பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஆடை அணிந்திருக்கையில் தான் மட்டிலும் அவ்வாறு அணிய வில்லையே என்று துயரப்படுவான். இதனைப் பெரியவர்கள் பரிவோடு கவனிக்க வேண்டும்.

கல்வி நிலையங்களில் எல்லோரும் ஒரே வகையான ஆடை யணியச் செய்யும் கட்டுப்பாடு இவ்வகையான ஏக்கங்களைத் தவிர்ப்பதுமன்றி, எளிய பெற்றோர்க்குத் துணையாகவும் இருக்கும்.

ஆசிரியர், பெற்றோர் பொறுப்பு : இந்த நெருக்கடியான பருவத்தினரிடம் ஆசிரியரும் பெற்றோரும் அறிவுடன் கூடிய ஒத்துணர்ச்சியைக் காண்பிக்க வேண்டும். தங்கள் குமரப் பருவ வளர்ச்சிகளையும் செயல்களையும் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும். கீழ்க்கண்ட குறிப்புகள் பயன் தருபவை.

(1) உடலுக்கோ அல்லது உளத்திற்கோ மிதமிஞ்சிய வேலை தரக்கூடாது. நல்ல உணவு, போதுமான அளவு ஒய்வு, தூக்கம் இன்றியமையாதவை. இப் பருவத்தில் சிறுவர்களும் சிறுமியரும் மிதமிஞ்சிய அளவுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுத லாகாது. அளவுடன் செயல்களில் ஈடுபடவேண்டும்.

(2) களைப்பையும் மடிமையையும் பாகுபடுத்தி அறிதல் அவசியம். விரைந்து வளரும் குமரன் அதிக நேரம் அறிவு வேலையில் ஈடுபடுவது சாத்தியமானதன்று. வீட்டுவேலையைத் தருவதில் ஆசிரியர் இக்கூறினை நினைவில் வைத்துத் தருதல் வேண்டும்.

(3) இளைஞனின் சமூக வளர்ச்சிக்கும் அறவாழ்க்கை வளர்ச்சிக்கும் இப் பருவம் மிகவும் முக்கியமானது. இப் பருவத்தினர் அடையும் புதிய நிலைக்குத் தக்க மதிப்பு தருதல் வேண்டும். இப் பருவத்தில் நுழையுங்கால் பாலர்களாக இருந்தவர்கள் இப் பருவத்தைக் கடக்குங்கால் பாலரைப் பெற்றெடுக்கும் ஆற்றலுடையவர்களாகின்றனர். இப் பருவத்தினரிடையேயுள்ள தவறான கூச்சத்தை அகற்றிப் பால் கல்வியை அஞ்சாமல் புகட்ட வேண்டுமென்பது தற்காலக் கொள்கை. இல்லாவிடில் தவறான எண்ணங்களையும் பழக்கங்களையும் தகாத வழிகளில் இளைஞர்கள் பெற முயலுவார்கள். பால் பற்றிய செய்திகளை மூடிவைப்பதாலும் மழுப்புவதாலும் பயனில்லை. ஆனால், பாலறிவுடன் தன்னடக்கமும்[1] அவசியம் என்பது நமக்குத் தெரியாமல் இல்லை. தன்னடக்கமில்லாவிடில் பால்கல்வி அபாயகரமானது.


  1. 90. தன்னடக்கம் -Self-control.