பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

175


ஆர்வம் ஆகியவற்றை எழுப்புதலே ஆசிரியரின் நோக்கம். சிலரிடம்தான் இவை அமைகின்றன; இவர்கள் மேலும் மேலும் நூலகத்திலுள்ள பல நூல்களை எடுத்துப் படிப்பர். இவர்கள் பரிசில் கொடுத்தால்தான் படிப்பர் என்பதில்லை. ஆனால், சிலர் பரிசிலை விரும்பிப் படிப்பர்; இவர்களிடம் உண்மையான அறிவாற்றல் இல்லை. பரிசிலை நிறுத்திவிட்டால் இவர்கள் படிப்பதையும் நிறுத்தி விடுவர். பரிசிலில் பற்றுவைத்து சிலர் பொய் சொல்லலாம்; ஏமாற்றும் செயலில் இறங்கலாம். மேலும், பரிசில் வழங்குதல் பரிசில் பெறாதவர்களிடம் பொறாமை போன்ற தீய எண்ணங்களையும் எழுப்புதல் கூடும். பரிசில் பெற்றோன் மீண்டும் ஊக்கம் பெறலாம். ஆனால், பெறாதவர்கள் அடையும் ஏமாற்றத்திற்கு ஒருவனுடைய வெற்றியே ஈடாகாது.

இக்குறையை நீக்கும்பொருட்டு இக்காலத்தில் 'குழுப் பரிசில்கள்' மேற்கொள்ளப் பெறுகின்றன. இத்திட்டத்தில் தனிப்பட்ட மாணாக்கனுக்குப் பரிசில் வழங்கப்பெறுவதில்லை. எல்லோரும் ஒரே அளவு பாராட்டோ, ஒரே அளவு மதிப்பெண்ணோ பெற்றால், அவற்றின் பலன் மதிப்பு மறைகின்றது. குழுவிற்கு நல்கும் பரிசில் ஒத்துழைப்பை வேண்டுகிறது; மக்களாட்சி நிலவும் இக்காலத்தில் இஃது அதிகமாக வேண்டப்படுவதாகும். குழு வேலையில் ஏமாற்றம், பொய், சொந்த ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு இடம் இல்லாது போகின்றது. குழுச் செயல்களில் கூட ஒரு குழுவை மற்றொரு குழுவுடன் போட்டியிடச் செய்து பயன் துய்க்குமாறு நம் பள்ளிப் பரிசில் திட்டங்களை அமைக்கலாம். எனவே, ஆசிரியர்கள் பரிசில் அளிப்பதன் குறைநிறைகளை அறிந்து ஏற்றவாறு அவற்றை ஊக்கிகளாக மேற்கொள்ள வேண்டும். பரிசிலைவிட ஆசிரியரின் பாராட்டு பெரும்பலனை நல்கவல்லது. அது மாணாக்கரிடம் தொற்றுநோய்போல் பரவி அவர்களிடம் ஊக்கத்தை எழுப்பும் என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

தண்டனைகள்: தண்டனைகளும் தண்டனைகளைப்பற்றிய அச்சமும் இன்றும் நம் பள்ளிகளில் ஊக்குநிலைகளாக மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. ஆயினும், அவை வரவரக் குறைந்தே வருகின்றன. அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவார் என்ற கொள்கையின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப் பெறுகின்றன. தண்டனைகளால் அடியிற் காணும் பலன்கள் விளைகின்றன என நம்பப்பெறுகின்றது.

(1) குழந்தைக்கு ஆணையிடம் ஒரு மதிப்பை உண்டாக்குகின்றன.