பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோ-சீனா

735

இந்தோ-சீனா

வர். இங்கு வடமொழியில் பல சாசனங்கள் கிடைத்திருக்கின்றன. இறந்த ராஜ வமிசத்தினர் தேவராஜன் என்ற பெயருடன் லிங்க ரூபமாகப் பூசிக்கப்பட்டனர். பல சிற்பங்களில் கோவர்த்தனம் தாங்கிய கிருஷ்ணனும், சிவனும் விஷ்ணுவும் கலந்த ஹரிஹரனும் காணப்படுகின்றனர். ஆனால், மேற்கே தாய்லாந்துடனும், கிழக்கே சம்பா இராச்சியத்துடனும் அடிக்கடி யுத்தம் செய்ய நேர்ந்ததால் 14ஆம் நூற்றாண்டின் பின் காம்போஜ இராச்சியம் சிதைந்தது. 15ஆம் நூற்றாண்டில், தாய்லாந்து அநநாட்டைக் கைப்பற்றியது. 1863-ல் பிரெஞ்சுக்காரரின் அதிகாரம் நாட்டில் பரவியது. 1876-ல் தாய்லாந்து கம்போடியா (காம்போஜம்) வைப் பிரான்ஸுக்கு விட்டுக்கொடுத்தது.

தெற்கு அனாம் பிரதேசத்தில் கி. பி. 2ஆம் நூற்றாண்டில் சம்பா என்னும் இந்து இராச்சியம் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர்கள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். பன்னிரண்டு அரச வமிசங்கள் இங்கு ஆண்டன. முதல் முக்கிய அரசனான ஸ்ரீமாரன் இந்திரபுரத்திலிருந்து ஆண்டான். இப்பிரதேசத்தவர்களுக்குச் சிவனும் பகவதியும் முக்கியக் கடவுளர்கள். 14ஆம் நூற்றாண்டில் அனாம் அரசர்கள் இப் பிரதேசத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.

பிரெஞ்சுக்காரர் நேர்முகமாகக் கொச்சின் - சீனாவை ஆண்டார்கள். 1926-ல் பட்டத்திற்கு வந்த பாவ்டாய் என்ற அரசர் அனாமை ஆண்டார். டாங்கிங், கம்போடியோ, லாவோஸ் என்பவை தனி இராச்சியங்கள். ஆனால் இவைகளும் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டவை. பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராக, 1930-ல் சுதந்திர இயக்கம் ஆரம்பமாயிற்று. அதன் தலைவராக ஹோ-சி-மின் என்பவர் தோன்றினார். பிரெஞ்சுக்காரர் அவ்வியக்கத்தை அடக்க முயன்றனர். இவ்விதமிருக்கையில், இரண்டாம் உலகயுத்தம் மூண்டது. 1941-ல் ஜப்பானியர் இந்தோ-சீனாவில் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து ஹோ-சி-மின் போராடினார். இந் நிலைமையைச் சமாளிக்க ஜப்பானியர் அனாம் அரசர் பாவ்டாயின் கீழ் டாங்கிங்கையும், கொச்சின்-சீனாவையும் இணைத்தனர். 1945-ல் ஜப்பானியர் யுத்தத்தில் தோற்று வெளியேறினர். ஹோ-சி-மின் பிரெஞ்சு ஆதிக்கம் வேண்டுமென்று சுதந்திரப் பிரகடனம் செய்தார். பாவ்டாய் பட்டமிழந்தார். ஆனால், பிரெஞ்சுக்காரர் தங்கள் படைகளைத் திரும்ப இப்பிரதேசத்திற்குக் கொண்டுவந்து, தங்கள் ஆதிக்கத்தை நிறுவ முயன்றனர். தங்கள் படைபலம் கொண்டு ஹோ-சி-மின்னுடன் போர் தொடுத்தனர். 1949-ல் பாவ்டாய் பிரெஞ்சுக்காரர் உதவியால் வியட்நாம் அரச பதவி எய்தினார்; கொச்சின்-சீனாவையும் டாங்கிங்கையும் வியட்நாமுடன் இணைத்தார். கம்போடியா, லாவோஸ் பிரதேச அரசர்களுக்கும் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்ச் சுதந்திரமளித்தனர். தற்போது வியட்நாம், கம்போடியா, லாவோஸ் இப்பிரதேசங்கள் உள்நாட்டுச் சுதந்திரத்துடன் பிரான்ஸோடு வெளி விஷயங்களில் பிணைந்திருக்கின்றன. ஆனால் ஹோ-சி-மின் சில பகுதிகளை வியட்மின் என்னும் பெயருள்ள சுதந்திரக் குடியரசாகப் பிரகடனம் செய்து பிரெஞ்சுக்காரருடன் போராடிக்கொண்டிருக்கிறார் (1953). டி. கே. வெ.

