பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிமைநிலை

47

அடியார்க்குநல்லார்

அடிமைநிலையானது உலக வரலாற்றில் ஆதிகாலத்தில் சீனர், பாபிலோனியர், எகிப்தியர் முதலானகாணப்பட்டது. பண்டைய கிரேக்க நகர ராச்சியங்களில் அடிமைகள் இருந்தனர். இவர்களுக்கு அரசியலிலோ, சமூக வாழ்விலோ எவ்வித உரிமையும் இல்லை. இவர்களை நீக்கிவிட்டு மற்றவர்கள் நடத்தும் இராச்சியத்திற்குத்தான் ஜனநாயகம் என்று அவர்கள் பெயரிட்டனர். ஆகையால், அந்நாட்டில் அடிமைகள் குடிகளாகக் கருதப்படவில்லை என்று தெரிகிறது. ஸ்பார்ட்டாவில் ஹெலட்டுகள் என்னும் அடிமைகள் மிக இழிந்த நிலையில் ஏராளமாக இருந்தனர். ரோமானிய சாம்ராச்சியத்திலும் அடிமைகள் இருந்தனர். கைதிகளும், கடனைத் திருப்பித் தர முடியாதவர்களும் அடிமைகளாயினர். அகஸ்டஸ் சீசர் அடிமைகளின் நிலையைச் சிறிது சீர்திருத்தினான். சொந்தக்காரர்களுக்கு அவர்களைக் கொல்லவும் அதிகாரம் உண்டு என்ற நிலை போயிற்று. இடைக்காலத்தில் அடிமைகள் இல்லாத நாடே இல்லை. முகம்மதிய நாடுகளிலும் அடிமைகள் இருந்து வந்திருக்கின்றனர். வட இந்தியாவில் 13வது நூற்றாண்டில் அடிமை வமிசம் என்ற ஒரு வமிசமே நாட்டை ஆண்டுவந்தது. சில அடிமைகள் விடுதலையடைந்து நல்ல நிலைமைக்கும் வந்துள்ளனர்.

அமெரிக்காவில், வர்ஜீனியா என்னும் இராச்சியத்தில் 1619-ல் முதன் முதல் நீக்ரோ அடிமைகள் குடியிறக்கப்பட்டனர். ஆப்பிரிக்க நீக்ரோக்களை அ. ஐ.நாடுகளின் தென்பகுதிகளில் மிகுதியாகக் கொண்டுவந்து அடிமைகளாக விற்றனர். அ. ஐ. வடநாடுகளுக்கும் தென்நாடுகளுக்கும் அடிமைநிலையைப் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடு அமெரிக்க உள் நாட்டு யுத்தத்தில் கொண்டுவந்து விட்டது. ஆபிரகாம் லின்கன் போன்ற பெரியார்கள் இத்தீமையை எதிர்த்தனர். லின்கன் ஜனாதிபதியாயிருந்தபோது நடந்த உள்நாட்டுப் போரில் வட ராச்சியங்களின் படைகள் போர்க்கள வெற்றி கண்டதால் 1865-ல் விடுதலைப் பேரறிக்கை பிறப்பிக்கப்பட்டது. பிறகு அ. ஐ. நாடுகளில் அடிமைநிலை சட்ட விரோதமாகி விட்டது. அப்போது சுமார் 45 லட்சம் அடிமைகள் விடுதலை பெற்றனர்.

1792-ல் பிரிட்டனிலும், 1833-ல் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளிலும், அதற்கு அடுத்த ஆண்டில் இந்தியாவிலும் அடிமைநிலை ஒழிக்கப்பட்டது, 1924-ல் சர்வதேச சங்கம் நிரந்தர அடிமைநிலைக் கமிஷன் ஒன்றை ஏற்படுத்தி அடிமைநிலை யொழிப்பிற்கான முயற்சிகளை மேற்கொள்ளச் செய்தது. தற்காலத்தில் சட்டரீதியான அடிமைநிலை எந்நாட்டிலும் மிகுதியாக இல்லை.

அடிமைநிலை பற்றிய சட்டங்கள் : 1843-லேயே இந்தியாவில் சட்டப்படி அடிமைநிலை ஒழிக்கப்பட்டு விட்டதால், அது இக்காலத்தில் வெறும் ஆராய்ச்சிப் பொருளாக மட்டும் இருக்கிறது. 1843 ஆம் ஆண்டுச் சட்டம் வந்தபின் முஸ்லிம்களிடையிலும் அடிமை நிலை நீங்கிவிட்டது. இப்போது இந்தியக் குற்றச் சட்டத்தின் 370, 371 ஆம் பிரிவுகள் அடிமைகளை வைத்திருப்பதையும், அடிமை வியாபாரம் செய்வதையும் தண்டிப்பதாயிருக்கின்றன.

