பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


திலகவதி - கலிப்பகையார், அவர்களின் நிறைவடையாத உறவு - இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக்கொண்டு இந்த நாவலைப் படித்தால், இதன் இலக்கிய நயம் விளங்கமுடியும். இந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை-ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும்படி அமைத்திருக்கின்றேன். அரவிந்தனைப்போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப்போல குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்றவேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு.”

ஆம்; இது மணிவண்ணனின் கனவு!

நான் அடிக்கடி குறிப்பதுண்டு: ‘இலக்கியப்படைப் பாளன், தான் கொண்ட குறிக்கோள், ஆசாபாசங்களைக் கடந்ததாக இயங்கும் வண்ணம் தன்னையும் தன் இலட்சியத்தையும் பாதுகாத்துக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்!’

இந்த வரம்பில் நின்று பார்க்கும்பொழுது, நா.பா. எந்த அளவுக்குத் தம் இலக்கியப்பணி நிரக்கும் வகையில் ‘குறிஞ்சிமலரை’ப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்?

கனவுகள் எப்போதும் வாழ்வதில்லை என்பார்கள். அதனால்தானோ, என்னவோ, நா.பா. கண்ட கனவின் உட்பிரிவுச் சக்திகளான பூரணியும் அரவிந்தனும் வாழவில்லை!

உருவாக்கியவரே, உருவாக்கிய உயிர்ப்பிண்டங்களை வாழ விடவில்லை!

திலகவதி-கலிப்பகையார் வாழ்வு இவரது சித்தத்தைக் கவர்ந்திருக்கலாம். நியாயம்.

62