பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டோரா

53

அண்ணாமலை ரெட்டியார்

ஒரு சில நெபுலாக்களுள் இது ஒன்று. இதை முதன் முதல் கண்டவர் பத்தாம் நூற்றாண்டிலிருந்த ஆல்சூபி என்னும் அரபு அறிஞர் என்று கூறுவர். இதுவே முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட நெபுலாவாகும்.

அண்டோரா: உலகிலுள்ள மிகச் சிறு குடியரசு நாடுகளில் ஒன்று. பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையே, மத்தியதரைக் கடலுக்கு 80 மைல்

அண்டோரா

மேற்கே யமைந்துள்ளது. 9 ஆம் நூற்றாண்டில் சார்லமேன் காலத்திலிருந்து இது சுதந்திர நாடாக இருந்து வருகிறது. இந்நாட்டவர்கள் விவசாயம், ஆடு மேய்த்தல் முதலிய தொழில்களில் ஈடுபடுபவர்கள். இங்குப் புகையிலை மிகுதியாக விளைகிறது.

இக்குடியரசின் ஆட்சி இருபத்துநான்கு அங்கத்தினர்கள் கொண்ட ஒரு சபையால் நடத்தப்படுகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் வழங்கும் காட்டலான் என்னும் மொழியே இங்கும் பேசப்படுகிறது. பரப்பு : 191 சதுர மைல். மக்.5400 (1950).

அண்ணாமலைச் செட்டியார், ராஜா, சர், (1881-1948): சிதம்பரத்தருகிலுள்ள அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர். இத்தகைய வள்ளன்மைக்காகச் செட்டிநாட்டு ராஜா என்னும் பரம்பரைப் பட்டம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பெற்றவர். முத்தைய செட்டியாரின் மைந்தராகக் கானாடுகாத்தானில் 30-9-1881-ல் பிறந்தார். இவர் தமது தந்தையாரிடமிருந்து தொழில் முறை பழகி வியாபாரத்துறையில் மிகுந்த சிறப்பெய்தினார். 1910-ல் காரைக்குடி நகரசபைத் தலைவராகவும்,

ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார்

1916 -9-ல் சென்னைச் சட்டசபை உறுப்பினராகவுமிருந்து பணியாற்றினார். 1921-1935-ல் இராச்சியக் கவுன்சில் (Council of States) உறுப்பினராகவும், 1934-44-ல் மத்திய சட்டசபை உறுப்பினராகவும் இருந்தார். கானாடுகாத்தானில் லேடி பென்ட்லண்டு மருத்துவச்சாலையையும், சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியையும் நிறுவினார். அரசாங்கம் இவருக்கு 1922-ல் திவான்பகதூர்ப் பட்டமும், 1922-ல் சர் என்னும் பட்டமும் அளித்தது. 1927-ல் சிதம்பரத்தில் தமிழ்க் கல்லூரியையும், வடமொழிக் கல்லூரியையும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையும், 1928-ல் இசைக் கல்லூரியையும் அமைத்தார். 1928-ல் மேற்கொண்டு இருபது இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து மேற்கூறிய கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக நிறுவினார். 1932-ல் சென்னைப் பல்கலைக் கழகம் இவர்க்கு எல். எல்.டீ. பட்டமும், 1942-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டீ, லிட். பட்டமும் வழங்கின. பன்முறை மேனாடுசென்று பல விஷயங்களை அறிந்து வந்தார். சிதம்பரம், திருவண்ணாமலை, கரூர் போன்ற பல தலங்களிலுள்ள கோயில் திருப்பணிகளுக்குப் பொருள் உதவி செய்துள்ளார். இவர் செய்த தில்லை கோவிந்தராஜர் கோயில் திருப்பணி போற்றத்தக்கது. சிதம்பர நகர மன்றமும், பூங்காவும் இவருடைய கொடைகளாகும். இவர் மிகுந்த தமிழ் மொழிப் பற்றும் தமிழிசைப் பற்றும் உடையவர். புலவர்களை ஆதரித்தார். தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இவரைத் தலைவராகவும், டாக்டர் சர். ஆர். கே. சண்முகம் செட்டியாரைத் துணைத்தலைவராகவும் கொண்ட தமிழிசைச் சங்கத்தை நிறுவினார். மறைவு: 15-6-48.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் : ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரால் நிறுவப்பட்ட மீனாட்சி கல்லூரியையும் அதற்கேற்பட்ட ரூபாய் 40 இலட்சம். பெறுமான சொத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்டு அவர் நன்கொடையாக அளித்த 20 இலட்சமும், சென்னை அரசியலார் அளித்த 27 இலட்சமுமாகிய உதவிகளை ஏற்று இப்பல்கலைக் கழகம் 1929-ல் நிறுவப்பெற்றது. இங்கு மற்றக் கலைகளுடன் பொறியியல், தொழில் நுட்பவியல், விவசாயம் முதலிய கலைகளும் கற்பிக்கப்படுகின்றன. தமிழ் மொழியையும் தமிழிசையையும் வளர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகும். சென்னைக்கு 150 மைல் தூரத்தில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் சிதம்பரத்தின் அருகில் இஃது அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 550 ஏக்கர் விளையாட்டு நிலம் 120 ஏக்கர். தபால் தந்தி நிலையங்களும், விருந்தினர் விடுதிகளும், மருத்துவச்சாலையும் இக்கழக எல்லையில் உள்ளன.

பொறியியற் கல்லூரி நிறுவுவதற்காக டாக்டர் அழகப்ப செட்டியார் 5 இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். திருவாங்கூர் மகாராஜா மாணவர் விடுதிக்காக 1 இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்தனர். திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் தமிழ் வளர்ச்சியின் பொருட்டு நிலமும் தொகையுமாக 3 இலட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.

சென்னைக் கவர்னர் இதன் சான்சலராகவும் ராஜா அண்ணாமலை செட்டியாரின் வாரிசார் புரோ சான்சலராகவுமிருப்பர். பல்கலைக் கழக நிருவாகம் செனட்டு, சிண்டிகேட்டு என்ற பேரவைகளைக்கொண்டு நடைபெறுகிறது.

அண்ணாமலை ரெட்டியார் : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கரிவலம்வந்தநல்லூர் என்னும் சிவத்தலத்திற்கு அருகில் உள்ள சென்னிகுளம் என்னும் சிற்றூரில் சென்னவ ரெட்டியார், ஓவு அம்மாள் என்னும் இருவர்க்கும் அருமை மகனாக அண்ணாமலை ரெட்டியார் 1861 ஆம் ஆண்டிற் பிறந்தார். இவர், சிறு பருவத்தில் உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்திற் பயின்று, நிகண்டும், அந்தாதிகள் முதலான சில சிற்றிலக்கியங்களும் கற்றுத் தேறினார். பின்னர் யமகம் திரிபு முதலிய சொல்லணிகளும், பொருள் நயமும் அமையச் செய்யுளியற்றுந் திறன் படைத்தார். மேலும் தாம்