பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கையைப் புதிராக்கி அதன்பின், அந்தப்புதிரை அவிழ்த்திட அவ்வாழ்க்கையையே ஓர் உபகரணமுமாக்கி, ‘அலகிலா விளையாட்டு’க் காட்டும் நேர்மைத்திறம் கொண்ட சிந்தனை மனங்களின் அடிச்சுவட்டை ஒற்றி நடந்து, காலத்தின் கருவில் உருவான-உருவாகும் நித்திய நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு இலக்கியப் பரிணாமக் கண்ணோட்டத்துடன் கதை எழுதவும், கதை சொல்லவும் தெரிந்த இந்த நாவலாசிரியைக்கு, இந்த அண்ணன் தம்பி சிக்கல்தானா இருந்திருந்து கிடைக்க வேண்டும்?

‘தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னே வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்;
பின்னே வினையைப் பிடித்துப் பிசைவார்கள்;
சென்னியில் வைத்த சிவன் அருளாயே!’

திருமூலர் வாக்கே இப்படியிருக்கையில், ராஜம் கிருஷ்ணனின் விந்தையான பாத்திரத் தேர்வை எடை போடுவதைவிட, எடை போட்டுப் படைத்த பாத்திரங்களின் குணதோஷங்களை எடை போடலாமே!


“பூமியைப் பார்!”

உள்ளுணர்வுப் போராட்டங்களைப் பாலுணர்வு கூட்டிக் கதை பின்னிச் சொல்லுவதில் மாப்பஸான் (Guy De Maupasant) நிலைப்புடன் விளங்கினார். அவரது பெண்மையின் விரிவாராய்ச்சிகளைக் கோடிட்டு நினைவூட்டுவது போல இங்கு ராணி வருகிறாள் காதலில் தோற்றவள்: ஆனால், நம் அனுதாபத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றவள். அந்தப் பேதையின் நினைவைச் சுட்டி என் அனுதாபத்தையும் சுவீகரிக்க முயலுகிறாள் ராணி:-...

80