பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கல்வி உளவியல் கோட்பாடுகள்



இவற்றைச் சரியாகக் கையாண்டால் அவை முருகுணர் கலையாகவும், நல்ல நடத்தையாகவும், வரையறையுடன் கூடிய பழக்கங்களாகவும் வளரும். இப் பருவத்தில் நீண்ட பாட வேளைகள் கூடா; இருப்புநிலை (Posture)யும் இயக்க நிலையும் அடிக்கடி மாறக்கூடிய வாய்ப்புகள் இருத்தல் வேண்டும்.

இப் பருவத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று விடுப்பூக்கம் [1] குழந்தைகளிடம் அதிகமாகத் துலங்குவதாகும். என்ன? எப்படி? ஏன்? என்ற வினாக்களால் குழந்தைகள் நம்மைத் துளைத்து விடும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இவ்வூக்கத்தைச் சிதைக்காது தக்கவாறு விடையளித்துச் சமாளிக்கவேண்டும். பெரும்பாலும் இவ் விடுப்பூக்கம் பொருள்களை உடைப்பதில் பங்கு பெறுகின்றது. பொருள்களைச் சிதைத்தல் அவை என்ன என்பதையும் எப்படி செயற்படுகின்றன என்பதையும் கண்டறிதல் பற்றியே நிகழும். அதே சமயத்தில் சிறுவர்கள் பொருள்களைச் சிதைத்தலிலும் மகிழ்ச்சி கொள்ளுகின்றனர் என்பதும் உண்மையே. விளையாட்டுப் பொருளைச் சிதைப்பதால் சிறுவனின் நரம்பு இறுக்கம்[2] நீங்குகின்றது என்று கருதலாம்.

சிறுவன் வளர வளர தசைக்கட்டுப்பாடு அதிகரிக்கின்றது; குழந்தை பொருள்களைப் படைப்பதிலும் களிப்படைகின்றது. இப் பருவத்தில் களிமண்-வேலை நன்மை பயக்கும்; இதனால் சிறுவனுக்கு இயக்க வேலைகளில் வாய்ப்பு கிடைக்கின்றது. சிறுவனுக்கு மனநிறைவு ஏற்படுகின்றது; கற்பனை வளர்கின்றது; முதிர்ந்தோர் செய்யும் வேலையைத் தான் நிறைவேற்றி விட்டதாகப் பெருமிதம் கொள்ளுகின்றான். பின்பற்றல் [3]இப் பருவத்தில் பெரும்பங்கு கொள்ளும்; இதனால் பழக்கங்கள் உண்டாகின்றன; பின்பற்றும் செயலும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடுகின்றது. எனவே, நாம் சிறுவர்கட்கு நல்ல சமூகச் சூழ்நிலையை அமைத்துத் தருதல் வேண்டும்; குறிப்பாகக் குழந்தை அதிக நேரம் இருக்கக்கூடிய வீட்டில் நல்ல சூழ்நிலை நிலவும்படிச் செய்தல் வேண்டும்.

உள்ளக் கிளர்ச்சிகளைப் பொறுத்த வரையில், சிறுவன் தன்னைச் சுற்றியே எல்லாச் செயல்களும் நடைபெற வேண்டும் என்றும், தான் செய்வதைப் பிறர் மெச்ச வேண்டும் என்றும், விரும்புகின்றான். சுருக்கமாகக் கூறினால் சிறுவன் தன் நினை


  1. 77. விடுப்பூக்கம்-Instinct of curiosity
  2. 78. இறுக்கம்-Nervous tension
  3. 79. பின்பற்றல்-Imitation