பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உமா!...என் போன்ற வாசகர்களின் மனங்களிலே நீ என்றென்றும் வாழ்வாய், அம்மா...!


பிறந்த விட்டுச் சீதனம்

உமாவின் பிறந்த வீட்டுச் சீதனம் அந்தப் பாவை விளக்கு.

இனம்புரியாத இயற்கையின் உள்ளுணர்வுச் சக்தியுடன், மனோதத்துவப் பின்னணியில் அன்புக் குரலெடுத்துப், பாசத்தையும் பக்தியையும் பண்பையும் குழைத்துச் ‘சாகாத குரல்’ கொடுத்துக் கூவிக் கொண்டிருக்கும் ‘பச்சைக் குழந்தை’யின் இதய ஒலியைத் தான் தணிகாசலம் செவிமடுத்துக் கொண்டிருக்கிறானா?’ “என் குழந்தை கல்யாணி! கல்யாணி என்னுடைய குழந்தை!” என்று அறிவறியாப் பெண்போல உரிமையிழந்திருந்த நேரத்தில் அலறித் துடித்த உமா, இப்போது தன்னுடைய உரிமையை நிலைப்படுத்திக்கொண்டு முடிந்ததும், தன் குழந்தையை உண்மையிலேயே தேடிக்கொண்டு போய் விட்டாளே!

‘என்னை அறவே மறந்துவிட்டு நீங்கள் எழுதுங்கள்!’ என்று மிக எளிதாக உமா தணிகாசலத்திடம் வேண்டினாள். அவனை மறந்துவிடத்தான் அப்படிக் கண்ணீர் வடிக்கிறானா அவன்? ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்!’ என்று ஒருவரி மறுமொழி அளித்திருந்தால் உமா அழிந்து பட்டிருக்கமாட்டாளே என்கின்ற மனச்சான்று அவனை அக்கக்காகப் பிய்த்தெடுத்து குதறிக்கொண்டிருக்கிறதா? அவள் கொடுத்து வைத்தவள்; அவளுடைய லட்சியப் புள்ளியான தணிகாசலத்தின் இதயத்தின் இதயத்தைப்-

177