பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

தியாகராஜ முதலியார், திருவாவடுதுறை ஆதீனத் தலைவர், திரு. கா. ம. ரா. சுப்பராமன் முதலியோரும் பெருந்தொகை உதவினார்கள். இரண்டு நாட்களில் இலட்சத்திற்குமேற்பட்ட தொகை சேர்ந்தது. 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜயதசம் நன்னாளில் கலைக்களஞ்சியப் பணி சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் தொடங்கியது.

கலைக்களஞ்சியம் வெளியிடுவதற்கு என்ன செலவாகுமெனக் கணக்கிட்டுப் பார்த்த போது, விரிந்த அளவில் செய்யச் சுமார் 14 இலட்சம் ஆகுமெனத் தோன்றிற்று. சென்னைச் சர்க்கார் ஆண்டுக்கு ஓர் இலட்சமாக ஐந்து இலட்சத்திற்கு மிகாமல், தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் பொதுமக்களிடம் திரட்டும் தொகைக்கு இரண்டு பங்கு வழங்குவதாக அன்புடன் இசைந்தார்கள். அச்சமயத்தில் தமிழ்ப் பேரன்பர் டாக்டர். ஆர். கே. சண்முகம் செட்டியார் மத்திய சர்க்காரில் நிதி அமைச்சராக இருந்தார். அவருடைய ஒத்துழைப்பால் மத்திய சர்க்காரும் இவ்வரும்பணியைப் பாராட்டி, ஆண்டுக்கு 75 ஆயிரமாக நான்கு ஆண்டுகள் அளிப்பதாக வாக்களித்தார்கள். திருப்பதி தேவஸ்தானத்தார் ரூ. 25,000/- மிகுந்த அன்புடன் வழங்கியுள்ளார்கள். பிற அன்பர்களும் சிறிதும் பெரிதுமான தொகைகளை வழங்கினார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தார் இப்பெரும்பணியை ஆற்ற இடம் கொடுத்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் எங்கள் மகத்தான நன்றி உரியது.

ஆனால், வேலையைத் தொடங்கிய பிறகுதான் ஏற்றுக்கொண்ட பணி எவ்வளவு பெரியது என்பது விளங்கிற்று. இதுவரையில் தமிழில் இல்லாத, நினைக்காத பொருள்களைப்பற்றி இன்று தெளிவாகத் தமிழில் எழுதவேண்டும். முன் தமிழில் வழங்காததால் அப்பொருள்களைப் பற்றிய சொற்கள் தமிழில் இரா என்பது வெளிப்படை. எனவே அவைகளை எப்படிச் சொல்வது என்பது முதற் சிக்கலாக இருந்தது. மற்ற மொழிகளில் இந்தச் சிக்கலை எவ்வாறு நீக்கியிருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்ததில், அவசியமான கலைச்சொற்களை வேற்று மொழிகளிலிருந்து அப்படியே தங்கள் மொழிகளில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்கியது. மத்திய சர்க்கார் கூட்டிய கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் அடங்கிய மாநாட்டிலும் அவ்வம்மொழியினர் தத்தம் மொழியின் தன்மைக்கேற்ற மாறுதலுடன் இக் கலைச்சொற்களை எடுத்தாளுதல்தான் - ஏற்றது என்று முடிவு செய்தனர். தவிர, விஞ்ஞானம், உயர் கணிதம், ரசாயனம், பொறியியல் முதலிய சாஸ்திரங்கள் பல குறியீடுகளை ஆண்டு வந்திருக்கின்றன. ஆங்கில எழுத்துக்கள் 26 தவிர, தீட்டா (ɵ) முதலிய குறியீடுகள் சில கருத்துக்களைக் குறிக்க ஆளப்பட்டு வந்துள்ளன. அக் கருத்துக்கள் தமிழ் மொழியில் இல்லாமையால் அக் குறியீடுகளும் தமிழில் இல்லை. ஆனால், தற்கால வாழ்க்கைக்குரிய விஞ்ஞான அறிவு பெற இக்காலத்தில் அக் குறியீடுகள் அவசியமாயிருக்கின்றன. எனினும் அறிஞர்களின் உதவியைக் கொண்டு, கலைச்சொற்கள் தமிழில் ஏராளமாக ஆக்கப்பட்டிருக்கின்றன. இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டுமே பிறமொழிக் கலைச்சொற்களும் குறியீடுகளும் கலைக்களஞ்சியத்தில் பயன்படுத் தப்பட்டிருக்கின்றன. நம் தமிழ் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிறைவுடன் தோன்றி, இன்றும் அளவற்ற ஆற்றலுடனிருக்கின்றது. நம் தமிழ்த் தாய்க்கு என்றும் முதுமையில்லை. என்றும் அவள் கன்னியாகவே அழகு மாறாமல் விளங்குவாள். ஆகையால் இச் சில புதிய சொற்களையும் குறியீடுகளையும் மேற்கொள்ளுதலால் தமிழ்த் தாய்க்கு வலிமையும் வளர்ச்சியுமே உண்டாகும்.

கலைக்களஞ்சியப் பணி தொடங்கி ஆறாண்டுகள் கழிந்து, ஏழாம் ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் சேம்பர்ஸ் என்சைக்ளொப்பீடியா வெளியிடுவதற்கு 10 ஆண்டுகளும், என்சைக்ளொப்பீடியா பிரிட்டானிக்காவின் 9ஆம் பதிப்பைத் திருத்தி அமைப்பதற்கு