பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்கு நிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

173


பாிசில்களும் தண்டனைகளும்

ஊக்கிகள் கற்றவில் பயன்படுகின்றன என்பதை மேலே கண்டோம். இனி, ஊக்கிகளால் எங்ஙனம் மாணாக்கர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்தலாம் என்பதை ஆராய்வோம். குழந்தை வாழும் சூழ்நிலையில் பலவகைத் துலங்கல் வாய்ப்புகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இயற்றி மற்றவற்றை விடுப்பது கல்விக்கு அடிப்படையாகும். முதல்நிலைப் பலன்கள் யாவும் ஊக்கு நிலைகளைத் திருப்தி செய்வதால் ஈர்ப்பைக் [1] குறைக்கின்றன. (எ.டு) பசி ஈர்ப்பு உண்ணுதலால் குறைகின்றது; நீர் வேட்கை ஈர்ப்பு நீர் பருகுவதால் குறைகின்றது. வழிநிலைப் பயன்கள் அல்லது ஈட்டிய பலன்கள் முதல்நிலைப் பயன்களுடன் கொண்டுள்ள தொடர்பினால் வலியுறுகின்றன. பயன் விதியை [2] விதியை தம்பும் கல்வியறிஞர்கள் பயன்களாலேயன்றி கற்றல் நடைபெற முடியாது எனப் பகர்கின்றனர். தண்டனையைப் பற்றியும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், பலர் தண்டனையையும் பலன் என்னும் தலைப்பினுள்ளேயே அடக்கிக் கூறு கின்றனர். காரணம், தண்டனையிலிருந்து தப்புவது பலன் தருவதாகும். என்போலவோ எனின், நோவிலிருந்து தப்புவது பசியிலிருந்து தப்புவதுபோல என்க. கற்றலில் தண்டனையின் பலன்கள்யாவும் நோவிலிருந்து விலகும்நிலை எவ்வாறு அமைக்கப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்தது எனலாம். இதிலிருந்து தண்டனை மூலம் கற்பிக்கும் முறை நல்லதென்று கொள்ளல் தவறு. சில நிலைகளில் தண்டனையும் கற்பிக்கும் வழியாக அமைதல் கூடும் என்பதையே ஈண்டுச் சுட்டுகின்றோம். உலக வாழ்க்கையிலுள்ளது போலவே, பள்ளி வாழ்க்கையிலும் பரிசில்கள், தண்டனைகள் போன்ற வழி நிலை ஊக்கிகள் சிறந்த இடம் பெறுகின்றன.

பரிசில்கள்: உலகில் நன்றாக வேலை செய்பவர்கட்குச் சம்பளம் உயர்த்தப் பெறுகின்றது; அங்ங்னம் செய்யாதவர்கள் வேலையினின்று நீக்கப் பெறுகின்றனர்; அல்லது அபராதம் விதிக்கப் பெறுகின்றது. இந்த உண்மையை அப்படியே வீட்டில் குழந்தையின் பெற்றோர்கள் கையாளுகின்றனர். ‘விசிறி எடுத்துக்கொண்டு வா; கற்கண்டு தருகிறேன்' என்கின்றாள் அன்னை. 'எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பொம்மை வாங்கித் தருவேன்; இல்லாவிட்டால் அடிப்பேன்’ என்கின்றார் தந்தை. வீட்டில் அன்னையும் பிதாவும் கையாளுகிற முறையை


  1. ஈா்ப்பு-Tension
  2. பயன் விதி-The law of effect