பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கல்வத்து நாயகம்

வல்லுருக வென்றகொங்கை
மங்கைநல்லா ராசையினான்
மல்லுருக நெஞ்சுருக
மாண்புருக வாடாமற்
சொல்லுருகப் பாடுமுங்கள்
தோத்திரத்திற் கென்னிதயக்
கல்லுருக வைப்பீரென்
கல்வத்து நாயகமே!

தாப்பிட்டு வேணவெலாந்
தந்துதவ வல்லவுமைக்
கூப்பிட்டுங் கேளாத
கோளுமொரு கோளாமோ
மாப்பிட்டுச் செய்வினைக்கோர்
மாற்றிட்டு வாய்ந்தவருட்
காப்பிட்டுக் காத்தருள்வீர்
கல்வத்து நாயகமே !

பொறுத்தாலு மேழைபிழை
போக்கியெழுந் தப்பிழைக்கா
யொறுத்தாலு மன்பினொடு
முட்கசிந்தே யோதுபுகழ்
வெறுத்தாலு மெய்மையிலா
வீணனென வேசியென்னைக்
கறுத்தாலு மும்மைவிடேன்
கல்வத்து நாயகமே !

இன்னிசைப்பாடல்

37

சூழ்கொண்ட வெம்புவியில்
தொல்பொருளிற் பல்தொழிலில்
வீழ்கொண்ட புத்திகெட்டு
வீறழிந்து நில்லாமல்
ஆழ்கொண்ட நும்மருளா
மார்கலியு ளாடேனோ
காழ்கொண்ட மாணியே
கல்வத்து நாயகமே !

மாணிக்கை யொத்தமொழி
மங்கைநல்லார் மாமோகம்
பேணிக்கை கொண்டலைந்த
பித்தனையாட் கொண்டாக்கால்
பூணிக்கை வைத்தெழுந்தும்
பொன்னடிக்கென் னேழைநெஞ்சைக்
காணிக்கை வையேனோ'
கல்வத்து நாயகமே !

விண்ணோட்டங் கொண்ணிலவும்
வெங்கதிரும் வேண்டவரும்
ஒண்ணோட்ட மோங்குகழ
லுற்றிருந்து வாழாமற்
பெண்ணோட்டங் கொண்டலைந்தெப்
பேறுமற்ற பேயேற்குங்
கண்ணோட்டம் வாய்ப்பதுண்டோ
கல்வத்து நாயகமே !