பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

கல்வி உளவியல் கோட்பாடுகள்


விரைவான வளர்ச்சி பெறுகின்றது. உடல் வேகமாக வளர்கிறது. இயக்க ஆற்றலும் தோன்றுகின்றது. குழந்தை படிப்படியாகத் தசை இயக்கங்களை ஒன்றுபடுத்தவும் தன்னுடைய உறுப்புகளை ஒரு நோக்கத்திற்குப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றது. இப்பருவத்தில் குழந்தையின் நோக்கம் யாவும் தசை, நரம்பு இயக்கங்களையும் உறுப்புகளையும் ஒருமைப்படுத்தலேயாகும், இயக்கத் தூண்டல்களையுடைய பொருள்கள் யாவும் குழந்தைக்குக் கவர்ச்சி தரும். உடலும் உறுப்புகளும் செயற்படுவதற்கு வாய்ப்பினைத் தரும் விளையாட்டுகள் யாவும் குழந்தையைக் கவரும். சாதாரணமாக ஓடுதலையும் தாண்டு தலையும்கூட குழந்தை அதிகமாக விரும்பும்.

இப் பருவத்தில் புலன்கள் துலக்கமடைகின்றன. புதிய பொருள்களைப் பார்ப்பதாலும், புதிய ஒலிகளைக் கேட்பதாலும், புதிய பொருள்களைக் கையாளுவதாலும் குழந்தை தொடர்ந்து புதிய அநுபவங்களைப் பெற்ற வண்ணமுள்ளது இதனால்தான் குழந்தை "துரு துரு" வென்று இருக்கின்றது, தனக்கு முன்னுள்ள உலகைச் சதா ஆராய்கின்றது. இதையறியாத மூத்தோர் குழந்தைக்கு "குறும்புச் செயல்" அதிகம் அன்று கருதுகின்றனர். குழந்தை புரியும் செயல்களால் அதற்குத் தீங்கு நேரிடாவண்ணம் அது சுறுசுறுப்பாக இருக்கும் வாய்ப்புகளைத் தருதல்வேண்டும்; அது செயற்படவேண்டும் என்ற விருப்பத்தைச் சிதைத்தல் கூடாது. குழந்தையின் வயதிற்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு எளிதில் இயக்கக் கூடிய பொருள்கள் அதற்குக் கிடைக்கச் செய்வது மூத்தோர் கடமையாகும்.

குழந்தையின் விருப்பங்களும் உள்ளக்கிளர்ச்சிகளும் தீவிர மானவை; ஆனால், விரைவில் மாறக் கூடியவை. தான் உணர்வதையெல்லாம் ஆர்ப்பாட்டங்களுடன்தான் வெளியிடும். எனவே, நாம் அது வெகுள்கின்றதா, பொறாமைப்படுகின்றதா, மகிழ்கின்றதா, அன்பு கொள்கின்றதா, அஞ்சுகின்றதா என்பதை அறிந்து கொள்வதில் சிரமம் ஒன்றுமில்லை. இப் பருவத்தில் உண்ணுதல், உறங்குதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல் போன்ற உடல் நிலத்துடன் தொடர்பு கொண்ட செயல்களில் நற்பழக்கங்களை வளிர்க்கவேண்டும்.

முன்-பிள்ளைப் பருவம் (3-6 அல்லது 7) வயது

இப் பருவத்திலும் சிறப்பியல்பாகக் காணப் பெறுபவை உடலியக்கமே. சிறு குழவியிடம் தேங்கிக் கிடக்கும் வற்றாத ஆற்றலைக் கண்டு நாம் வியப்படையத்தான் செய்கின்றோம்.