பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கல்வி உளவியல் கோட்பாடுகள்


குடும்பமே சமூக உணர்ச்சியை முதன்முதலாக உண்டாக்குகிறது. குடும்பமே கல்வி நிலையங்களில் முதன்மையானது என்பதை நாம் அறிவோம். சிறுவன் பிறர் பாராட்டை வேண்டுகின்றான்; இகழ்ச்சியைத் தவிர்க்கின்றான். பிறருடைய உரிமைகளையும் ஒருவாறு உணர்கின்றான். பிற நிலையில் தன்னை வைத்துக்கொண்டு தன்னைப்போல் பிறரை எண்ணவும் சிறுவன் குடும்பத்தில்தான் கற்கின்றான். முதலில் குடும்பத்திளுள்ளாரோடு மட்டும் பழகி வரும் சிறுவன் பிறகு குடும்பத்திற்கு அப்பாற்பட்டவருடனும் பழகத் தொடங்குகின்றான். இவ்வாறு சிறுவனின் சமூக எல்லை அகண்டுகொண்டே வருகின்றது.

பள்ளிக்கு வரும் வயதுடைய பிள்ளைகள் குழுத்தன்மை பெற்ற[1] உயிரிகளாக உள்ளனர். தொடக்கநிலைப் பள்ளியில் புகும்பொழுது அறிவும் மொழியும் வளர்ச்சி பெறுகின்றன. இவையும் சமூக வளர்ச்சியில் சிறந்த பங்கு பெறுகின்றன. சிறுவன் பலபொருள்களைப்பற்றி அறிய விழைகின்றான்; பல வினாக்களை விடுக்கின்றான். வினவுதல் பிறரிடம் தொடர்பு கொள்ளும் வழியென்பதை நாம் அறிய வேண்டுவதொன்று. வினாக்கள்மூலம் பிறரைப் பேச்சுக்கிழுக்கின்றான்; அவர்கள் நட்பையும் பெறுகின்றான். மேலும், விளையாட்டு சமூகப்பண்பு வளர்ச்சியில் சிறந்ததோர் இடம்பெறுகின்றது. அது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறர் உரிமை, தன்மதிப்புபோன்ற பண்புகளை வளர்ப்பதில் இணையற்றதாகும். குடும்பத்தில் பிறர் உரிமையை ஒரளவு அறிந்தாலும், பள்ளியில் ஒரே வயதுடைய தன்னைப்போன்ற பல சிறுவர்களுடன் பழகுகின்றான். வீட்டில் ஏற்காத பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்புகள் அங்குக்கிட்டுகின்றன. வகுப்பிலுள்ளோர் எதிர்பார்க்கிறபடி நடந்துகொள்ளப் பழகுகின்றான். எது சரி, எது தவறு என்பதை நன்கு உணர்கின்றான். குழுவேலை, குழு விளையாட்டுபோன்ற வற்றால் குழுவுணர்ச்சி உண்டாகின்றது; குழுவுடன் ஐக்கியமாகி விடுகின்றான். குழுவிற்கு முனைந்து பாடுபடுதலே கடமை என்பதாக அறிகின்றான். இதில் போட்டி மனப்பான்மை[2] சிறந்ததோர் இடம் பெறுகின்றது. கூட்டு விளையாட்டு பத்துவயதில் தோன்றுகின்றது என்று கூறுகின்றனர். நடத்தை குழந்தை நிலைக்குத் தக்கவாறு மாறுவதாலும் கூட்டு விளையாட்டு திடீரென்று தோன்றும் ஒரு சிறப்புச் செயலன்று ஆதலாலும், இவ் வயதைத் திட்டமாகக் கூற இயலாது.


  1. குழுத்தன்மைபெற்ற-Socialized.
  2. போட்டி மனப்பான்மை-Competitive spirit.