பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆகவேதான், மனிதன் தனது வல்லமையின் துணையினால் பலவீனனாகவும், தன்னுடைய பலவீனத்தின் சார்பிலே வல்லவனாகவும் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து தவித்து, ஒன்றும் அறியாப் பரம்பொருளையும் தவிக்கச் செய்து வருகிறான்.

இப்படிப்பட்ட ‘மனித’னின் நேர்சந்ததி நம் கதாநாயகன்-தலையாய நாயகன்-ராகவன். அவனுக்கென்று ஒரு வீம்பு இருந்தது. அந்த வீம்பு ஆங்கில நாட்டிலிருந்து இறக்குமதியாகியிருந்தது. ‘ஒருமுறையாவது காதலிக்காமல் இருப்பவன் பைத்தியக்காரன்!” என்கிற மேலைநாட்டவரின் கீழ்ப்புத்தி இவனையும் தொற்றிக் கொண்டதில் தவறு ஏதும் இல்லை. தவறுதலுக்குமட்டும் ‘ஏது’ உண்டு. அது ’விதியின் பிழை’ என்று தான் கம்பநாடாழ்வாரை ஒட்டி நானும் சொல்லவேண்டியிருக்கிறது.

‘வாழ்வை நாணற்குழல்போல நேராக அமைத்துத் தா!’ என்று வேண்டிக்கொள்கிறார் வங்கக்கவி தாகூர்.

ராகவனுக்கோ தன் இல்வாழ்வைக்குறித்து துளியும் அக்கறையில்ல. அக்கரைப் பச்சைபோலத் தெரிகிற காதல் வாழ்வில்தான் குறி! சபலசித்தம் வாய்க்கப்பெற்ற இவன், சலனமனம்கொண்டு நிற்கிறான்.

ஆதலால்தான், தாஜ்மகாலில் தாரிணியை ‘உயிருடன்’ திரும்பச் சந்தித்ததும், ‘பழைய வாசனை’ அவனுக்குத் திரும்புகிறது. அவன் தாரிணியைக் கண்டவுடன் செய்வகை புலனாகமல், புலன்கள் அனைத்தும் செயலற்ற நிலையில் அப்படியே நிற்கிறான். உடன் நின்ற சீதாவையும் மறந்துபோகிறான். தாரிணி என்ற ஒரு நினைவுதான்

28