பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

15 ஆண்டுகளும் ஆகியிருக்கின்றன. ஜப்பான் மொழியில் 10 தொகுதி கொண்ட கலைக் களஞ்சியம் வெளியிட 12 ஆண்டுகளும், இத்தாலிய மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிட 9 ஆண்டுகளும் ஆகியிருக்கின்றன. ஆதலால் எடுத்துக்கொண்டிருக்கும் பணியின் தன்மையையும், இதுவரை இதுபோன்ற முயற்சி தமிழில் நடந்திராததால் அவ்வப்போது நேர்ந்த சிக்கல்களையும் எண்ணிப் பார்த்தால் இதுவரையில் ஆன காலம் அவ்வளவு நீண்டதன்று. ஆயிரக்கணக்கான அறிஞர்கள் இம் முயற்சியில் பங்குகொண்டு உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் உதவியின்றி இதனைச் செய்திருக்க முடியாது. கலைக்களஞ்சிய அலுவலகத்தில் பிரதம ஆசிரியர் முதலிய அனைவரும் நிறைந்த பக்தியுடனும் ஆர்வத்துடனும் பாடுபடுகின்றனர். இம் முயற்சியில் உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றி.

இத்தகைய அரும்பெரு முயற்சியில் நிறைவு காண்பது அரிது. ஆங்கிலத்தில் முதலில் வந்த என்சைக்ளோப்பீடியாவையும், அண்மையில் வெளிவந்திருப்பதையும் ஒப்பீட்டுப் பார்த்தால் அவற்றிடையுள்ள பெரிய வேறுபாடு வியப்பை உண்டாக்காமல் இராது. இதுவும் இம்மகத்தான துறையில் தமிழில் செய்யப்பெற்ற முதல் முயற்சி. தமிழ் வளரவும், தமிழ் மக்கள் அறிவுத் துறைகள் அனைத்திலும் மேம்பாடுறவும், இன்னும் சிறப்பான முயற்சிகள் வெளிவர அடிப்படையாக இருக்கவும், இது உதவவேண்டு மென்பது தான் எங்கள் பிரார்த்தனை. தமிழ் மக்கள் இதை ஏற்று, வாழ்த்தி அருள்வார்களாக.

இங்ஙனம் தமிழ் மக்களின் முயற்சியால் ஆக்கப்பெற்ற இம் முதல் தொகுதியைத் தமிழ் அன்னையின் திருவடி மலர்களில் சமர்ப்பிக்கின்றோம்.

சென்னை,
ஜய, சித்திரை, 1

தி. சு. அவினாசிலிங்கம்