பக்கம்:கல்விச் செல்வம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

25


கல்வி இல்லாவீடு இருண்டவீடு!

எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
இல்லா வீட்டை இருண்ட வீடென்க!
படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின்
துடிப்பிலார் நிறைந்த சுடுகாடெணன்க!
அறிவே கல்வியாம்; அறிவிலாக்குடும்பம்
நெறிகா ணாது நின்றபடி அழியும்.
சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம்
வித்தால் விளைவன மேன்மை, இன்பம்.
கல்வி இல்லான் கண்இலான் என்க.
இடிக்குரல் சிங்கநேர் இறையே எனினும்
படிப்பிலாக் காலை நொடிப்பிலே வீழ்வான்.
கல்லான் வலியிலான், கண்ணிலான், அவன்பால்
எல்லா நோயும் எப்போதும் உண்டு.
கற்க எவரும்; எக்குறை நேரினும்
நிற்காது கற்க: நிறை வாழ்வு என்பது
கற்கும் விழுக்காடு காணும் பெண்கள்
கற்க! ஆடவர் கற்க ! கல்லார்
முதிய ராயினும் முயல்க கல்வியில்!
எதுபொருள் என்னும் இருவிழி இலாரும்
படித்தால் அவர்க்குப் பல்விழிகள் வரும்.
ஊமையும் கற்க, ஊமை நிலைபோம்;
ஆமை போல் அடங்கும் அவனும் கற்க,
அறத்தைக் காக்கும் மறத்தனம் தோன்றும்.
கையும் காலும் இல்லான் கற்க,
உய்யும் நெறியை உணர்ந்துமேம் படுவான்
இல்லார்க் கெல்லாம் ஈண்டுக்
கல்விவந் ததுஎனில் கடைதேறிற் றுலகே!