பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிவழியும் சூழ்நிலையும்

155


காணப்பெறுவதில்லை. புனிற்றிளங்குழவியின் கண்கள் ஒளி மிக்க பொருளிடம் பதியலாம்; ஆனால், அதை அடைய எவ்வித அசைவையும் மேற்கொள்வதில்லை. ஏதாவது பொருளை அது இறுகப் பற்றலாம்; ஆனால், கண்கள் அதனைப் பார்ப்பதில்லை. பொருள்களை அறிந்ததாக அஃது எவ்வித அறிகுறியையும் காட்டுவதில்லை; அல்லது அவற்றுடன் தொடர்பு கொள்ளவும் முயலுவதில்லை. ஒன்று முதல் இரண்டு திங்களுக்குள், அதன் கண்கள் அசையும் பொருள் அல்லது ஆளைத் தொடருகின்றன; குழவி சற்றுத் தொலைவிலுள்ள பொருள்களையும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குகின்றது; இதனால் சில பொருள்களை அறியவும் செய்கின்றது. கை இயங்கத் தொடங்குவதற்குமுன்பு, குழந்தை சில வாரங்கள் வரை பொருளை அதிகக் கவனத்துடன் திட்டமாகப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது. பிறகு அதன் மனத்தைக் கவரும் பொருளை நோக்கிக் கைகள், துடிக்கும் அலை போன்ற இயக்கங்களை உண்டாக்குகின்றன. சில வாரங்கள் கழிந்தவுடன், இரண்டு புயங்களையும் அப்பொருளை அடையும் நோக்கத்துடன் நீட்டுகின்றன; இப்பொழுது விரல்களையும் பயன்படுத்த முடிவதில்லை; அப்பொருளை அடைந்து அதைப்பற்ற முடிவதும் இல்லை. ஏழாம் திங்களில், குழந்தை பொருளை அடைந்து தன்விரல்களால் இறுகப்பற்றுவதில் கணிசமான வெற்றியடைகின்றது. முதலாம் யாண்டில் இறுதி மூன்று திங்களில் பொருளைப் பெருவிரலுக்கும் முதலிரண்டு விரல் களுக்குமிடையில் பற்றிக்கொண்டு அதனைப் பரிசீலனை செய்வதைக் காண்கின்றோம். எனவே, முதலாம் யாண்டில் குழந்தை கண்களையும் கைகளையும் இணைத்துச் செயலாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைகின்றது. ஓரளவு கைகளின் முதிர்ச்சியும் மூளையின் முதிர்ச்சியும், ஓரளவு பயிற்சியும் கற்றலும் இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாகும். குழந்தை ஒரு பொருளை அடைய முயலுங்கால், வெற்றியுள்ள இயக்கம் பலப்படுத்தப்[1] பெறுகின்றது. எனவே, தட்டுத்தடுமாறிக்[2] கற்றலாலும் பலப்படுத்தலாலும் பொருளை அடையும் இயக்கங்களும் அதனைப் பற்றும் இயக்கங்களும் திறமையுறுகின்றன.

நடைகற்றல் : புனிற்றிளங் குழவியின் கால்களும் பாதங்களும் நடப்பதற் கேற்றவாறு முதிர்ச்சியடையவில்லை என்பது தெளிவு. சற்றுப் பெரிய தலையும் நடைக்கு இடையூறாக உள்ளது. அன்றியும், சிக்கலான செயலாகிய


  1. பலப்படுத்தல்-Reinforcement
  2. தட்டுத்தடுமாறிய-Trial and error.