பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோ-சீனா

737

இந்தோ-சீனா

வகையும் இந்திய மரபுகளை ஒத்தவை. இருந்தாலும் அவற்றில் சொந்தக் கற்பனைக்கும் குறைவில்லை. கம்போடியா, அனாம் பழங்கலைகளில் இந்திய மணத்துடன் உள்நாட்டு மணமும் கமழ்கிறது.

கெமர்க் கலைகள் (7-12ஆம் நூ.): வடிவ கணித முறைப்படி அமைந்திருப்பதும், மதக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதும் கெமெர்க் கலைகளின் முக்கிய அமிசங்களாகும். கெமர் நாட்டில் கட்டடம் அமைக்கும் முறை தொடர்ச்சியாக வளர்ச்சியுற்றதே இதற்கு ஒரு முதற் சான்று. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னங்கள் செங்கல்லினால் ஆங்காங்குக் கட்டப்பட்ட கோயில்களேயாம். I-ம் ஈசானவர்மன் தன் தலைநகரான சம்போர்பிரய்குக் என்னுமிடத்தில் கட்டிய கோயில் இதற்கு உதாரணமாகும். இது இந்தியாவில் சீர்ப்பூரிலுள்ள இலட்சமணர் கோயிலை ஒத்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜயவர்மன் கம்போடியாவை ஜாவா நாட்டினர் ஆதிக்கத்திலிருந்து மீட்டு, மகேந்திர பர்வதம் என்ற தலைநகரை நிறுவினான். இவ்விடத்தில் ஒரே பீடத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் உள்ளன. 881ஆம் ஆண்டில் முதலாம் இந்திரவர்மனின் ஆட்சியில் ஹரிஹரர் ஆலயம் என்னுமிடத்தில் பாகாங் என்ற பிரமிடு கட்டப்பட்டது. இது மேரு மலையின் சின்னமாகவிருந்தது. இவனுக்குப்பின் வந்த முதலாம் யசோவர்மன் ஆங்கோர் என்னும் நகருக்கு அடிகோலினான். இதன் மத்தியில் உள்ள பினோம் பக்கேன் என்ற மேட்டின்மேல் மணற்பாறையிலான ஐந்து கோயில்கள் இக்காலத்தில் கட்டப்பட்டன. இதன்பின், பிராகாரங்கள் கோபுரத்தைச் சுற்றிலும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டன. தாகாவ், பாபுவான் ஆகிய இடங்களில் உள்ள கோபுரங்கள் இதற்கு உதாரணங்களாகும். இதற்கு முன்னரே 967-ல் பண்டிசிரேய் என்னுமிடத்தில் அழகிய சிறு கோயிலொன்று கட்டப்பட்டது. இதற்குக் கோபுரமில்லை. ஆனால், கம்பீரக் குறைவாய் இருப்பினும், கிமெர்க் கோயில்களில் இதுவே மிக்க கவர்ச்சியும் வனப்பும் வாய்ந்தது. கோபுரங்கள் உள்ள கோயில்களைக் கட்டும் கலை 12ஆம் நூற்றாண்டில் ஆங்கோர்வாட் கோயிலில் உச்சநிலையை அடைந்தது எனலாம். அதன் நடைக்கும் கோயிலைச் சுற்றியுள்ள மூன்று உப்பரிகைகளுக்கும், கோபுரங்களுக்கும், மூலைகளிலுள்ள மேடைகளுக்கும், அவற்றை இணைக்கும் நடைகளுக்கும் மேல் ஐந்து தூபிகள் உயர்ந்து நிற்கின்றன. 12ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 13ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அரசாண்ட ஜயவர்மன் என்னும் பௌத்த மன்னனே கெமர்ப் பேரரசர்களுள் இறுதியானவன். ஆனால் இவன் மத சமுதாய ஸ்தாபனங்கள் பல அமைத்ததால் கட்டடக் கலை வீழ்ச்சியுறத் தொடங்கியது. இவன் காலத்தில் கலையழகில் மயங்கிய சிற்பிகள் கட்டட அமைப்பை மிகச் சிக்கலானதாக்க எங்கெங்கும் கூடங்களையும் உப்பரிகைகளையும் அமைத்துக் கட்டடத்தின் தோற்றத்தையே பாழாக்கிவிட்டனர். இருப்பினும் பயங்கரப் புன்னகையுள்ள முகங்களமைந்த 50 தூபிகள் உள்ள பாயோன் என்ற ஏழாம் ஜயவர்மனின் அரண்மனைக் கோயில் கெமர்க்கலை சாதித்த அற்புதங்களில் ஒன்று. சிறு தூண்களையும் அவற்றின் போதிகைகளையும் கட்டுமுறை வளர்ச்சியை ஆராய்ந்தே ஸ்டெர்ன் என்பாரும் ஜில்பெர்ட் டிகோரால் என்ற அவருடைய மாணவரும் கெமெர்க் கலைகளின் காலவரையறைகளை முடிவுசெய்தார்கள்.

7ஆம் நூற்றாண்டிலேயே சிற்பக் கலையின் அடிப்படையில் மதக் கோட்பாடுகள் அமைந்திருக்கக் காண்கிறோம். இந்தியச் சிற்பத்தில் காணப்படும் திரிபங்கம் என்னும் நிலை படிப்படியாக மறைந்தது. பெருமை உணர்ச்சியும் சிலையின் வடிவத்தைத் திருத்தமாக

பிரஜ்ஞாபாரமிதா (தாரா) பெண் தெய்வம்
உதவி: கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை. ஹானாய்.

அமைக்கும் கலையும் இக்காலத்தில் தோன்றின. பிரசாத் ஆள்தெட் என்னுமிடத்திலுள்ள ஹரிஹரரது அழகிய சிலை இக்காலத்தியது. பத்தாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அமைக்கப்பட்ட சிலைகளின் முகங்கள் அழுத்தமாகவும் கூர்மையாகவும் அமைக்கப்பட்டன. ஆனால் பாந்தேயஸ்ராய் என்னுமிடத்தில் முகக் கலையின் மேன்மை காணப்படுகிறது. மேன்மையான இச்சிலைகளின் வடிவம் அழகு நிறைந்ததாக இருக்கிறதேயன்றிக் காம உணர்ச்சியைத் தூண்டுவதாக இல்லை. பாந்தேயஸ்ராய் ஆங்கோர்வாட் கோயில்களிலுள்ள அப்சரசின் சிலையில் புன்னகையுடன் பெண்மைக்கியல்பான நாணமும் கூடி நிற்கிறது. ஆங்கோர்வாட் கோயிலின் உப்பரிகைச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் குறைப்புடைப்புச் சித்திரங்கள் இவ்வகைச் சிற்பத்திற்குத் தலைசிறந்த உதாரணமாகும். இச்சித்திரங்கள் புராணக் கதைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் குறிக்கின்றன. உப்பரிகையின் தோற்றத்துடன் ஒத்திருக்குமாறு இச்சித்திரங்கள் அமைக்கப்பட்டன. VII-ம் ஜயவர்மன் காலத்துப் பௌத்த சிற்பங்களின் முகத்தோற்றத்தில் மென்மையையும் சாந்தத்தையும்