பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

115



இப் பருவத்தில்தான் சிறுவர்களிடம் வீர-வழிபாடு [1] தலை காட்டுகின்றது. இவர்தான் மிகவும் விரும்பத்தக்கவர் என்று குறிப்பிட்டவரைக்காட்டி அவரைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்துதல் பெருந்தவறு. இதில் ஆசிரியர்கள் வற்புறுத்தும் அளவுக்குக் கவனம் செலுத்தலாகாது. செயலாலும் சிந்தனையாலும் மக்கட்கும் உலகிற்கும் பெருந்தொண்டாற்றியவர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம்; அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றிய நூல்களைப் படிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்; சில நிகழ்ச்சிகளை நாடகங்களாக எழுதி நடிக்கவும் தூண்டலாம்.

குமரப் பருவம் (12-18) வயது

முன் - குமரப் பருவமும் பின்-குமரப் பருவமும் சேர்ந்தே ஆராயப் பெறுகின்றது. பிள்ளைப் பருவத்திற்கும் முழு வளர்ச்சி பெற்ற முதிர்ந்த பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமே குமரப் பருவம் என்பது. இப்பருவத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அடையாளங் காட்டித் திட்டமாகச் சுட்டிக் கூறுவது இயலாது. இப்பருவமே பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தலைவலியைத் தருவது. அவர்கள் மாணாக்கர்களைப் பற்றிய, அவர்கள் தரும் பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியவர்களாகின்றனர்.

உடல் வளர்ச்சியும் திறன்களும் : இப் பருவத்தில் விரைவான உடல் வளர்ச்சி தோன்றுகின்றது. உயரமும், எடையும் உச்ச நிலையை அடைகின்றன. தசைகள் வளர்கின்றன. உடல் உறுப்பு மாறுபாடுகள் 12 வயதிலிருந்து 14 வயதிற்குள் தொடங்குகின்றன. இப்பருவத் தொடக்கத்தில் சிறுவனுடைய உடலுறுப்புகளின் அமைப்புகளும் அவற்றின் தொழில்களும் நன்கு ஒழுங்கு படுகின்றன. உடலுறுப்புகள் பலவும் தம்மளவில் பொருத்தமுற்றுத் தசை வலிமையையும் வேலை செய்யும் திறமையையும் பெறுகின்றன. முதிர்ச்சி பெற்றவனுடைய உயரத்தில் பத்தில் ஒன்பது பங்கு உயரமும், மூன்றில் இரண்டு பங்கு எடையும் பதினாறாம் வயதில் காணப்பெறுகின்றன. எலும்புகள் நீள்கின்றன; மார்புக்கூடு விரிகின்றது. இதயம், நுரையீரல் போன்ற அகவுறுப்புகள் வளர்கின்றன. மிகுந்த விரைவில் உடல் வளர்ச்சி ஏற்படுவதால், பல உறுப்புகளும் ஒன்றுபட்டுச் செயற்படுவதில் தடுமாற்றம் ஏற்படுகின்றது; இளைஞனுடைய செயல்களும் சற்றுத் தாறுமாறாகக் காணப்பெறலாம். காலப் போக்கில்தான் செயல்கள் ஒழுங்குபட்டுத் திறமையாகவும்


  1. 88. வீர - வழிபாடு -Hero-worship