பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

கல்வி உளவியல் கோட்பாடுகள்


உடற்செயல்கள் இருக்க முடியாது. இக் காரணம்பற்றியே நரம்புகளின் அமைப்பு, அவை செயற்படும் முறை, உணவு செரித்தல், குருதியோட்டம் முதலிய உடலின் செயல்களை உளவியல் பயில்வோரும், உள்ளக்கிளர்ச்சி, சிந்தனை போன்ற உள்ளத்தின் செயல்களை உடலியல் பயில்வோரும் ஆராய்கின்றனர். எனவே, உடலும் உள்ளமும் ஒரே உயிரியின் இரண்டு கூறுகள் என்று தற்கால அறிஞர்கள் முடிவுகட்டியுள்ளனர்.

சிலர் கல்லீரல் பித்த நீரை உண்டாக்குவதைப்போல மூளை எண்ணங்களை உற்பத்தி செய்கின்றது என்று கூறுகின்றனர். மூளை எண்ணங்களை உண்டாக்குவதை எவரும் பார்த்ததில்லை. மூளையிலுள்ள நரம்பணுக்களில் நேரிடும் மாறுதல்களைச் சோதித்து எண்ணங்கள். எங்ஙனம் உற்பத்தியாகின்றன என்று கண்டறிய மேற்கொண்ட முயற்சி பலனற்றதாகிவிட்டது. ஆயினும், எண்ணங்களும் உள்ளக்கிளர்ச்சிகளும் உடற் செயல்களினின்று வேறுபட்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. உண்மையில் எண்ணங்களும் உள்ளக்கிளர்ச்சிகளும் உடலின் எப்பகுதிகளினின்று வருகின்றன என்பதை இன்னும் அறியக்கூடவில்லை. எனவே, உடற்செயல்களைக் கூறும் சோற்களை உளச் செயல்களுக்குப் பயன்படுத்துவது தவறு. [எ-டு] ஓர் எண்ணம் என் மூளையில் உதித்தது என்பது சரி யன்று. எண்ணம் மனத்திற்குட்பட்டதேயன்றி, மூளைக்கன்று. இக்காலத்தில் தனியாளின் நடத்தை வாயிலாக அவனது மனத்தை அறுதியிடுகின்றனர். கல்வி உளவியலில் நமக்கு மிகவும் வேண்டுவது மாணாக்கரின் நடத்தையே. கடந்த சில யாண்டுகளாகக் கல்விக்குப் பயன்படும் தனியாளின் நடத்தையை அனுசரிக்கும் முறையிலேயே கல்வி உள்வியல் கற்கப்பெறுகின்றது. மாணாக்கரின் நடத்தை சீர்திருந்துவதே கல்வியின் சிறந்த கூறு என்பதை நாம் நன்கு அறிவோம். மனம் ஓர் உயிரியில் எங்கனம் பயன்படுகின்றது என்பதை ஆராய்வதே தற்கால ஆராய்ச்சியாக இருந்து வருகின்றது.

இயல்பூக்கக் கொள்கைகள்

தனியாள் என்பது குடிவழியும் சூழ்நிலையும் இயற்றின விளைவு என்பதை மேலே கண்டோம். தனியாளின் ஒழுக்கமும் ஆளுமையும் இயல்பாக, பிறவியிலேயே அமைந்த திறன்களாலும் அவை சூழ்நிலையால் அடையும் மாற்றத்தாலும் வளர்ச்சி பாலும் உண்டாகின்றன என்றும், அவனது நடத்தையின் ஒரு பகுதி இயல்பானது, குடிவழியே வந்தது, கற்றதனால் பெற்றது அன்று என்றும், பிறிதொரு பகுதி முயன்று பெற்றது, கற்றது