அரசியல் அமைப்பு : இரண்டாவது உலகயுத்தத்தின்போது உருப்பெற்ற வியட்மின் என்ற தேசிய இயக்கத்தினர் ஹோ-சி-மின் என்பவருடைய தலைமையின்கீழ் ஜப்பானியரை எதிர்த்து வந்தனர். ஜப்பான் தோல்வியுற்றதும் வியட்மின் கட்சி இராச்சிய அதிகாரத்தைக் (1945 ஆகஸ்டு 15) கைப்பற்றியது. அனாம் ‘சக்கரவர்த்தியாக’ இருந்த பாவ்டாய் என்ற அதிபர் முடி துறந்து, ஹோ-சி-மின் சர்க்காரில் சேர்ந்து அதைப் பலப்படுத்தினார். டாங்கிங், அனாம், கொச்சின்-சீனா என்ற மூன்று பகுதிகளும் சேர்ந்த வியட்மின் குடியரசு அதே ஆண்டு செப்டெம்பரில் நிறுவப்பட்டது.

பிறகு, பிரிட்டிஷ் படைகள் இந்தோ-சீனாவில் இறங்கிப் பின்னர் வந்த பிரெஞ்சுப் படைகளுக்கு ஊன்றுகால் கொடுத்துவிட்டுத் திரும்பின. மறுபடியும் பழைய படி இந்தோ-சீனா முழுவதும் தங்கள் ஆதிக்கத்துக்குத் திரும்பி விட வேண்டுமெனப் பிரெஞ்சுச் சர்க்கார் விரும்பினர். ஆனால், வியட்மின் குடியரசு நிலைத்துவிட்டது என்பதை உணர்ந்து, சண்டையை நிறுத்திச் சமாதான உடன்படிக்கை ஒன்றை 1946 மார்ச்சு 6ஆம் தேதி ஹோ-சி-மின்னுடன் செய்துகொண்டார்கள். வியட்மின் பகுதியிலிருந்து உடனடியாகவும், கம்போடியா, லாவோஸிலிருந்து சிறிது தாமதித்தும் விலகுவதாகப் பிரெஞ்சுக்காரர் ஒப்புக்கொண்டனர். ஆனால், பாரிஸில் பிரெஞ்சு அரசாங்கத்தில் ஏற்பட்ட மாறுதலின் விளைவாக, வியட்மினுக்குத் தந்த அங்கீகாரத்தை ரத்து செய்து, ஹோ-சி-மின்னுடன் சண்டை செய்வதென்று முடிவாயிற்று. 1946 டிசம்பர் 19-ல் ஆரம்பமான அந்தப் போராட்டம் இன்னும் (1953) நீடித்து வருகிறது. பாவ்டாயை ஹோ-சி-மின் கட்சியிலிருந்து பிரித்து, அவரைத் தங்கள் வசமுள்ள வியட்மின் பகுதியின் தலைவராகப் பிரெஞ்சுச் சர்க்கார் நியமித்துள்ளனர். அவருடைய ஆட்களையும், பிரெஞ்சுப் படைப் பலத்தையும் கொண்டு போரை நடத்திவருகிறார்கள். வியட்நாமின் வடபகுதியிலும், மற்றப் பகுதிகளில் திட்டுத் திட்டாகவும் பல பிரதேசங்கள் ஹோ-சி-மின் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றன. பிரான்ஸுக்குப் பாதகமான ராணுவ நிலைமை 1952 இறுதியில் இருந்தது.

ஹோ-சி-மின் சர்க்காருடைய செல்வாக்கைத் தகர்க்கும் நோக்கத்துடன் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய மூன்றையும் பிரெஞ்சு மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுதந்திர நாடுகள் என்று 1949 மார்ச்சு 8ஆம் தேதி பிரெஞ்சுச் சர்க்கார் பிரகடனம் செய்தார்கள். லாவோஸும் கம்போடியாவும் முடியரசு உள்ளவை. 1950 ஜனவரி 19ஆம் தேதியன்று சீனாவும், 31ஆம் தேதி சோவியத்தும் அதன் சார்பு நாடுகளும் ஹோ-சி-மின் சர்க்காரை அங்கீகரித்தன.

இந்தோ-சீனாவுக்கு சைகானில் பிரெஞ்சுச் சர்க்காரின் பிரதிநிதியாக ஒரு ஹை கமிஷனர் மேலாதிக்கம் வகிக்கிறார். அவருக்கு உதவிபுரிய எட்டுப்பேர் கொண்ட ஒரு மந்திராலோசனைச் சபை உண்டு. இந்த எட்டுப் பேரையும் ஹை கமிஷனரே நியமிக்கின்றார். ‘இணைப்பு இராச்சியங்கள்’ என்று சொல்லப்படும் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரெஞ்சுக் கமிஷனர் உண்டு. இந்த மூன்று இராச்சியங்களின் சர்க்கார்களுக்கு உள்நாட்டு விவகாரங்களில் ஏறக்குறைய முழு அதிகாரம் உண்டு. ஆனால், அதன் பிரயோகம் பிரெஞ்சு ராணுவத்தின் தேவைகளுக்கு உட்பட்டது. ஒவ்வொன்றிலும் தலப் பாதுகாப்புப் படையுண்டு. இம் மூன்று பகுதிகளின் பாதுகாப்புக்கும் பிரான்ஸ் பொறுப்பாளி; எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தல கவுன்சில்கள் உண்டு; ஆனால், இராச்சியாதிகாரம் ஜனநாயக அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.

ஹோ-சி-மின் சர்க்காரில் கம்யூனிஸ்ட் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரித்து வந்துள்ளது. நான்கு கட்சிகள் சர்க்காரில் சேர்ந்துள்ளன. யுத்தம் நீடித்து