பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சலமா? ஆண்டவனா? யாரும் இல்லை; யாரும் காரணமாக இருக்க முடியாது. இருக்கவும் தேவையில்லை. ஆனால் ஒரே ஒருவர் மீது மட்டும்தான் நான் ‘குற்றப்பத்திரிகை’ படிக்கிறேன். அந்த ஒருவர்: திரு ‘அகிலன்!’


ஆண்டாள்தான் உமா!

ஆண்டாள் பாத்திரம் என்றால், எனக்கு என்றுமே ஓர் ஈடுபாடு. அது என் குறையென்று மதித்து நிர்ணயிக்கும் ‘பரிபக்குவம்’ உங்களுக்கு வளர்ந்திருந்தால், அதுவே என் வெற்றியெனக் கொள்வேன். என்னுள் இருக்கக்கூடிய குறையையே நிறையாகக் கண்டு அதையே வெற்றியாகக் கைக்கொண்டு உலவுகின்ற என்னைப் போலவேதான் ஆண்டாளும் இருந்தாள்; மண்ணில் இருந்துகொண்டே விண்ணுக்குத் தாவிப் பழகினாள். பேதை மனம் தெய்வத்தைக் காதலித்தது. அவளுடைய குறையை அவள் அறிந்திருந்தாள். அந்தக் குறைபாடு தான் கடைசியில் அவளிடம் கண்ணபிரானக் கொணர்ந்தது. இங்கேயும் குறை வெற்றி கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறதே? உங்களால் உணர முடிகிறதா? இல்லையா...?

ஆண்டாள் தெய்வத்தைக் காதலித்தாள். ஆமாம், ‘காதல்’ என்றால் என்ன அர்த்தம்? பலங் கெட்ட மனத்தின் இழிவான உணர்ச்சி என்கிறார்கள். காதல் என்பது தெய்வீகமானது என்று திரையில் 'நல்ல' கதாநாயகர்கள் சொல்லுகிறார்கள். ‘காதலிக்காமல் என்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது!’ என்று உளறிக்கொட்டிய மேலை நாட்டுப் பித்துக்குளியைப் பற்றியும் நீங்கள் அறிவீர்கள்.

171