பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வளர்தலே வளர்ச்சியின் முதல் இயல்பு. புதியபுதிய துலங்கல் களைக் குழவிகள் கண்டுக்கொள்கின்றன. இஃது இரண்டாவது இயல்பு. தற்செயலாக எழும் பொருளற்ற இயக்கங்கள் தாமாக மறைகின்றன. இது மூன்றாவது இயல்பு. குழவி உரிமையுடன் இயங்கி வரும்பொழுதுதான் இத்தகைய வளர்ச்சி வளம் அதிகரிக்கின்றது. ஆதலின், குழவிகளின் இயக்கங்களைத் தடுத்தலாகாது. முதலில் குழந்தைகளின் செயல்கள் திருத்தமுறாமலும் பண்படையாமலும் இருக்கலாம். இது பற்றிக் குழந்தைகளைக் குறைகூறலாகாது. குழந்தைகள் பல வேலைகளைச் செய்ய முற்படும்; இதற்கு நாம் இடந்தர வேண்டும். உள்ளிருந்து துடித்துக் கொண்டு வரும் ஆற்றலுக்குத் தடை போடக்கூடாது; அவர்கள் செயலில் குறுக்கிடவும் கூடாது. தகுந்த வாய்ப்புகள் கொடுத்தால் அனைத்தும் தாமாகவே சீர்படும், ஒழுங்காக அமையும். வளர்ச்சிக்குத் திட்டமான நெறிகள் உள்ளன என்று மேலே கூறியதை ஈண்டு நினைவுகூர்க.

கைத்திறனையும் கையெழுத்துத் திறனையும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கூறிய உண்மைகளை நினைவில் வைத்துக் கற்பித்தல் வேண்டும். பாடத்திட்டம் அமைப்பதிலும் இவை கவனம் பெறவேண்டும். அறிவுத்துறைக்கு மதிப்புத் தருவதைப் போல் இயக்கத் திறனுக்கும் தக்க மதிப்புதருதல் வேண்டும். இதனையே தற்காலக் கல்வி ஏற்பாடு மிகவும் வேண்டுவது.

உள்ளக் கிளர்ச்சியின் துவக்கம்

‘உள்ளக் கிளர்ச்சி’ என்பது என்ன என்பதை வரையறைப் படுத்திக் கூறமுடியாது. ஒவ்வொருவரும் இதனை நன்கு உணர்வாராயினும், சொற்களால் உணர்த்துவது மிகக் கடினம். வெகுளி, அச்சம், மகிழ்ச்சி, இன்பம், வெறுப்பு இவை போன்ற மெய்ப்பாட்டு நிலைகளைக் குறிப்பதே உள்ளக் கிளர்ச்சி என்பது, தீவிர உணர்ச்சி, உள்துடிப்பு, உடலின் செயல்கள் ஆகியவற்றின் சேர்க்கையே உள்ளக்கிளர்ச்சியாகும். உணர்ச்சி[1] இன்னது என்பதை ஒவ்வொருவரும் தாமே அறிதல்கூடும், வெகுளியால் முன்சென்று தாக்குதல், அச்சத்தால் வெருண் டோடுதல், வெறுப்பால் வாந்தி பண்ணுதல், மகிழ்ச்சியால் குதித்தல், துயரத்தால் முகம் வெளுத்தல் போன்றவை உட் துடிப்புகளையும்[2] உடலின் செயல்களையும்[3] குறிக்கின்றன.


  1. 35. உணர்ச்சி-Feeling.
  2. 36.உள்துடிப்பு-Impulse.
  3. உடலின் செயல்கள்-Bodily activities.