பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடையாறு

52

அண்டிரோமீடா

எழுதினாலும் அடைமானம் வைத்தவர் தவணை கடந்த பிறகும், பணத்தைச் செலுத்திச் சொத்தை மீட்டுக் கொள்ள உரிமையுடையவரே. ஆனால் அடைமானம் என்று எழுதினாலும் அது உண்மையில் விற்பனையாகவே இருக்குமானால், குறிப்பிட்ட தவணைக்குள் பணத்தைச் செலுத்திச் சொத்தைத் திரும்ப விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தால், தவணை கடந்த பிறகு பணத்தைச் செலுத்திச் சொத்தை மீட்க முடியாது.

அடையாறு சென்னையின் தென்பகுதியிலுள்ள ஒரு சுற்றுப்பட்டு. அடையாறு என்னும் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் அமைந்துள்ளதால் இதற்கு அடையாறென்றே பெயர் அமைந்தது. 1747-ல் இவ்விடத்தில் பிரெஞ்சுக்காரருக்கும் ஆர்க்காட்டு நவாபிற்கும் நடந்த போரில் பிரெஞ்சுக்காரர் வெற்றியடைந்தனர். பிரம்மஞான சபையாரின் உலகத் தலைமைக் காரியாலயம் இங்கே இருக்கிறது. அடையாற்றின் கரையில் உள்ள பெரிய ஆலமரம் உருவில் மிகப் பெரிதாயிருப்பது பற்றி உலகப்புகழ் பெற்றது.

அடையாறு நூல்நிலையம் சென்னைக்கு அருகிலுள்ள அடையாற்றில் பிரம்மஞான சங்கத்தை நிறுவிய கர்னல் ஆல்காட் என்பவரால் அச்சங்கத்தில் சமஸ்கிருத இலக்கியத்தையும் இந்திய ஆன்மப் பண்பாட்டையும் வளர்ப்பதற்காக 1885-ல் நிறுவப்பட்டதாகும். துவக்கத்தில் இதில் இருநூறு நூல்களே இருந்தன. இப்போது 76,713 நூல்கள் உள்ளன. இவற்றுள் கையெழுத்துப் பிரதிகள் 16,355. உலகத்திலுள்ள பெரிய சமஸ்கிருதக் கையெழுத்துப் பிரதி நூல்நிலையங்களுள் இது ஒன்று. ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலுள்ள பிரதிகளும் ஏராளமாக இருக்கின்றன. சீனப் பிரதி ஒன்று கறுப்புக் கடுதாசியில் பொன் எழுத்தால் எழுதியது, 33 அடி நீளம் உள்ளது. இந்தியாவில் காணப்படும் மிகப் பழைய குர்ஆன்களுள் ஒன்றும் இங்கு இருக்கிறது. சகல துறை நூல்களும் உள்ளன. இந்நூல் நிலையம் பிரம்ம வித்தியா என்ற ஆராய்ச்சி இதழ் ஒன்று நடத்தி வருகிறது. பல நூல்களும் வெளியிட்டு வருகிறது. இந்நூல்நிலையத்தின் நலனை உலக முழுவதும் பயன்படுத்துமாறு செய்வதற்காக அடையாறு நூல்நிலையச் சங்கம் என்பது 1936-ல் நிறுவப் பெற்று நடந்து வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் உலகத்தின் பல பாகங்களிலிருந்து வந்து பயன்பெற்றுப் போகிறார்கள்.

அடோவா : இத்தியோப்பியாவில் ஓர் ஊர். 1896-ல் அந்நாட்டைக் கைப்பற்ற முயன்ற இத்தாலியப் பிரதமர் கிரிஸ்பி, ஜெனரல் பாரட்டியரி வசம் அனுப்பிய படை இவ்வூரில் இத்தியோப்பியர்களால் முறியடிக்கப்பட்டது. வி. என். ஹ.

அடோனிஸ் : கிரேக்க புராணக் கதையில் வரும் ஓர் அழகிய இளைஞன். ஆப்ரொடைட்டி என்னும் அன்புத் தேவதை அவன்மீது காதல் கொள்ளுகிறாள். அவனுக்கு வேட்டையில் விருப்பம் மிகுதி. வேட்டையில் உள்ள விபத்துக்களைச் சொல்லி வேட்டைக்குப் போக வேண்டாமென்று அவள் அவனை எச்சரிக்கிறாள். ஆயினும் அவன் போய் ஒரு காட்டுப் பன்றியால் உயிரிழக்கிறான். துன்பத்தைத் தாங்கமுடியாமல் அவள் அவனுடைய இரத்தத்தை ஒரு அனெமொனி அல்லது காற்றுப்பூ என்னும் செந்நிறப் பூவாக மாற்றுகிறாள். புரோசெர்ப்பினா என்னும் பாதாள உலகத்துப் பெண் அவனை உயிர்ப்பிக்கிறாள். அதற்காக அவன் இருண்ட பாதாள உலகத்திலே அவளோடு ஆறுமாதம் இருக்கவேண்டியவனாகின்றான். மற்ற ஆறு மாதம் ஆப்ரொடைட்டியுடன் இருக்கலாம். இந்தக் கதை பருவங்களின் மாறுதலைக் காட்டுவது என்பார்கள்.

