பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடால்பஸ், குஸ்டவஸ்

45

அடிநிலை

ஆவி அடர்த்திக் கருவி

வழங்குகிறது. படத்திற் காட்டியுள்ள கருவியில் ஆவி யாகும் திரவம் உட்குழலில் ஒரு சீசாவில் இருக்கும். இது ஓர் அளவுகுழலுடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளிக் கலத்திலுள்ள திரவத்தைக் கொதிக்க வைத்தால் அது உள்ளிருக்கும் திரவத்தை ஆவியாக்கிக் காற்றைத் தள்ளும். இக்காற்று அளவுகுழலையடையும். இதன் பருமன் அளக்கப்பட்டுத் திட்ட வெப்ப நிலை அழுத்தத்திற்குக் கணக்கிடப்படும். இது ஆவியின் பருமனுக்குச் சமம். இதிலிருந்தும் ஆவியான திரவத்தின் நிறையிலிருந்தும் ஆவியின் அடர்த்தியைக் கணக்கிடலாம்.

நூல்; Glazebrook, Dic. of App. Phy.- Balanoes.

அடால்பஸ், குஸ்டவஸ் : பார்க்க: குஸ்டவஸ் அடால்பஸ்.

அடிசன், ஜோசப் (1672-1719): ஆங்கிலக் கவிஞரும் சிறந்த கட்டுரையாளருள் ஒருவருமாவர். அவர் படித்துத் தேறியபின் அவருடைய லத்தீன் கவிதையைக் கண்டு அரசினர் அவருக்கு உதவித்தொகை கொடுத்து வந்தனர். அதன்பின் அவர் மார்ல்பரோ என்னும் சேனாதிபதி வெற்றி பெற்றது குறித்துக் கவிதை எழுதியதும் அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. அவரும் அவருடைய நண்பர் ஸ்டீல் என்பவரும் சேர்ந்து டாட்லர், ஸ்பெக்டேட்டர் என்ற வாரப் பத்திரிகைகளை நடத்தி வந்தனர். அவற்றில் அடிசன்

அடிசன்
அடிசன்

எழுதிய கட்டுரைகள் மிகவும் சிறந்தவை. வாழ்க்கையைச் சித்திரிக்கும் கட்டுரையின் பண்பை வகுத்துக் காட்டியவர் அடிசன் என்று கூறுவர். அவருடைய கட்டுரைகளில் காணும் நகைச்சுவையும் எள்ளித் திருத்தும் சுவையும் (Satire) பிறர் மனத்தைப் புண்படுத்தாத பெருந்தன்மை உடையன. அடிசனுடைய கட்டுரைகள் இன்றும் இன்பம் அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் அழகிய நடை கைவர விழைவோர் அல்லும் பகலும் அடிசன் கட்டுரைகளைப் பயிலக்கடவர் என்று டாக்டர் ஜான்சன் கூறுகிறார். அவருடைய கவிதையும் நாடகமும் அவர் காலத்தில் விரும்பப் பெற்றனவாக இருந்தபோதிலும் இக்காலத்தவர்க்குச் சுவை தருவனவாக இல்லை.

அடிதொட்டி (Slaughter house) என்பது மக்கள் உணவுக்கான மிருகங்களைச் சுகாதார முறையில் கொன்று அவைகளின் மாமிசம் முதலியவைகளைப் பிரித்து எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடமாகும். பண்டைக்கால முதல் மிருகங்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டு வந்தாலும், அரசாங்கம் அதற்காக அடிதொட்டிகள் ஏற்படுத்தியது 19 ஆம் நூற்றாண்டிலேயேயாம். பிரான்ஸ் நாடுதான் இதை முதன் முதலில் 1818-ல் அமைத்தது. அது அமைத்தது போன்ற அடிதொட்டிகளையே மற்ற ஐரோப்பிய நாடுகளும் அமைத்து வந்தன. ஆயினும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜெர்மனியில் இறைச்சியில் ஏற்பட்ட நஞ்சினால் ஏராளமான மக்கள் இறக்கவே அந்நாடு புதுவிதமான அடிதொட்டிகளை அமைக்கத் தொடங்கிற்று. இப்போது இன்னும் பல சீர்திருத்தங்களுடன் அவை எல்லா நாடுகளிலும் கட்டப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கம் தனிப்பட்டவர் அடிதொட்டி அமைக்கவிரும்பினால் அதற்கான விதிகளை அமைத்துள்ளது. அந்த அடிதொட்டியிலும், அரசாங்க அல்லது ஸ்தல ஸ்தாபன அடிதொட்டிகளிலும் மிருகங்களைக் கொல்லும்பொழுது கையாளவேண்டிய முறைகளைப் பற்றிய விதிகளையும் இயற்றியுளர்.

