பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

103



சொல், சொற்கள் என்ற வரிசையில் மொழி வளர்கின்றது: முதலிரண்டு யாண்டுகளில் குழந்தை புலன்களின் துணையால் சூழ்நிலையை நன்கு ஆராய்கின்றது. மூன்றாம் யாண்டில் யார்? எது? ஏன்? என்று பல வினாக்களைக் குழந்தை விடுக்கின்றது. இந்த யாண்டை 'வினாநிலை' எனலாம். இந் நிலையில் மொழி வளர்ச்சி சிறப்பெய்துகின்றது. குழந்தையின் நாவில் முதன் முதல் சொல் எழுந்து ஒளிர்வது பத்தாம் திங்களிலாகும். 54-ஆம் வாரத்திற்குள் இரண்டு சொற்களும் 66-ஆம் வாரத்திற்குள் 7 சொற்களும் விளங்குகின்றன. 86-ஆம் வாரத்திற்குமேல் இச் சொற்களின் எண்ணிக்கை விரைந்து வளர்கின்றது. இரண்டாம் யாண்டில் 250 சொற்களும், மூன்றாம் யாண்டில் 850 சொற்களும், நான்காம் யாண்டில் 1,500 சொற்களும், ஐந்தாம் யாண்டில் 2,000 சொற்களும், ஆறாம் யாண்டில் 2,500 சொற்களும் விளங்குகின்றன. அறிவும் பரப்பிலும் ஆழத்திலும் வளர்ச்சி பெறுகின்றது. சிறுவன் சொற்களைக் கையாளுவதிலிருந்து அவனுக்கு அவற்றின் திட்டமான அறிவு ஏற்பட்டுவிட்டது என்று கருதலாகாது; பொருள் விளங்காத பல சொற்களைக் கிளிப் பிள்ளைபோல் சொல்லுவான். முதலில் அவன் பொருள்களைப் பற்றிக் கூறும் இலக்கணம் அவற்றின் பயனைத் தழுவியதாகவே இருக்கும். (எ.டு. கத்தி-வெட்டுகிறது; தாய்-பாலூட்டுபவள். முழுமையான இலக்கணம் நாளடைவில்தான் தோன்றும்.

அறிவுச் செயல்களில் முதலாவது புலன் உணர்ச்சி யாகும். அஃது ஒலி, ஒளி போன்ற பண்புகளைப் புலன்களைக் கொண்டு அறிதலாகும். ஆனால், புலன்காட்சி (Perception) என்பது இப் பண்புகளையுடைய பொருள்களை அறிதல் ஆகும். (எ.டு.: "இஃது ஒரு எலுமிச்சம்பழம்" என்பது புலன்காட்சி. முன்னைய அநுபவத்தைக் கொண்டு புலன் உணர்ச்சியை விளக்குவது புலன் காட்சியாகும். உருண்டை வடிவத்தையோ மஞ்சள் நிறத்தையோ பார்த்தல் புலன் உணர்ச்சியாகும். இன்னொரு எடுத்துக்காட்டு: ஒருவர் தன் அறையில் துயில்கின்றார். யாரோ ஒருவர் கதவைத் தட்டுகின்றார். ஒலியலைகள் உண்டாகி துயில்பவரின் காதை அடைகின்றன. அவர் எழுந்திராததால், அவ்வொலியலைகளை அறிய முடியவில்லை. திரும்பத் திரும்ப வரும் ஒலியலைகள் அவரை எழுப்புகின்றன; இப்பொழுது ஒரளவு ஒலி கேட்கின்றது. இது புலன் உணர்ச்சியாகும். யாரோ தட்டும் ஒலி என்று அறிந்தால் அது புலன் காட்சியாகின்றது. பொதுவாகக் கூறினால், புலன் உணர்ச்சி என்பது தூண்டல்கள்


56. புலன் உணர்ச்சி-Sensation.