பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

101


கொள்ளாமை, பல்வேறுபட்ட மக்களுடன் பலவகையில் பழகக் கற்றுக் கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் இயல்பு, குழுவின் விருப்பத்திற்கு மதிப்பு தருதல், ஏமாற்றமில்லாமல் மனமார உழைத்தல், ஒத்துழைப்பு, உயர்ந்த குறிக்கோள்கள், மரியாதை போன்ற பண்புகள் தலைமை பூண்பதற்குத் துணைசெய்பவை. பள்ளி இவற்றில் கவனம் செலுத்தி இவை மாணாக்கர்களிடம் வளர வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் வேண்டும்.

மனவளர்ச்சி : அறிவு வளர்ச்சி

மனம் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு முயற்சிக்கூறு என்ற முக்கூறுகளைக்கொண்டது. முயற்சிக் கூறினை இயக்க வளர்ச்சியிலும் உணர்ச்சிக் கூறினை உள்ளக்கிளர்ச்சிகளின் வளர்ச்சியிலும் கண்டோம். ஈண்டு எஞ்சியுள்ள அறிவு வளர்ச்சியினைக் காண்போம்.

மேலே உடல் வளர்ச்சியினைக் குறிப்பிடுங்கால் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியையும் மூளையின் வளர்ச்சியையும் குறிப்பிட்டோம். முதல் நான்கு வயதில் மூளை எடையில் சிறந்த வளர்ச்சி பெறுகின்றது என்றும், சற்றேறக்குறைய 20.ஆம் வயதில் முழு வளர்ச்சியையும் எய்தி விடுகின்றது என்றும் கண்டோம். மன வளர்ச்சி மூளை வளர்ச்சியையும் அநுபவத் தையும் சார்ந்தது. உற்றுநோக்குமிடத்து புலன் உணர்ச்சி[1], புலன்காட்சி,[2] கற்பனை[3] சிந்தனை[4] போன்ற பல செயல்கள் தோன்றுகின்றன. இவை தனிப்பட்ட படிகளல்ல; ஆனால், தொடர்பாக நிகழ்பவை. சில நிலைகளில் சில கூறுகள் சிறப்பாகத் தோன்றும். ஏனைய வளர்ச்சிகளைப் போலவே இங்கும் பாகுபாடும் ஒருமைப்பாடும் உண்டாகின்றன. நாளடைவில் அறிவு ஆழத்திலும் அகலத்திலும் விரிவு அடைகின்றது. மன வளர்ச்சியில் சில பொதுப்பண்புகளை ஈண்டுக் குறிப்பிடுவோம்.

அறிவு எல்லை விரிதல்: புதிதாகப் பிறக்கும் குழந்தைக்கு உலகம் மிகவும் சிறியதே. உடல் தேவைகளுக்கும் உடல் நலத்துடன் ஒட்டிய தொடர்புகளுக்கும் உரிய தூண்டல்களுக்கும் ஏற்றவாறு மட்டிலுமே குழந்தை துலங்குகின்றது. அதனுடைய விழிப்பு வாழ்க்கையின் பெரும் பகுதி இவ்வளவே. பிறந்து சில


  1. புலன் உணர்ச்சி-Sensation.
  2. புலன்காட்சி-Perception.
  3. கற்பனை-Imagination.
  4. சிந்தனை-Thinking.