பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுசக்தி

63

அணுசக்தி

விளைவு நடைபெறாது. தேவையானபோது தக்க சாதனத்தினால் அவற்றை வெகுவிரைவாக ஒன்று சேர்ப்பார்கள். இவ்விதம் ஒன்று சேர்த்த பொருளின் அளவு அவதி அளவைவிட அதிகமாவதால் தொடர்விளைவு தொடங்கி அணுகுண்டு வெடிக்கும். ஒரு பகுதியை இன்னொரு பகுதியை நோக்கிச் சுட்டு அவ்விரண்டும் ஒன்று சேருமாறு செய்து அணுகுண்டை வேண்டியபோது வெடிக்கச் செய்வது பொதுவாகக் கையாளப்படும் முறையாகும்.

குண்டின் சக்தி வெளிவரத் தொடங்கியதும் தோன்றும் வெப்பத்தால் அதன் பல பகுதிகள். இமைப் பொழுதில் ஆவியாகிவிடுகின்றன. காற்றும் சூடேறுகிறது. சூடேறிய காற்றுப்படலம் பெரிய தீக்கோளம்போல் தோன்றுகிறது. இத் தீக்கோளம் பெருகி மேலே செல்கிறது. மேலெழும் காற்றானது தூசு, புகை முதலியவற்றைத் தன்னுடன் கொண்டு செல்ல முயலும். இதனால் இவை ஒரு வால்போல் தீக்கோளத்தின் கீழ்த் தென்படும். குண்டு வெடிக்கும்போது உண்டாகும் கதிரியக்கத்தால் காற்று மூலக்கூறுகள் அயானாகி ஊதா நிறத்துடன் ஒளிரும். மேலெழும் தீக்கோளம் பிறகு பக்கவாட்டில் அகன்று பெரிய நாய்க்குடை போல் தோன்றும்.

இதுவரை பயன்பட்டுவந்த படைக்கலங்களுள் அணுகுண்டே பெரு நஷ்டம் விளைவிக்கவல்லது. சாதாரண குண்டுகளையும் அணுகுண்டையும் ஒப்பிட்டால் நாசவேலையில் இதன் ஒப்பற்ற திறமை தெளிவாகும். ஜப்பானிய நகரங்களின் மேல் எறியப்பட்ட அணுகுண்டுகள் தீக்குண்டுகளினால் விளையும், உயிர்ச்சேத்தைப்போல் சுமார் 19 மடங்கு சேதத்தை விளைவித்தன. அதிர்ச்சியினால் ஓர் அணுகுண்டு விளைவிக்கும் சேதம் சுமார் 200 டன் நிறையுள்ள அதிர்ச்சி வெடிகுண்டுகளால் விளைவதற்கு ஒப்பானது. ஓர் அணுகுண்டிலிருந்து வெளியாகும் ஆற்றல் அனைத்தையும் பெற முடிந்தால் வலிமையான வெடிமருந்தான டி. என். டி. என்ற பொருளில் 20,000 டன் வெடிப்பதனாலுண்டாவதற்குச் சமமாகும்.

அணுகுண்டு பலவகைகளில் நாசத்தை விளைவிக்கிறது. வலிமையான அதிர்ச்சி அலைகளாலும், நொடிப் பொழுதில் தோன்றும் ஏராளமான வெப்பத்தாலும் வலிவான கதிர்ப்புக்களால் நேரும் பலவேறு தொல்லைகளாலும், இக்கதிரியக்கப் பொருள்கள் காற்றிலே பரவுவதால் நேரும் விளைவுகளாலும் இது நாசம் விளைவிக்கிறது. ஹிரோஷிமாவில் வீழ்ந்த குண்டு 7 ச. மைல் பரப்பை அடியோடு அழித்தது. மேடுபள்ளங்கள் நிறைந்த நாகசாகியில் சமார் 4 ச. மைல் பரப்பில்தான் சேதம் விளைந்தது; எனினும் இங்கு விளைந்த நாசம் இன்னும் கடுமையானது. போருக்குப்பின் ஆக்கப்பட்டிருக்கும் அணுகுண்டுகள் இன்னும் வலிவானவை என்று கருதப்படுகிறது. இத்தகைய குண்டுகளால் பெரு நகரங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கி விடமுடியும். வேறுவகைக் குண்டுகளுக்கு எதிராகப் பயன்படும் தற்காப்புச் சாதனங்கள் அணுகுண்டு வீச்சின்போது. அறவே பயனற்றவையாய்விடுகின்றன.

1946-ல் பசிபிக் சமுத்திரத்திலுள்ள பிக்கினி பவளத் திட்டில் கடலடியில் அணுகுண்டை வெடித்து இதன்

763 × 600

பிகினி அணுகுண்டு சோதனை
உதவி : அ. ஐ. நாடுகள் செய்தி நிலையம்