பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வேண்டும். குழந்தைகளின் திறன்கள் வளர்ச்சியின் கொடு முடிகளை அடையும் முன்னர், குழந்தையின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் முதிர்ச்சியையும் கற்றலையும் பொறுத்தவை. முதிர்ச்சிக்குப்பின்னர் நடைபெறும் தடத்தை மாற்றங்கள் யாவும் கற்பதன் விளைவுகளே. இந்த வளர்ச்சியில் அடிப்படைக் கூறுகள் குடிவழியாக அமைந்து கிடப்பினும், சூழ்நிலையால் பெறக்கூடியவை யாவும் ஆசிரியர், பெற்றோர்கள் கையில்தான் உள்ளன.

உடல் வளர்ச்சி

உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கியதோர் இயைபு உண்டு. உடல் முற்றி வளர்ந்த நிலையில்தான், முற்றிவளர்ந்த உள்ளத்தின் செயலும் புலப்படத்தோன்றுகிறது. குழந்தையின் உடலோடு குழந்தையின் உள்ளமும் வளர்ந்து வருதலின், உடல் வளர்ச்சியை ஆராய்வது இன்றியமையாததாகின்றது. உடல் வளர்ச்சி உடல் நலத்திற்கும் நடத்தையின் பொருத்தப் பாட்டிற்கும் முக்கியமானது.

பிறப்பு, வளர்ச்சியின் தொடக்கம் அன்று; ஆனால், அதற்கு ஒன்பது திங்கள்கட்கு முன்னர் கருத்தரித்தலே வளச்சியின் தொடக்கமாகும். ஒரு குண்டுசியின் தலையைவிடச் சிறிய ஓர் உயிரணுவிலிருந்து ஒரு மனிதன் தோன்றுவது விந்தையினும் விந்தையென்றே சொல்லவேண்டும்.

உயரம் எடை முதலியவற்றில்: பொதுவாக வளர்ச்சியின் போக்கு குடிவழியால் அறுதியிடப்பெறுகின்றது; வளர்ச்சியின் விவரங்கள் சூழ்நிலையால் தீர்மானிக்கப்பெறுகின்றன. வளர்ச்சியை இடையறாத தொடர்பு என்று மேலே கூறினோம் அல்லவா? கருவுலகில் ஒன்பது திங்கள்வரை ஓர் உயிரணு விலிருந்து ஏறக்குறைய எட்டு இராத்தல் எடையுள்ளதும், 20 அங்குல நீளமுள்ளதுமான குழந்தை வளர்கின்றது. கருவறை, யில் இருந்ததனைவிட, பிறக்கும்பொழுது உயிரணுவின் எண்ணிக்கை அரைக்கோடி மடங்கு மிகுதியாகிவிடுகிறதாகக் கனக்கிட்டுள்ளனர்.

பொதுவாகக் கூறுமிடத்து, ஆண் குழந்தை பெண் குழந்தையை விடச் சற்று உயரமாகவும் கனமாகவும் இருக்கும். பிறந்தவுடன் குழந்தை உள்ளிருக்கும் வாழ்க்கைத் தேவைகள் பற்றி இடைவிடாது செயல் புரியும்; சில நாட்களில் வெளித் தாண்டல்களும் துலங்கத் தொடங்குகின்றன. நாளடைவில் குழந்தை உயரத்திலும் எடையிலும் மிக்குவருதைக் காணலாம்.