பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

109



விளையாட்டில் தீவிரமான கவர்ச்சியுண்டாகின்றது; திரும்பத் திரும்ப நடைபெறும் செயல்களைக் கொண்ட விளையாட்டுகளையே சிறுவன் அதிகமாக நாடுகின்றான். இப் பருவச் சிறுவன் பிறருடைய கூட்டுறவில் விளையாட விரும்பினாலும், அவன் விளையாட்டு தனியாக விளையாடக் கூடியதாகவே உள்ளது. குதித்தல், ஒடுதல், விரட்டுதல் போன்ற விளையாட்டுகள் இன்பம் தருபவை. உருளை விளையாட்டுப் பொருள்கள்மேல் சிறுவனுக்கு விருப்பம் அதிகம். சிறுவன் தானாகவே குளிப்பாட்டிக் கொள்ள விரும்புகின்றான்.

பல பிள்ளைகளுடன் கூடி விளையாடும் விளையாட்டு இன்பம் தரும். ஆனால், சிறு குழுக்களே அமைகின்றன. சிறுவர்களும் சிறுமியரும் சேர்ந்து விளையாடுகின்றனர். சிறுவர்கள் தம் நண்பர்களுடன் மற்போர் தொடுத்துச் சண்டையிடுகின்றனர்; தம் ஆண்மையை நிலைநாட்ட முயலுகின்றனர். விருந்தினையும் குழுக் கூட்டங்களையும் விரும்புகின்றனர். ஆனால், அங்கு மூத்தோரின் விதிப்படி நடந்து கொள்வதில்லை. ஆசிரியரின் கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் அதிக மதிப்பு தருகின்றனர். நன்னடத்தையும் தீய நடத்தையும் மாறி மாறித் தோன்றுகின்றன.

இப் பருவத்தில் குழந்தைகளின் ஆற்றல் வெளிப்படுவதற்கும் கற்பனை செயற்படுவதற்கும் ஏற்ற வாய்ப்புகளை நல்குதல் வேண்டும். மனவிருப்பம், பாவனை விளையாட்டு, பகற்கனவு, மோகினிக் கதைகள் முதலியவற்றைச் சிறுவர்கள் அதிகமாக விரும்புவர். தந்தையாகவும், போர் வீரனாகவும், ஆசிரியராகவும், குதிரையாகவும் தன்னைப் பாவித்து விளையாடுவதில் சிறுவன் எல்லையற்ற மகிழ்ச்சியடைவான்; நனவுலகில் தன்னால் அடைய முடியாதவற்றையெல்லாம் கனவுலகில் பெற்று இன்புறுவான். சாதாரணமாகக் காணும் இயக்கங்களையும் ஒலிகளையும் திரும்பத்திரும்ப உண்டாக்குவதில் சிறுவன் அதிக விருப்பத்தைக் காட்டுகின்றான். இந் நிலையில் பாப்பா பாடல்கள், செவிலிப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள் ஆகியவற்றை மிகவும் விரும்புகின்றான். பண்படையாத இக் களியாட்டப் பாட்டுகளே பிற்காலத்தில் பண்படைந்து கூத்தாகவும் இசையாகவும், கதைபொதி பாடல்களாகவும், பிற இலக்கியங்களாகவும் முகிழ்க்கின்றன என்று சர். பெர்சிநண் [1] என்ற அறிஞர் கருதுவர். திரும்பச் செய்தலும் சந்த இயக்கமும் ஆழ்ந்ததோர் உணர்வைத் திருப்திப்படுத்துகின்றன. ஆசிரியர்


  1. 76. பெர்சிநண்-Sir Percy Nunn.