பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14☐

தரையைத் தொடுமாறு போடுவார். பெண்களின் கூந்தல்தான் பாதத்தைத் தொடும் என்பர். இவரணிந்த துண்டோ தோளிலிருந்து தரையைத் தொடுமாறு அமைந்து அதிலோர் கவர்ச்சியை உண்டாக்கும்.

1954-இல் ரூபாய் இருநூறு

1954 முதல் கலைஞரின் முரசொலி வார இதழில் நான் தொடர்ந்து கவிதை எழுதி வந்தபொழுது, அன்பளிப்பு ஏதாவது எனக்குத் தரவேண்டும் என்று நினைத்து, நேரில் கொடுத்தால் நான் ஏதாவது நினைத்துக் கொள்வேனோ என்று கருதி, எனது சட்டைப் பையில் நானறியாமல் ரூபாய் நூறோ, இருநூறோ வைத்துவிடுவார். 54-இன் அத்தொகை இந்த 88-இல் எத்தனை மதிப்புடையது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அண்ணா, பேராசிரியர், நாவலர் போன்றவர்கள் ஏடுகள் நடத்திய காலத்தில் கலைஞரும் 'முரசொலி' வார ஏட்டை நடத்தியவர். மற்றவர்கள் எல்லாரும் தங்கள் இதழ்களில் அச்சு எழுத்துக்களைக் கொண்டு கவிதைத் தலைப்புகளை வெளியிட்டபோது, இவரோ அச்சுரு செய்து கலைநயத்தோடு வெளியிடுவார்.

22.4.55 முரசொலி வார இதழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு சிலை வைப்போம் என்று முதன் முதலாகக் கவிதையில் எழுதியவன் நான், எனது அந்தக் கவிதைக்கு, பாவேந்தர் சிலை போன்று படம் வரைந்து படத்தோடு கவிதையை இடம்பெறச் செய்தவர் கலைஞர் ஆவார். பொருளாதார நெருக்கடியில் அவரிருந்த அந்த நாளிலேயே இத்தகைய கலையுணர்வோடு கவிதைகளை வெளியிடச் செலவு செய்யத் தயங்காதவர் அவர்.