பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பழிகளையும் துர்ப்பாக்கியங்களையும் சுமந்து கொண்டு சீதா கல்கத்தாவுக்குச் செல்கிறாள். பொதுநலத் தொண்டு காரணமாக ராகவன் படுத்த படுக்கையாகிறான், அவனுக்குப் பணிவிடை புரிகிறாள். கணவனும் மனைவியும் குழந்தையுமாக அவர்கள் குடும்பவாழ்வு செம்மையுற நடக்கிறது.

அப்போது, மீண்டும் தெய்வ சோதனை நிகழ்கிறது. வகுப்புக் கலவரம் தலை விரித்தாடுகிறது. மகளைக் காப்பாற்ற மெளல்வி சாகிபு உருவத்தில் துரைசாமி வந்து, அவளைக் காப்பாற்றும்போது, அவள் ஆற்றில் சாய்கிறாள். சீதா இறந்துவிட்டதாக ராகவன் நினைத்தான்.

ஆனால் சீதாவோ பிழைத்துவிடுகிறாள். தன் தந்தை மூலம் தாரிணி தன் சொந்த அக்காள் என்ற உண்மையை அறிந்ததும், அவளை ஒருமுறை காண விரும்புகிறாள். சீதா தன் வீட்டில் நுழையும் பொழுது, தாரிணியும் ராகவனும் இருப்பதை அறிகிறாள். தாரிணி முகத்திரையுடன் காட்சி தருகிறாள். தாரிணியும் ராகவனும் தம்பதிகளாக வேண்டுமென்ற சீதாவின் கனவைப்பற்றி எடுத்துச்சொல்லி, அவளது அனுமதியைக் கோருகிறான் ராகவன். ஆனால் தாரிணி பொதுப்பணி காரணமாக, கை ஒன்று வெட்டப்பட்டு, கண் ஒன்றும் பறிபோய் நின்ற கோலத்துடன் காட்சிகொடுக்கிறாள். ராகவன் தடுமாறுகிறான். அவனுக்குப் பாமா மீது இப்போது நாட்டம்.

13