில், பிரமதத்தன், பிரமசிம்மன் என்னுமிரு ஆயுர்வேத வைத்தியர்கள் புகழுடன் விளங்கியதாகத் தெரிகிறது. கௌடிலியரின் அர்த்தசாஸ்திர முறைப்படி அரசு நடத்தப்பட்டது. ஆனால், பியூ-நான் அரசர்களின் ஆதிக்கம் நாட்டில் பரவலாயிற்று. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில், பவவர்மன் என்னும் வேந்தன் தன் நாட்டைச் சுதந்திரமாக்கி விட்டு, பியூ நானையும் கைப்பற்றினான்; பவபுரமென்னும் தலைநகரை நிருமாணித்தான். 8ஆம் நூற்றாண்டில் சைலேந்திர அரசர்கள் நாட்டை வென்றனர். ஆனால் இரண்டாவது ஜயவர்மன் (802-869) திரும்பவும் சுதந்திர மன்னனானான். 9ஆம் நூற்றாண்டில் ஆண்ட யசோவர்மன் நிருமித்த யசோதரபுரம் 12ஆம் நூற்றாண்டு வரை தலைநகராக இருந்தது. II-ம் சூரியவர்மன் (1113-1145) இங்கு ஒரு பெரிய விஷ்ணு கோயிலைக் கட்டினான். ஆங்கோர்வாட் (Angkorvat) என்றழைக்கப்படும் இந்த ஆலயம் தென் இந்திய ஆலயங்களை ஒத்தது. இராமாயணம், மகாபாரதம், ஹரிவமிசம் ஆகிய இவைகளின் கதைகள் சிற்பங்களாக ஆலயத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றன. VII-ம் ஜயவர்மன் (1182-1201) இந்தோ-சீனா முழுவதையும் வென்றான்.பாயோன் (Bayon) என்னும் பெரிய ஆலயம் இவன் கட்டியதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆலயச் சுவர்களில் புராணக் கதைகளும் கப்பற் சண்டைகளும் அரசர் ஊர்வலங்களும் மக்கள் தினசரி வாழ்க்கையும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. காம்போஜ நாட்டின் அசோகன் என மதிக்கப்பட்ட இவ்வரசன் ஒரு பௌத்தன். பல மருத்துவச் சாலைகளைக் கட்டிக் குடிமக்களுக்குச் சேவை செய்தான். அவனுடைய ராஜ விஹாரத்தில் 439 ஆசிரியர்களும், 970 மாணவர்களும் இருந்தார்கள். மத விஷயத்தில் பொதுநோக்கு இருந்தது. வேதங்களில் விதிக்கப்பட்ட யாகங்கள் நடந்தன. பல ஆசிரமங்களில் சன்னியாசிகள் உபதேசம் செய்தனர். கோயில்களில் வணங்கப்பட்ட தெய்வங்களில் நடராஜரும் ஒரு-