பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசிரியர்கள், குறிப்பாகக் குழந்தைப் பள்ளிகளில் கற்கும் குழந்தை #களை அவர்கள் கொடுமைப்படுத்தும் முறைகள் சொல்லி முடியா. அதுவும் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் வாயிலாகக் (Medium) கொண்டு கற்பிக்கும் பள்ளிகள் குழந்தைகளைக் கிளிப்பிள்ளைகட்குக் கற்பிப்பதுபோல் கற்பித்து வருவதைக் காணும் பெற்றோர்களின் கண்ணில் நீர் வடியாமல் இருக்க முடியாது. இல்லத்தில் கற்பிக்கும் தாய்மார்களும் குழந்தைகளை நாடாப்பதிவுகளாக்குகின்றனர்; ஒலித்தட்டுகளாக்குகின்றனர். இப்படிக் கிளிப்பிள்ளைகள் போல் ஒப்புவித்தற்கு ஆசிரியர்களும் அதிக மதிப்பெண்கள் வழங்குகின்றனர். இந்த மதிப்பெண் மாயத்திலும் வகுப்பில் பெறும் நிலை (Rank) மாயத்திலும் பெற்றோர்கள் மயங்கி மதி இழக்கும் நிலைக்குள்ளாகின்றார் கள். பிராணிகளைக் கொடுமைப் படுத்துவதைத் தவிர்ப்பத்ற்கு சீவகாருண்யசங்கம் (SPCA) என்ற ஓர் அமைப்பு தோன்றியுள்ளதைப்போல் குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவதைத் தவிர்க்க ஓர் அமைப்பு வேண்டும்போல் தோன்றுகின்றது.

'கல்வி உளவியல் கோட்பாடுகள்' என்ற இந்த நூல் கற்பிக்கும் ஆசிரியர்கட்கும், குழந்தைக் கல்வியில் அக்கறை கொள்ளும் பெற்றோர்கட்கும், பொதுமக்கட்கும் ஒரு வழிகாட்டியாக அமையட்டும் என்றே இதனை எழுதி வெளியிட்டேன். இந்த நூலில் கல்வி உளவியலின் இன்றியமையாமை, மனிதனும் சூழ்நிலையும், குழந்தையின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில் அதன் மனவர்ச்சி, குழந்தைக் கல்வியில் ஊக்கு நிலைகள், கல்வியில் உள்ளக் கிளர்ச்சியின் பங்கு, குழந்தை கற்றலில் அடங்கிய மூலக் கூறுகள், அறிதிறன்பற்றிய கருத்துகள், இவற்றின் அடிப்படையில் தனியாள் வேற்றுமைகள், குழந்தைகளின் உடல்நலம் பற்றிய பல்வேறு செய்திகள், பால் கல்வியைப் பற்றிய கருத்து, குழந்தையின் இயல்பு பிறழ்ந்த நடத்தைகள், அவற்றைச் சமாளிக்கும் முறைகள், குழந்தை யின் ஒழுக்க வளர்ச்சி, குழந்தைக் கல்வியில் தேர்வு முறைகள்ஆகிய பல்வேறு கருத்துகள் விளக்கம் அடைகின்றன. சிறுவர் கல்வியில் அக்கறை கொள்ளும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் இவர்கட்கு இன்றியமையாத செய்திகள் பலவும் இந்நூலில் அடங்கியுள்ளன.

தரமான நூல்களை வெளியிட்டு வெள்ளிவிழாக் காணும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும், என்னிடம் அன்பு காட்டும் குறிப்பாக எஸ். மெய்யப்பன் அவர்கட்கும், இதற்கு முதற்காரணமாக இருந்த மணிவாசகர் நூலக மேலாளர் திரு. இரா. குருமூர்த்தி அவர்கட்கும், இந்நூலை அழகுற ஆச்சிட்டு உதவிய கற்பகம் அச்சக மேலாளர், செய்வன திருந்த செய்யும் திரு. க. நாராயணன் அவர்கட்கும் என் மனம் உவந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு. கே. ஆர். மாணிக்கம், சென்னை - சைதையிலுள்ள ஆசிரியர்க் கல்லூரியில் (இப்போது அரசு கல்விக்கல்லூரி எனப்பெயர் மாற்றம்