பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வி உளவியல் கோட்பாடுகள்

155



குடிவழியும் சூழ்நிலையும் இணைந்து செல்வதுடன் இடை வினையும் புரிகின்றன. எனவே, கல்விக்கும் சமூகத்திற்கும் முன்னிற்கும் பிரச்சினை வாழ்க்கையின் இந்த இரு கூறுகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பது அன்று; ஒவ்வொரு குழந்தைக்கும் எந்த அளவுக்குச் சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க முடியும் என்பதே. இதனால் அக்குழந்தை குடிவழிப் பெற்ற தன்னுடைய இயற்கைப் பேறு முழுவதிலும் அமைந்து கிடக்கும் மதிப்பு அனைத்தையும் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படு கின்றது. இதுவே குடியரசு நாடுகளின் முக்கிய பொறுப்பு என்பதை நாம் மறத்தலாகாது.

ஒரு தாவரத்தின் வளர்ச்சியில் விரையின்[1] பங்கையும் மண்ணின்[2] பங்கையும் அறிந்தால் குடிவழிக்கும் சூழ்நிலைக்கும் உள்ள உறவுமுறை தெளிவாகும். விரையினுள் அது ஒருவகைத் தாவரமாக வளரும் ஆற்றல் அடங்கியுள்ளது; அது நல்முறையில் வளர்வதும் நன்றல்லாத முறையில் வளர்வதும் அஃது அடையும் மண்ணைப் பொறுத்துள்ளது. அது பாறையில் விழுந்தாலும் வெயிலில் விழுந்து நசுக்குண்டாலும் முளைப்பதில்லை. அஃது அதிகமான நீருள்ள அல்லது வறட்சியையுடைய வளமற்ற மண்ணில் விழுந்தால் முளைக்கும்; ஆனால் நீண்டகாலம் வாழாது, அல்லது பலன்தராது; கோயில்கள் போன்ற கட்டிட இடுக்குகளில் விழுந்தால் என்ன நேரிடும் என்பதை நாம் அறிவோம். அது நல்ல நிலத்தில் வீழ்ந்து உரம், நீர், வெயில் போன்ற சாதகமான நிலைமைகளைப் பெற்றால், அஃது ஒரு சிறந்த தாவரமாக வளரும்; நிறைந்த பலனையும் தரும். தாவர வளர்ச்சிக்கு விரையும் வேண்டும்; மண்ணும் வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்றால் வளர்ச்சி என்பதே இல்லை. இரண்டும் தனித்தனியாகவும் செயற்பட முடியாது; இரண்டும் ஒன்றை யொன்று தழுவி நிற்கின்றது. இவ்வாறே ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் குடிவழியும் சூழ்நிலையும் இன்றியமையாத பங்கினைப் பெறுகின்றன.

தாவர உலகைவிட்டு மக்கள் உலகிற்கு வருவோம். ஒருவனுக்கு ஏற்பட்டுள்ள ஏதாவதொரு திறமை குடிவழியாக வந்ததா, சூழ்நிலையால் அமைந்ததா என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது. ஓர் இசைக் கலைஞனின் மகன் இசைப்-


  1. 17. விரை-வித்து. விரை-மணம்; மணத்தைத் தரும் 'பூவிலுள்ள பொடி; இதுதான் தாவரத்தின் ஆண் உயிரணு; இதுவே முட்டையுடன் சேர்ந்து வித்து ஆகின்றது; எனவே, விரை வித்தினைக் குறிக்கிறது.
  2. 18. மண்-Soil