பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கூத்து[1]

முன்னுரை

முத்தமிழில் இயற்றமிழும் இசைத் தமிழும் இயைந்து இலங்குவது கூத்து : “ கூத்தாட் டவைக்குழாத் தற்றே ” என்று வள்ளுவனரும் கூத்தைக் குறித்துள்ளார். சிலப் பதிகாரம் அரங்கேற்றுகாதை, அதன் உரை ஆகிய வற்றினின்று கூத்துக்கலை குறித்துப் பல செய்திகளை அறிகிறோம். பண்டைக் கூத்து முறைகளை விளக்கிப் பல நூல்கள் இருந்தனவேனும் அவற்றுள் ஒன்றுதானும் இந் நாளில் நமக்குக் கிடைத்திலது. எனினும் கூத்துக்கள் பலவற்றைப் பற்றிக் கல்லெழுத்துக்களினின்று சில செய்திகள் அறியப்பெறுகின்றன. சாந்திக் கூத்து, சாக்கைக் கூத்து, ஆரியக் கூத்து, தமிழக் கூத்து ஆகிய கூத்துக்கள் நிகழ்த்தியமை, அவற்றை ஆடியோர் நிலை முதலியவற்றைக் குறித்த விவரங்களையும், அக்கூத்து நிகழ்த்திய ஆடல் வல்லார்க்கு அளிக்கப்பெற்ற கூத்தக் காணி, நட்டுவக் காணி முதலியவற்றைக் குறித்த பல விஷயங்களையும் கல்லெழுத்துக்களில் பரக்கக் காணலாம். சில செய்திகளை இனிக் காண்போம்.

சாந்திக் கூத்து

இது குறித்துச் சிலப்பதிகார உரையாசிரியர் எழுதியது (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை, வரி 12, உரை) பின்வருமாறு :—


  1. கலைமகளில் வெளி வந்தது.