சென்னை இராச்சியத்தில் அடிதொட்டி அமைக்க விரும்புவோர் 1919 ஆம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் நான்காவது சட்டத்தின்படி லைசென்ஸ் பெற்றுக் கொண்டு அமைத்தல் வேண்டும். அடிதொட்டியைக் குடியிருக்கும் வீடு அல்லது குடிநீர்நிலையிலிருந்து 100 கஜ தூரத்துக்குள் அமைக்கக்கூடாது. அது காரைக் கட்டடமா யிருக்கவேண்டும். உட்பாகம் வெளியிலிருப்பவர்க்குத் தெரியக்கூடாது. காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ளதாயும், போதுமான நல்ல நீர் உடையதாயும், சாக்கடை வசதியுள்ளதாயுமிருக்கவேண்டும். தளம் ஓதம் தட்டக்கூடியதாக இருக்கலாகாது. மிருகங்களைக் கொன்று மூன்று மணி நேரமாவதற்குள் இடத்தைத் சுத்தப்படுத்த வேண்டும். ஆண்டில் நான்கு முறை வெள்ளையடிக்க வேண்டும். அதற்குள் யாரும் குடியிருக்கக் கூடாது. அங்கு எச்சில் துப்பவும் வேறு அசுத்தம் செய்யவும் கூடாது. . நகராண்மைக் கழகத்தாருடைய அடிதொட்டியில் மிருகங்களைக் கொல்ல விரும்புவோர் முன்கூட்டி அனுமதி பெறவேண்டும். இங்கும், தனி நபர் அடிதொட்டியிலும் மிருகங்களைக் கொல்லும்போது கீழ்க்கண்ட விதிகளை அனுசரிக்க வேண்டும்: நகராண்மை உத்தியோகஸ்தர் பார்வையிட்டு நோயில்லை என்று குறிப்பிட்ட மிருகங்களைத்தான் கொல்லலாம். நோயுள்ள மிருகங்களையும், இறக்கும் தறுவாயிலுள்ள மிருகங்களையும் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது. செத்த மிருகங்களையும் தொட்டிக்குக் கொண்டுவரலாகாது. மிருகங்களை அனாவசியமாகத் துன்புறுத்தாமலே ஓட்டிவரவும் கொல்லவும் வேண்டும். கொல்லப்பட்ட மிருகம் நோயுடையதா யிருந்தால் சுகாதார இலாகா உத்தியோகஸ்தர் அதன் இறைச்சியை விற்கவோ உண்ணவோ அனுமதிக்க மாட்டார். அடித்த பிராணிகளின் உடல்களின்மீது உத்தியோகஸ்தர் முத்திரையிடவேண்டும். முத்திரையிட்டவற்றை அவற்றிற்காக ஏற்பட்ட மூடுவண்டிகளிலேயே மார்க்கட்டுகளுக்குக் கொண்டுபோதல் வேண்டும். அவற்றைத் தூசியோ, ஈயோ அணுகாதபடி பாதுகாக்கவும் வேண்டும். கொன்று மூன்று மணி நேரம் ஆவதற்குள் தோல், குடல், கொம்பு, குளம்பு, மற்றும் கழிவு, மலஜலம் முதலியவற்றை அப்புறப்படுத்தித் தொட்டியைச் சுத்தம் செய்யவேண்டும். இந்த விதிகளை மீறுவோர் அபராதத்திற்கு உள்ளாவர்.

அடிநிலை (Base) : கட்டடச் சிற்பத்தில் அடிநிலை என்பது ஒரு தூணின் அடியில் தரைக்குமேல்