அநேகமாக உலகத்திலிருந்து மறைந்து போன இந்த நிலையைப்பற்றிக் கிடைக்கக் கூடிய சட்டங்கள் இவைதாம். ஆயினும் அடிமைகளின் நிலைமையைப்பற்றி அறிய விரும்புவோர் அடிமைநிலையை முற்றும் ஏற்றுக் கொண்டிருந்த ரோமானியச் சட்டத்தை ஆராய்வது பயன் தருவதாகும்.

அடிமையை ஆளாகக் கருதலாமா என்பது ரோமானியச் சட்டத்தில் தெளிவாக இல்லாத ஒரு விஷயமாகும். அடிமையை ஆளாக மதியாமல் பொருளாகவே மதித்து வந்தார்கள். அதற்குக் காரணம் பண்டைய ரோமானியச் சட்டம் அடிமையை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எஜமானுக்கு அதிகாரம் அளித்திருந்ததே யாகும். எஜமான் அடிமையை ஊறு செய்யலாம், சித்திரவதை செய்யலாம். ஆயினும் அடிமை வெறும் பொருளில்லை என்பதைக் காட்டும் அமிசங்களும் அச் சட்டத்தில் காணப்பட்டன. அவற்றுள் சில வருமாறு :— அடிமை கிரிமினல் குற்றங்களுக்குப் பொறுப்பாளியாவது போலவே தார்த்து (Torts) வழக்குகளுக்கும் பொறுப்பாளியாகலாம் ; எஜமானுக்காகச் சொத்துத்தேடலாம். அவன் மதசம்பந்தமான சில சலுகைகள் உடையவனாகலாம். இக்காரணங்களால் அடிமையைப் பொருள் என்று கருதுவதினும் ஆள் என்று கருதுவதே பொருத்தமாகும்.

அடிமைக்கு உரிமைகளும் கிடையா, கடமைகளும் கிடையா என்பர். எஜமான் இச்சையைப் பொறுத்தவை அவனுடைய வாழ்வும் உயிரும். அவன் தேடும் பொருள் அனைத்தும் எஜமானுக்கே உரியதாகும். அடிமைக்கு விரோதமாக எவ்விதத் தீர்ப்பும் செல்லுபடியாகாது. அடிமையானவுடன் அவனுடைய கடன்கள் நீங்கிவிடும். அடிமைநிலை நீங்கிய பிறகுகூட அக்கடன் புத்துயிர் பெறுவதில்லை.

இத்தகைய அடிமைநிலை நாளடைவில் மெதுவாக மாறுதல் அடைந்துவந்தது. இறுதியில் எஜமான் அடிமையைத் திருத்துவதற்காக மட்டுமே அடிக்கலாம் என்றும், அடிமையைக் கொல்லுவது கொலைக் குற்றமாகும் என்றும் ஏற்பட்டது. எஜமான் கொடுக்கும் சொத்தைப் பரிபாலிக்கவும் அதைக் கொண்டு வியாபாரம் செய்தால் ஏற்படும் கடன்களை எஜமானைக் கொடுக்கும்படி செய்யவும் அடிமைக்கு அதிகாரம் ஏற்படுவதாயிற்று.

அடிமைகள் விலை மதிப்புள்ள பொருள்களாகக் கருதப்பட்டனர். கடன் தந்தவர்கள் கடனுக்காக அடிமைகளை ஜப்தி செய்வதை விரும்பினர்.

முஸ்லிம்களிடையே அடிமைநிலை தோன்றியதற்கு வேறு காரணங்கள் உண்டு. முஸ்லிம் அடிமைகள் ரோமானிய அடிமைகளைவிட அதிகச் சுதந்திரமும் பாதுகாப்பும் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. வீ. பி. கோ.

அடியார்க்குநல்லார் என்பவர். சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியத்திற்கு உரை எழுதியவர். இவர், நிரம்பை என்னும் ஊரில் பிறந்தவர் என்பதையும் பொப்பண்ண காங்கேயன் என்ற சிற்றரசனால் பாதுகாக்கப் பெற்றவர் என்பதையும் உரைச் சிறப்புப் பாயிரத்தில் வரும் "அடியார்க்கு நல்லான்; காருந்தருவும் அனையான் நிரம்பையர் காவலனே " என்பதாலும் "பொப்பண்ண காங்கேயர் கோனளித்த, சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை சொல்வித்ததே" என்பதாலும் அறியலாம். நிரம்பையென்னும் ஊர், கொங்கு மண்டிலத்தில் குறும்பு நாட்டில் விசயமங்கலத்தின் பக்கத்திலுள்ளது.

ஞானசம்பந்தர் தேவாரத்தில் வரும் "கண்ணு ளார் கரு வூரு ளானிலை யண்ணலார்அடி யார்க்கு நல்லரே" என்ற அடியில் சிவபிரானுக்குப் பெயராக வந்துள்ள அடியார்க்கு நல்லார் என்ற பெயரை இவ்வாசிரியர் தாங்கியிருத்தலால் இவர் சைவர் என்று கருத இடமுண்டு. "பிறவா யாக்கைப் பெரியோன்" (சிலப். 5-169) என்ற அடிக்கு, "என்றும் பிறவாத யாக்கையுடைய இறை