அண்டங்காக்கை இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் இரண்டு காக்கை இனங்களில் பெரியதும் முழுவதும் கருகிறமுள்ளதுமான இனம். பார்க்க: காக்கை.

அண்டர்மகன் குறுவழுதி கடைச் சங்க காலப் புலவர். தொகைநூல்களிற் குறுவழுதியார் என்னும் பெயர் காணப்படுகிறது. அவரும் இவரும் ஒருவரோ என்பது ஐயத்துக்கிடமானது. வழுதி என்ற பெயராற் பாண்டிய மரபினரென்பது விளங்கும். (புறம்.346 ; குறுந். 345; அகம். 150,228).

அண்டலூஷியா (Andalusia) : தென் ஸ்பெயினிலுள்ள ஒரு பெரும் பிரதேசம், இது 1833-ல் எட்டுச் சிறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. பரப்பு : 33.712 ச. மைல். மக் : 5,29,362 (1940) இப்பிரதேசத்திற்குப் புழைய தலைநகர் செவீல். காடிஸ், செவீல், கார்டோவா, கிரனாடா முதலியன முக்கிய நகரங்கள். நெல்சன் கடற்போரில் வெற்றிகண்ட ட்ரபால்கர் அண்டலூஷியாவின் தென்கடற் கரையில் இருக்கிறது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டுவரையில் இங்கு நிலைத்திருந்த மூர்களுடைய ஆட்சியில் ஸ்பெயின் தேசத்தின் இப்பகுதி பல நன்மைகளை எய்திற்று.

அண்டிரன்: இவனுக்கு ஆய் எனவும் ஆய் அண்டிரன் எனவும் பெயர் வழங்கும். வேளாளன். ஊர் பொதிகைக்கு அருகிலுள்ள ஆய்குடி. கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பாம்பு நல்கிய நீல ஆடையை ஆலின்கீழிருந்த சிவபெருமானுக்குச் சாத்தியவன் (சிறுபா: 96-99). யானைகளைப் பரிசில்களாகக் கொடுத்தவன். கொங்குநாட்டாரை மேற்கடற் பக்கத்தே ஓட்டியவன். இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச் சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார் என்போர். இவருள் முடமோசியாரே இவ்வள்ளலின் பெருமைகளை மிகுதியாகப் பாடியுள்ளார். (புறம். 127-136, 240-41, 374-75, நற். 167).

அண்டிரோமீடா (Andromeda) என்பது வடக்கே உள்ள நட்சத்திர மண்டலங்களில் ஒன்று. இது ஆசந்தி என்னும் காசியோப்பியா மண்டலத்தின் அருகில் உள்ளது. காசியோப்பியாவின் மகள் அண்டி ரோமீடாவின் கற்பை மெச்சி அதீனா என்னும் தேவதை அவளுக்கு நட்சத்திரப் பதவி கொடுத்ததாகக் கிரேக்க புராணம் கூறும். இந்த மண்டலத்திலிருக்கும் அல்மக் (Almach) ஓர் அழகான இரட்டை நட்சத்திரம். இது சிறு டெலிஸ்கோப் மூலம் தென்படும். அதிலுள்ள பெரிய நட்சத்திரம் மஞ்சள் நிறமாகவும், சிறியது நீலம் கலந்த பச்சையாகவும் ஒளிவிடுவது அழகாயிருக்கும். இவை இரண்டும் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. ஒரு நல்ல டெலிஸ்கோப் வழியாகப் பார்த்தால் பச்சை நட்சத்திரமும் இரட்டை நட்சத்திரமாய் இருப்பது தெரியும். இந்தப் பச்சை இரட்டை நட்சத்திரமும் பெரிய மஞ்சள் நட்சத்திரமும் ஒன்றையொன்று சுற்ற 55 ஆண்டுகள் ஆகின்றன. இந்த மண்டலத்திலுள்ள நெபுலாவே சுழல் நெபுலாக்களுள் மிகுந்த ஒளியுடையதாகும். இது ஒன்றே வெறுங் கண்ணால் பார்க்கக்கூடிய நெபுலாவாகும். இது ஒன்பது லட்சம் ஒளி ஆண்டுத் தொலைவில் இருக்கிறது. பெரும்பாலும் நெபுலாக்கள் நம்மைவிட்டு எட்டிப் போவனவாக இருக்கின்றன. நம்மை நோக்கி வரும்