பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2. கம்பனுடைய கடவுள் வாழ்த்துப் பாடல் கம்பனுடைய கடவுள் வாழ்த்துப் பாடல் கம்பராமாயணத்தின் தொடக்கப் பாடலாகும். அது மிகப் பிரபலமான பாடலாகும். அது, “உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர் அன்னவர்க்கே சரண், நாங்களே”. என்பதாகும். இது ஒரு அற்புதமான பாடல், இதில் கம்பனுடைய உலகக் கண்ணோட்டம், தத்துவ ஞானம் சமூகவியல் தத்துவம், கடவுட் கொள்கை, சரணாகதி (பிரபத்தி) தத்துவம், உலகின் இயக்கவியல் செயல்பாடு முதலியவை அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் அதாவது இந்தப் பேருலகத்தில் உள்ள சகல விதமான பொருள்களும் ஜீவராசிகளும், உயிர் பொருள்களும், ஜடப் பொருள்களும் தோன்றி நிலை பெற்று மாறி மறைந்து இடைவிடாத இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. எந்த உயிர்ப் பொருளும், ஜடப் பொருளும் தானாகத் தோன்றுவதில்லை. வெற்றிடத்திலிருந்து வருவதில்லை. அவை பஞ்ச பூதங்களின் (பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் - நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) பல வகையான சேர்மானங்களின் காரணமாக இந்தப் பொருள்கள் தோன்றுகின்றன. பொருள்களின் இந்தத் தோற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் காரண காரியங்களாக (காரணமும் விளைவுகளுமாக) பஞ்சபூத சக்திகளுடன் சூரிய சந்திரர்களும் இதர கிரகங்களும் சுடர்களும் சேருகின்றன என்பதை இந்திய தத்துவ ஞானிகளும் அறிஞர்களும் அறிவியல் ஞானிகளும் எடுத்துக் கூறியுள்ளார்கள்.